தமிழ் சினிமா

சாய் அபயங்கரை கேலி செய்தாரா சந்தோஷ் நாராயணன்? - சர்ச்சையும் பின்னணியும்

ப்ரியா

சென்னை: இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் மற்றும் பாடகர் மன்னார் முத்து இருவரும் இணைந்து சமீபத்தில் 'மன்னாரு' என்ற பாடலை வெளியிட்டிருந்தனர். இப்பாடல் சமூக வலைதளங்களில் நல்ல வரவேற்பைப் பெற்று வரும் நிலையில், சந்தோஷ் நாராயணன் புதன்கிழமை அன்று தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்த வீடியோவில், மன்னார் முத்துவிடம் பேசும் சந்தோஷ் நாராயணன், ‘மன்னாரு’ பாடல் பாடல் ஹிட் ஆகிவிட்டதால் அதன் ‘அன்ப்ளக்டு’ பதிப்பை உருவாக்கப்போவதாக கேலியாக கூறுகிறார். தொடர்ந்து, இப்பாடலின் ‘ஒப்பாரி’ பதிப்பு என்று குறிப்பிட்டு ஒரு மெட்டை அவர் இசைத்துக் காட்டுகிறார்.

இந்த வீடியோ வெளியானதைத் தொடர்ந்து, சமூக வலைதளங்களில் சர்ச்சை வெடித்தது. பாடல்கள் ஹிட்டான பிறகு அதன் அன்ப்ளக்டு பதிப்புகளைப் பதிவிடும் இளம் இசையமைப்பாளர் சாய் அபயங்கரை மறைமுகமாகக் கேலி செய்யவே சந்தோஷ் நாராயணன் இந்த வீடியோவைப் பதிவிட்டுள்ளார் என நெட்டிசன்கள் கருத்து தெரிவிக்கத் தொடங்கினர். 24 மணி நேரத்திற்கும் மேலாக இது தொடர்பாகப் பல்வேறு விவாதங்களும், எதிர்மறை விமரிசனங்களும் இணையத்தில் தீவிரமடைந்தன.

இந்த சர்ச்சைக்குப் பதிலளிக்கும் வகையில் சந்தோஷ் நாராயணன் அந்தப் பதிவின் கமெண்ட் பகுதியில் விளக்கம் அளித்துள்ளார். "இங்கு கூடியுள்ள அனைவருக்கும் தெரிவிப்பது என்னவென்றால், அன்ப்ளக்டு பதிப்பு ஒன்றை உருவாக்க முயலும் எனது சொந்த முயற்சியை நானே நகைச்சுவையாகக் கேலி செய்து கொண்ட சுய-பகடி வீடியோ தான் அது. இது சாய் அபயங்கரையோ அல்லது வேறு யாரையோ இலக்கு வைத்துப் பதிவிடப்பட்டது அல்ல. எனக்கு சாயின் இசை பிடிக்கும். அவருக்கு என் ஆதரவு என்றும் உண்டு. மேலும், நான் யாரையாவது சுட்டிக்காட்ட விரும்பினால் அவர்களின் பெயரைக் குறிப்பிட்டே வெளிப்படையாகப் பேசுவேன்" எனத் தெளிவுபடுத்தியுள்ளார்.

அந்த பதிவில் சிரிக்கும் எமோஜியை கமெண்ட் செய்திருந்த இசையமைப்பாளர் ஷான் ரோல்டனையும் நெட்டிசன்கள் விட்டுவைக்கவில்லை. இது தொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் விளக்கமளித்துள்ள அவர் “நான் வழக்கமாக இணையக் கருத்துகளைப் படிப்பதில்லை, ஆனால் பலர் என்னை விமர்சனங்களுடன் டேக் செய்ததால் விளக்கம் அளிக்கிறேன். சந்தோஷை எனக்கு பல வருடங்களாகத் தெரியும், இது வெறும் ஜாலியான உரையாடலே தவிர இதில் எந்த வன்மமும் இல்லை. கலைஞர்களான எங்களுக்குள் கருத்து வேறுபாடுகள் இருக்கலாம், ஆனால் வெறுப்பு இல்லை. அனைவரும் இதை ஒரு ஜாலியான நிகழ்வாக எடுத்துக்கொண்டு அமைதி காக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.

SCROLL FOR NEXT