புன்னகை மன்னன், தி ரெவெனன்ட், லாஸ்ட் இன் ட்ரான்ஸ்லேஷன்
திரைப்படத்தில் ஒவ்வொரு ஃப்ரேமிலும் இருக்கும் காட்சித் துணுக்கும் முக்கியமானவைதான். ஆனால்,அந்தக் காட்சியின் உள்ளுணர்வு அதைக் காட்சிப்படுத்தியிருக்கும் இடம் தான். அந்த இடமே காட்சிக்குண்டான உண்மையான ஆழத்தைத் தருகிறது. லொகேஷன் என்பது திரைப்படத்தை படமாக்கும் படப்பிடிப்புத் தளம் மட்டுமே அல்ல; அது கதையின் உயிர்ப்பை வடிவமைக்கும் மாயப்பின்னணி.
சுவாசிக்கும் உணர்வாக இடம்: சில இடங்கள் உணர்ச்சியை எடுத்துச் சொல்லாமல், பார்வையாளர்களை தாமே உணரச் செய்கின்றன.
தி ரெவெனன்ட் (2015): ஹாலிவுட் படமான இதில் கடும் குளிர் காடுகள், அந்தப் படத்தின் ‘சர்வைவல்’ (உயிர் வாழ்தல்) உணர்வை நம் மனதில் செதுக்கியது போல, கதையின் ஆழமான மனநிலையை இடம் உருவாக்குகிறது.
கதாபாத்திரங்களை வடிவமைக்கும் இடம்: இடத்தின் தன்மை அங்கு வாழும் அல்லது பயணிக்கும் மனிதர்களைப் பிரதிபலிக்கிறது.
இன் டு தி வைல்ட் (2007): அலாஸ்கா வின் வெறிச்சோடிய பரந்த நிலப்பரப்பு, கதாநாயகனின் தனிமை மற்றும் சுதந்திர விருப்பத்துக்கு ஒரு கண்ணாடியாக மாறுகிறது.
இந்திய சினிமா - இடத்தின் கலைநயம்: தமிழ் திரைப்படங்களில் லொகேஷனை ஒரு கதை சொல்லும் பாத்திரமாக மாற் றிய படைப்பாளர்களில் முன்னோடியாக நின்றவர் இயக்குநர் பாரதிராஜா. கடலோரக் கவிதைகள் (1986): இங்கு கடற்கரை ஒரு பின்புலம் மட்டுமல்ல; அதுவே காதல், தனிமை, எதிர்பார்ப்பு, மற்றும் மனித அடக்குமுறைகளிலிருந்து வெளியேறும் ஓட்டம் ஆகிய உணர்ச்சிகளை உள்ளடக்கிய ஓர் இடம். முட்டம் கடற்கரை இன்று வரை பாரதிராஜாவின் காட்சிக் கவிதையின் சின்னமாகவே பேசப்படுகிறது. அந்த ஊதாநீல வானம், மணல்வெளி, கடற்கரையின் நிழல் - எல்லாமே கதாபாத்திரங்களின் மனநிலையைத் தாங்கிய உயிருள்ள பிரதேசமாக உருவெடுக்கின்றன.
புன்னகை மன்னன் (1986): இத்திரைப்படத்தின் மூலம் அதிரப்பள்ளி அருவி காதலின் நினைவுச் சின்னமாகவே மாறியது. ரகுநாத ரெட்டியின் ஒளிப்பதிவில் காதலும், துயரமும் நிறைந்த அந்த அருவிக் காட்சி, தமிழ் சினிமாவின் காட்சிக் குறியீடாக (விஷுவல் ஐடென்டிட்டி) மாறியது. பிற்பகுதியில் ஒரு மனநிலைக் குறியீடாக (மூட் ஏங்கர்) மாறுவதற்கும் இதுவே மிகச் சிறந்த உதாரணம்.
நகரப் பின்புலங்கள் - நகரங்களின் குரல் லாஸ்ட் இன் ட்ரான்ஸ்லேஷன் (2003): டோக்கியோ நகர சாலையில் ஒளிரும் நியான் விளக்குகள் கதாபாத்திரங்களின் தனிமை மற்றும் இடர்பாடுகளுக்கான ஒரு மேடையாகின்றன. விக்ரம் வேதா (2017): இப்படத்தில் சென்னையின் கரடுமுரடான குறுகிய தெருக்கள் மற்றும் மேம்பாலங்களின் கீழ்ப்பகுதிகள் - ஈரமான கான்கிரீட் அமைப்பு (டெக்ஸர்) கதையின் மையமான தார்மீகத் தை (க்ரே மொராலிட்டி) காட்சி ரீதியாக நிறுவுகிறது.
