சென்னை: அறிமுக இயக்குநர் ஆகாஷ் பாஸ்கரன் இயக்கத்தில், அதர்வா முரளி முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ள 'இதயம் முரளி' திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியிடப்பட்டுள்ளது.
ஒருதலைக் காதலை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இப்படத்தில், அதர்வாவுடன் ப்ரீத்தி முகுந்தன் கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும், முக்கியக் கதாபாத்திரத்தில் மலையாள நடிகர் ஃபகத் ஃபாசில் நடித்துள்ளார். இவர்களுடன் கயடு லோஹர், நட்டி நடராஜன், நிஹாரிகா, சுதாகர், ட்ராவிட், ரக்ஷன், தமன், ராம்கி உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.
ட்ரெய்லர் எப்படி? - தனது காதலைச் சொல்ல முடியாமல் தவிக்கும் ஒரு இளைஞனாக அதர்வா நடித்துள்ளார். சொல்லப்படாத காதல் ஒரு மனிதனின் வாழ்க்கையையும், அவனது முதிர்ச்சியையும் எப்படி மாற்றியமைக்கிறது என்பதை உணர்வுபூர்வமாக விவரிக்கிறது ட்ரெய்லர்.
இரைச்சல்கள் எதுவும் இல்லாத மென்மையான ஒரு படமாக இது இருக்கும் என்பதை ட்ரெய்லரின் மூலம் தெரிந்து கொள்ள முடிகிறது. அதற்கு ஏற்றபடி தமனும் அடக்கி வாசித்திருக்கிறார். ஃபஹத் ஃபாசில் வெறும் பெயரளவில் கேமியோவாக இல்லாமல் கதையில் முக்கியத்துவம் கொண்ட ஒரு கதாபாத்திரமாக இருப்பார் என்று நம்பலாம். இப்படம் வரும் ஜூலை 10 அன்று வெளியாகிறது.