கதைக் களம் என்று ஒன்று அமைந்துவிட்டால், அதற்கு எந்த ஸ்டாரும் தேவையில்லை என்று இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் பேசினார்.
ஏ. எல்.விஜய் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘காதல் ரீசெட் ரிப்பீட்’. ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ள இப்படத்தில் மதும்கேஷ், ஜியா சங்கர், அர்ஜுன் அசோகன், எம்.எஸ்.பாஸ்கர், ஜெயபிரகாஷ், விஜி சந்திரசேகர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இதன் ஓளிப்பதிவாளராக அரவிந்த் கிருஷ்ணா, எடிட்டராக ஆண்டனி ஆகியோர் பணிபுரிந்துள்ளனர்.
மார்ச் 6-ம் தேதி வெளியாகவுள்ள இப்படத்தின் அறிமுக விழா சென்னையில் நடைபெற்றது. இதில் படக்குழுவினருடன் சிறப்பு விருந்தினராக பாலாவும் கலந்து கொண்டார். இந்த விழாவில் ஹாரிஸ் ஜெயராஜ் பேசும் போது, “1999-ம் ஆண்டில் இளம் இயக்குநராக இருந்த கௌதம் மேனனை சந்தித்தேன். கேமரா மேன் ஆர் டி ராஜசேகர் மூலமாக விளம்பர படத்திற்காக அவர் என்னை சந்தித்தார்.
அதன் பிறகு 2000-ம் ஆண்டில் 'மின்னலே' படத்தின் பணிகள் தொடங்கியது. அப்போது அந்தப் படத்தில் கதாநாயகன் மாதவன் புதிது. அப்போது 'அலைபாயுதே' படம் வெளியாகவில்லை. ரீமா சென் புது கதாநாயகி. அந்தப் படத்தில் டைரக்டர் புதுசு, கேமரா மேன் புதுசு, நானும் புதுசு, அந்தப் படத்திற்கு தயாரிப்பாளர் முரளி மனோகர் தான் ஸ்டார்.
அவர் 'ஜீன்ஸ்' படத்தை தயாரித்திருந்தார். அந்தப் படத்தில் பணியாற்றும்போது பாடலாசிரியர்கள் மீது எங்களுக்கு நம்பிக்கை கிடையாது. அப்போது தாமரை என்ற புதிய பாடலாசிரியரையும் சேர்த்துக் கொண்டோம். இதன் பிறகு அந்தப் படத்தின் பணிகள் நிறைவடைந்து படம் வெளியானது. 'மின்னலே' திரைப்படம் தற்போது ரீ ரிலீசும் ஆனது.
இதை நான் ஏன் இப்போது சொல்கிறேன் என்றால் கதைக் களம் என்று ஒன்று அமைந்துவிட்டால், அதற்கு எந்த ஸ்டாரும் தேவையில்லை. அது எல்லோரிடமிருந்தும் நல்ல வேலையை வாங்கி விடும். அது எல்லாரையும் பெரிய டெக்னீஷியன் ஆக்கிவிடும். சாதாரண நடிகர்களை பெரிய நடிகராக காண்பித்து விடும். பெரிய ஆர்டிஸ்ட், பெரிய டெக்னீசியன்ஸ் இணைந்து ஒரு மொக்கை கதையில் பணியாற்றினால்.. எல்லாம் காணாமல் போய்விடும். கதை என்பது ஓர் அமைப்பு.
ஒவ்வொரு படத்துக்கும் அந்த அமைப்பு மாறுகிறது. இதை நான் பார்த்திருக்கிறேன். எல்லாம் பிரம்மாண்டமான கலைஞர்களாக இருப்பார்கள். ஆனால் அதில் ஓர் அமைப்பு இல்லை என்றால் உட்காராது. இதை நான் தொடர்ந்து பார்ப்பேன் அதன் பிறகு இதனை எது வழி நடத்துகிறது என்று ஆராய்வேன். தைரியமான நம்பிக்கைதான் இதை வழிநடத்துகிறது என உணர்ந்தேன்.
இது ஜெயிக்கும் என நம்பி ஒரு விஷயத்தை தொடங்குகிறோம் அது..அனைவரையும் ஒன்றிணைத்து ரசிகர்களையும் திரையரங்கத்திற்குள் இழுத்து வந்துவிடும். இதை ஆங்கிலத்தில் பாசிட்டிவிட்டி என சொல்வார்கள். 'மின்னலே' படத்தில் புதிய பாடகர்களையும் அறிமுகப்படுத்தினேன். நான் இதுவரை 64 புதிய பாடகர்களை அறிமுகப்படுத்தி இருக்கிறேன். 65 ஆவது பாடகி தான் காயத்ரி ராஜா.
அனைவரும் நன்றாக இருப்பதில் எனக்கு சந்தோஷம். 12 புதிய கதாநாயகர்களுக்கு இசையமைத்திருக்கிறேன். இது எனக்கு பெருமையாக இருக்கிறது. தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கிலும் அவர்கள் பிரபலமடைவதற்கு இசை உதவி செய்து இருக்கிறது. ஒரு கதையும், இசையும், நல்ல வரிகளும் சேரும்போது மிகப்பெரிய அளவில் சிவப்புக் கம்பளத்தை விரிக்கிறது.
இயக்குநர் விஜய் இசையை மனதில் வைத்து தான் இந்த கதையை எழுதி இருக்கிறார். அதற்கேற்ப மதன் கார்க்கியும் கடினமாக உழைத்து இருக்கிறார். ஒவ்வொரு பாடலுக்கும் பல மாதங்களை செலவழித்திருக்கிறோம். இந்தப் படத்தில் மலையாள இயக்குநர் வினீத்தை பாடகராக அறிமுகப்படுத்தி இருக்கிறோம். தரமான பொழுதுபோக்கு படத்தை எதிர்பார்க்கும் ரசிகர்களுக்கு இந்த படம் ஒரு சிறந்த பொழுதுபோக்கு சித்திரமாக இருக்கும்” என்று பேசினார் ஹாரிஸ் ஜெயராஜ்.