வெறுமையின் மேடை ஹெர் (2013): அதிகப் பரப்பும், வெறுமையும், காலியான நீண்ட தாழ்வாரங்களும் (எம்ப்டி ஹால்வேஸ்) -உள்ளுணர்வை விரிவாக்கும் அமைதியான கட்டிடக்கலை (சைலஸ்ட் ஆர்க்கிடெக்சர்). கோர்ட் (2014): நீதிமன்றத்தில் ஒரு சாதாரண நாளின் வெறுமையைக் காட்சிப்படுத்துவதன் மூலம் அங்கு மனித வாழ்க்கை சுழற்சியே பின்புலமாகிறது. இது இந்திய யதார்த்தவாதத்தின் (இண்டியன் ரியலிசம்) மிகச் சிறந்த, இடத்தை மையமாகக் கொண்ட கதை சொல்லல்.
மனநிலையின் காலநிலை: பின்புலம் என்பது கதாபாத்திரங்களின் காலநிலையாக மாறுகிறது.
தி லைட் ஹவுஸ் (2019): இடமே ஒரு மோதலாக (கான்ஃப்ளிக்ட்) மாறுகிறது. இருண்ட கலங்கரை விளக்கம் மற்றும் சுற்றியுள்ள சூழல், கதாபாத்திரங்களின் மன அழுத்தத்தைப் பிரதிபலிக்கிறது.
தும்பாட் (2018): மழை, சேறு, இருள்- இத்தகைய பின்புலம் கதையின் க்ரீட்மிதாலஜியை தாங்கும் உளவியல் காலநிலையாகிறது (சைகலாஜிகல் க்ளைமேட்).
புராணத்தை உருவாக்கும் நிலப்பரப்பு: இடத்தின் பிரம்மாண்டம் ஒரு புராணத் தன்மையை உருவாக்குகிறது. லார்ட் ஆஃப் தி ரிங்ஸ், பாகுபலி ஆகிய படங்களில் நவீன வாழ்வின் கூறுகளான மின்சார கம்பிகள், செல்ஃபோன் டவர்கள், சுவரொட்டிகள் ஆகிய வற்றை கவனமாகத் தவிர்த்துவிட்டு அதிபிரம்மாண்டமாகக் காட்டப்படும் அரண்மனைகள், மலைகள், அருவிகள், பாறைகள், முழுவதுமே ஒரு புராண புவியியலின் அடிநாதமாக ஒளிர்கிறது.
இயக்கத்தில் உள்ள இடம்: பின்புலம் நகரும்போது, கதையின் வேகமும் பார்வையாளர்களின் இதயத்துடிப்பும் அதிகரிக்கிறது.
ட்ரெயின் டு பூசான் (2016): பின்புலம் நகர்கிறது, கதையும் நகர்கிறது ரயில் என்பது ஒரு அவசர உணர்வைக் கொடுக்கும் லொகேஷன்.
இடத்தின் நிற மொழி: இடத்தின் நிறம் காட்சியின் உணர்ச்சியையும் தொனியையும் (டோன்) தீர்மானிக்கிறது.
சாய்ராட் ( 2016): சோலாபூர் கிராமத்தின் வெப்ப நிறத்தொனியில் (வார்ம் டோன்) காணப்படும் ஏரியும், நிலப்பரப்பும் - காதலின் அப்பாவித்தனத்துக்கு ஒரு காட்சிக் குறியீடாக (விஷுவல் மெடாஃபர்) மாறுகின்றன. பிற்பகுதிக் காட்சிகளில் ஹைதராபாத் நகரின் நெரிசல் மிகுந்த தெருக்களில் உள்ள பல்வேறு வண்ணக் கலவைகள் மேலும் பதட்டத்தையும் சிக்கலையும் புதிய வடிவில் உருவாக்கின. அந்த நகரின் பரபரப்பான வாழ்க்கை, கதாபாத்திரத்தின் கஷ்டப்பாதையை கூர்மையாகக் காட்டுகிறது.
இடம் என்பது காட்சியின் இதயம்: சிறந்த ஒளிப்பதிவு என்பது கேமராவில் எங்கே ஃப்ரேம் வைக்க வேண்டும் என்பதைப் பற்றியது. இடம் (லொகேஷன்), உணர்வை நிர்ணயிக்கிறது. கதைக்கு முழுவடிவம் தருகிறது. ஒளி–நிழல் தரத்தை மேம்படுத்துகிறது. நிறத்தையும் ஆழத்தையும் தீர்மானிக்கிறது. கதாபாத்திரத்தின் மனநிலையை பிரதிபலிக்கிறது.
(புதன்தோறும் ஒளி காட்டுவோம்)
- cjrdop@gmail.com
முந்தைய அத்தியாயம்: காட்சி அமைப்பு - வெளியின் மவுன மொழி | ஒளி என்பது வெளிச்சமல்ல 06