திரைத்துறையில் பொருளாதாரச் சவால்களை எதிர்கொள்வது குறித்த உரையாடலுக்காக திரைத்துறையினருக்கு நடிகரும் எம்.பியுமான கமல்ஹாசன் அழைப்பு விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
மேற்காசியாவில் நீடித்து வரும் போரினால் உலகம் முழுவதும் நெருக்கடி நிலைமை ஏற்பட்டுள்ளது. இதன் தாக்கத்தை இந்தியாவும் எதிர்கொண்டு வருகிறது. அதிகரித்து வரும் தயாரிப்புச் செலவுகள், நிச்சயமற்ற வருமானம் என இந்தியத் திரைத்துறை ஏற்கெனவே தத்தளித்துக் கொண்டிருக்கையில் இப்படியொரு சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. பொருளாதார மந்த நிலையும், பண வீக்கமும், வேலை இழப்புகளும் உருவாக்கும் அழுத்தங்கள் காரணமாக, வரவிருக்கும் மாதங்களில் மக்கள், பொழுதுபோக்குக்காகச் செலவிடும் விதங்களும் மாறக்கூடும். இந்தச் சுமை ஒட்டு மொத்தத் திரையுலகின் மீது விழும்.
சினிமா தொடர்ந்து வளர வேண்டுமானால், செலவழிக்கப்படும் ஒவ்வொரு ரூபாயும் திரைப்படத்துக்கு முறையாகப் பயன்படுத்தப்படுவதை உறுதி செய்ய வேண்டும்; வெறும் பிரம்மாண்டமான தோற்றத்துக்காக மட்டும் அது இருக்கக்கூடாது.
நாம் செய்ய வேண்டிய உண்மையான சீர்திருத்தங்கள் வேறு இடங்களில் உள்ளது. மோசமான திட்டமிடல், தவிர்க்க சாத்தியமுள்ள வீணடிப்புகள், ஆரவாரமான ஆடம்பரங்கள், தேவையற்ற வெளிநாட்டுப் பயணங்கள், தயாரிப்புத் தாமதங்கள் மற்றும் செலவு செய்வதற்கும் அதன் நோக்கத்துக்கு இடையே அதிகரித்து வரும் இடைவெளி ஆகியவற்றில்தான் சீர்திருத்தங்கள் தேவை.
இந்தியத் திரைப்படத்துறை முழுவதும் உள்ள சிந்தனையாளர்கள் ஒன்றிணைவதற்கான சரியான தருணம் இதுவென நம்புகிறேன். வரவிருக்கும் பொருளாதாரச் சவால்களை நாம் எவ்வாறு கூட்டு முயற்சியுடன் எதிர்கொள்வது என்பது குறித்த விரிவான விவாதத்துக்காக தயாரிப்பாளர்கள், நடிகர்கள், இயக்குநர்கள், தொழிற்சங்கங்கள், ஸ்டூடியோக்கள், திரையரங்கு உரிமையாளர்கள், விநியோகஸ்தர்கள், ஓடிடி தளங்கள் மற்றும் கூட்டமைப்புகளுக்கு இடையிலான மனம் திறந்த உரையாடலுக்கு அழைப்பு விடுக்கிறேன்.
ஆடம்பரமாகச் செய்யப்படுவதுதான் பிரமாண்டம் என தவறாகப் புரிந்து கொள்ளப்படுகிறது. ஆனால் நமது மிகச்சிறந்த திரைப்படங்கள், ஆடம்பரத்தால் ஆனவை அல்ல. மாறாக தெளிவான திட்டமிடல், நேர்த்தியான செயலாக்கம் மற்றும் உறுதியான நம்பிக்கையுடனே அவை உருவாக்கப்பட்டன.
உலக அளவில் நிச்சயமற்ற சூழ்நிலை நிலவும் காலத்தில் ஒவ்வொரு துறையும் தொலைநோக்குப் பார்வையுடனும் கட்டுப்பாட்டுடனும் செயல்பட வேண்டும் என்பதை, பொறுப்பான நுகர்வு மற்றும் கூட்டு ஒழுக்கத்துக்கான தேசிய அளவிலான அழைப்பு நமக்கு சரியான நேரத்தில் நினைவூட்டுகிறது. இந்தியத் திரைப்படத்துறையும் இந்தச் சூழலுக்கு ஏற்ப தன் பொறுப்பை உணர்ந்து செயல்பட வேண்டும்.
சினிமா என்பது வெறும் பொழுதுபோக்கையும் தாண்டிய பொறுப்புகளைக் கொண்டுள்ளது. இந்தத் துறையிலிருந்து அதிகம் பெற்றுக் கொண்டவர்கள் தான் முதலில் முன்மாதிரியாகத் திகழ வேண்டும். இன்று சினிமாவின் பொருளாதாரத்தை நாம் பாதுகாத்தால், சினிமாவின் எதிர்காலத்தை நாளை பாதுகாக்க முடியும். இவ்வாறு கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.