இசையமைப்பாளராக அறிமுகமான ஹிப் ஹாப் ஆதி, கடந்த 2017-ம் ஆண்டு இயக்கி நடித்த படம், ‘மீசைய முறுக்கு’. இந்தப் படம் வரவேற்பைப் பெற்றதை அடுத்து, இதன் அடுத்த பாகம் உருவாகியுள்ளது. ஹிப் ஹாப் ஆதி இயக்கி, ஹீரோவாக நடித்துள்ள இப்படத்தில், சைத்ரா ஆச்சர், கேதிகா ஷர்மா, ரம்யா ரங்கநாதன் ஆகியோர் கதாநாயகிகளாக நடித்துள்ளனர்.
மேலும் ஹர்ஷத் கான், கருணாஸ், நாசர், ஆடுகளம் நரேன், கருணாகரன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். அவ்னி மூவீஸ் மற்றும் பென்ஸ் மீடியா சார்பில் குஷ்பு சுந்தர், ஏ.சி.எஸ். அருண்குமார் தயாரித்துள்ள இப்படம் செப்.25-ல் வெளியாகிறது.
இது பற்றி ஹிப்ஹாப் தமிழா ஆதி, “ஒரு கனவாகத் தொடங்கியது, இன்று கோடிக்கணக்கான மக்களின் உணர்வாக மாறியுள்ளது. அந்த மாயா ஜாலத்தை மீண்டும் ஒரு முறை ‘மீசைய முறுக்கு 2’ மூலம் அனுபவிக்க வேண்டிய நேரம் வந்து விட்டது” என்று தெரிவித்துள்ளார்.
ஏற்கெனவே வெளியாகியுள்ள இப்படத்தின், ‘பப்பாளி பழமே’, ‘கோயிந்தம்மா’, ‘அடி போடி’ உள்ளிட்ட பாடல்கள் ஹிட்டான நிலையில், “தோற்பேனா... ஜெயிப்பேனா’ங்கிறது முக்கியமில்லை. கடைசி வரைக்கும் முயற்சி பண்ணுவேன்” என்கிற வசனத்துடன் வெளியாகியுள்ள ரிலீஸ் தேதி அறிவிப்பு டீஸர் வரவேற்பைப் பெற்றுள்ளது.