தமிழ் சினிமா

ஹிப் ஹாப் ஆதியின் ‘மீசைய முறுக்கு 2’ அதிகாரபூர்வ அறிவிப்பு

ஸ்டார்க்கர்

ஹிப் ஹாப் ஆதி இயக்கி நடித்து வரும் ‘மீசைய முறுக்கு 2’ படத்தினை அதிகாரபூர்வமாக அறிவித்திருக்கிறார்கள்.

சுந்தர்.சி தயாரிப்பில் ஹிப் ஹாப் ஆதி புதிய படமொன்றை இயக்கி நாயகனாக நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு சென்னையைச் சுற்றியுள்ள பகுதிகளில் நடைபெற்று வந்தது. தற்போது மலேசியாவில் நடைபெற்ற தனது இசை நிகழ்ச்சியில், இப்படம் ‘மீசைய முறுக்கு 2’ என்று அறிவித்துள்ளார் ஹிப் ஹாப் ஆதி.

’மீசைய முறுக்கு 2’ குறித்து ஹிப் ஹாப் ஆதி, “’மீசைய முறுக்கு’ முதல் பாகம் ஆதி மற்றும் ஜீவா இரண்டு நண்பர்கள் குறித்த கதையாகும். அதே போல் ‘மீசைய முறுக்கு 2’ படமும் இரண்டு நண்பர்கள் குறித்த கதை தான். அதில் நானும், ஹர்சத் கானும் இணைந்து நடித்துள்ளோம்” என்று தெரிவித்துள்ளார். இப்படம் கோடை விடுமுறைக்கு வெளியாகும் என தெரிகிறது. இதன் இறுதிகட்டப் படப்பிடிப்பு விரைவில் துவங்கவுள்ளது.

‘மீசைய முறுக்கு’ படத்தின் மூலம் இயக்குநராகவும், நடிகராகவும் அறிமுகமானவர் ஹிப் ஹாப் ஆதி. இப்படம் மாபெரும் வரவேற்பைப் பெற்றது. இதில் ஆதிக்கு அப்பாவாக விவேக் நடித்திருந்தார். இப்படத்தின் காட்சியமைப்புகள், பாடல்கள் என அனைத்துமே இளைஞர்களால் கொண்டாடப்பட்டது நினைவுக் கூரத்தக்கது.

SCROLL FOR NEXT