தமிழ் சினிமா

‘ஜனநாயகன்’ ரிலீஸ் எதிரொலி: தள்ளிப்போகும் ஜி.வி.பிரகாஷ், லோகேஷ் படங்கள்

ப்ரியா

சென்னை: தமிழக முதல்வர் விஜய் நடிப்பில், அவரது இறுதித் திரைப்படமாக வெளியாக உள்ள ‘ஜனநாயகன்’ படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, கோலிவுட்டில் அடுத்தடுத்து முக்கியத் திரைப்படங்களின் ரிலீஸ் தேதிகள் தள்ளிவைக்கப்பட்டுள்ளன. 

எச்.வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படம் சென்சார் சிக்கல்கள் மற்றும் இணைய கசிவு போன்ற தடைகளைக் கடந்து, வரும் ஜூலை 23 அன்று உலகம் முழுவதும் வெளியாகிறது. இந்த திடீர் அறிவிப்பால், அதிக திரைகளை ‘ஜனநாயகன்’ ஆக்கிரமிக்கும் என்பதால், அந்த தேதியில் வெளியாக திட்டமிடப்பட்டிருந்த ஜி.வி.பிரகாஷின் 'இம்மார்டல்' திரைப்படம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

மாரியப்பன் சின்னா இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் குமார், கயாடு லோஹர் நடிப்பில் ஜூலை 23 அன்று வெளியாகவிருந்த 'இம்மார்டல்' திரைப்படம் தற்போது செப்டம்பர் 4-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. சாம் சி.எஸ் இசையமைப்பில் ஃபேண்டஸி த்ரில்லராக உருவாகியுள்ள இப்படம் தள்ளிப்போனது குறித்து ஜி.வி.பிரகாஷ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், “தளபதி வந்தா தள்ளி போய்தானே ஆகணும், அதுவும் ஒன் லாஸ்ட் டைம்... உங்கள் ஆதரவோடு செப்டம்பர் 4-ல் ‘இம்மார்டல்’ திரையரங்குகளில் வெளியாகும்" எனப் பதிவிட்டுள்ளார்.

அதே போல இயக்குநர் லோகேஷ் கனகராஜ் நடிகராக அறிமுகமாகும் 'டிசி' திரைப்படம் முதலில் ஜூலை 31 அன்று வெளியாகத் திட்டமிடப்பட்டிருந்தது. அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில், வாமிகா கபி கதாநாயகியாக நடித்துள்ள இந்த ஆக்‌ஷன் காதல் திரைப்படத்தின் புதிய தேதியை சன் பிக்சர்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. அதன்படி, இத்திரைப்படம் வரும் ஆகஸ்ட் 7-ஆம் தேதி தியேட்டர்களில் வெளியாகிறது.

முதல்வர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்குநராக அறிமுகமாகும் 'சிக்மா' திரைப்படம் ஜூலை 31 அன்று வெளியாக உள்ளது. தற்போது 'சிக்மா' திரைப்படத்தின் வெளியீடும் தள்ளிப்போக வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும், இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை.

SCROLL FOR NEXT