நான் தியாகராஜன் குமாரராஜாவின் ரசிகன் என்று ராஜ் பி ஷெட்டி தெரிவித்துள்ளார்.
தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன் நடித்து வரும் படம் ‘பாக்கெட் நாவல்’. இதில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதன் மூலம் தமிழில் அறிமுகமாகிறார் ராஜ் பி ஷெட்டி. கன்னடத்தில் முன்னணி நடிகர் மற்றும் இயக்குநராக வலம் வருபவர் ராஜ் பி ஷெட்டி.
’பாக்கெட் நாவல்’ படம் குறித்து ராஜ் பி ஷெட்டி, “நான் ஒரு படத்தில் நடிக்கும் போதெல்லாம், மக்கள் நான்தான் வில்லன் என்று நினைத்துக் கொள்வார்கள். ’பாக்கெட் நாவல்’ படத்தில் நான் வில்லன் இல்லை. ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறேன். தியாகராஜன் குமாரராஜாவின் ரசிகன் நான். அவரது முதல் படமான ’ஆரண்ய காண்டம்’ முதல் ’சூப்பர் டீலக்ஸ்’ வரை, அவரது படைப்புகளால் மயங்கிப் போனேன். எனக்கு வாய்ப்பு கிடைக்கும் ஒவ்வொரு முறையும் அவருடன் இணைந்து பணியாற்ற விரும்புகிறேன்.
விஜய் சேதுபதி மற்றும் கிஷோர் போன்ற நடிகர்களைச் சுற்றி இருந்து, அவர்கள் எவ்வாறு செயல்படுகிறார்கள் என்பதைப் பார்ப்பது என்னை உற்சாகப்படுத்துகிறது. இளையராஜா இந்தப் படத்திற்கு இசையமைக்கிறார் என்பது சந்தோஷமாக இருக்கிறது. நான் நடிக்கும் ஒரு படத்தில், நான் நடிக்கும் ஒரு காட்சிக்கு இளையராஜா இசையமைக்கிறார் என்பது மிகவும் மகிழ்வை தருகிறது” என்று தெரிவித்துள்ளார் ராஜ் பி ஷெட்டி.