இளையராஜாவின் 50 ஆண்டு கால இசைப் பயணத்தைக் கொண்டாடும் வகையில் வட அமெரிக்காவில் பிரம்மாண்ட இசை சுற்றுப்பயணத்தை அவர் மேற்கொள்கிறார். வரும் ஆகஸ்ட் மாதம் அமெரிக்கா மற்றும் கனடாவில் 10-க்கும் மேற்பட்ட நகரங்களில் அவர் நேரடியாக இசை நிகழ்ச்சிகளை நடத்த இருக்கிறார்.
லாஸ் ஏஞ்சல்ஸிலுள்ள டால்பி திரையரங்கம் மற்றும் பே ஏரியாவில் உள்ள ஓக்லாண்ட் அரேனா போன்ற முக்கிய மேடைகளில் அவரது இசை ஒலிக்க உள்ளது. ‘மியூசிக் ஃபார் ஹீலிங்’ என்று பெயரிடப்பட்டுள்ள இந்த இசை விழாவை சரிகமா லைவ், கேட்ச் த ரிதம்ஸ், மெர்குரி நிறுவனங்கள் இணைந்து நடத்துகின்றன.
அமெரிக்காவின் நியூ ஜெர்ஸி, வாஷிங்டன் டி.சி, சிகாகோ, அட்லாண்டா, டாலாஸ், ஹூஸ்டன், சியாட்டில், சான் ஜோசே, டொரான்டோ மற்றும் மான்ட்ரியல் ஆகிய பகுதிகளில் இசை நிகழ்ச்சி நடைபெற இருக்கிறது. இந்த நிகழ்ச்சியின் மூலம் கிடைக்கும் வருவாயின் ஒரு பகுதி, இசையின் மூலம் மனநலம் மற்றும் நல வாழ்வை மேம்படுத்தும் பணிகளுக்காக வழங்கப்படும்.
“இளையராஜாவின் இசை, எல்லைகள், தலைமுறைகளைத் தாண்டி சென்றுள்ளது. இந்த வரலாற்றுச் சுற்றுப் பயணத்தை வட அமெரிக்காவுக்குக் கொண்டு வருவது எங்களுக்கு பெருமையாகும்” என இந்நிகழ்ச்சியை நடத்துபவர்கள் தெரிவித்துள்ளனர்.