தமிழ் சினிமா

‘பாக்கெட் நாவல்’ படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் இசை

ப்ரியா

தியாகராஜன் குமாரராஜாவின் இயக்கத்தில் உருவாகி வரும் ‘பாக்கெட் நாவல்’ படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்க இருப்பதைப் படக்குழு உறுதி செய்துள்ளது.

படத்தின் புதிய இசையமைப்பாளர் குறித்து டைலர் டர்டன் அண்ட் கினோ ஃபிஸ்ட் தயாரிப்பு நிறுவனம் அதன் எக்ஸ் தள பக்கத்தில் தகவல் பகிர்ந்துள்ளது. அதில், ‘இது அதிகாரபூர்வமானது. தியாகராஜன் குமாரராஜாவின் பாக்கெட் நாவல் படத்தில் ஜி.வி.பிரகாஷ் இணைந்துள்ளார்’ எனத் தெரிவித்துள்ளது.

இத்துடன், இனி வதந்திகளுக்கு வேலை இல்லை. இது அதிகாரபூர்வமானது என்ற வாசகங்களுடன், ‘என் காட்டுல மழை வருது...’ என்ற பாடலுக்கு ஜி.வி.பிரகாஷ் ஆடுவது போன்ற வீடியோ ஒன்றையும் வெளியிட்டுள்ளது.

'சூப்பர் டீலக்ஸ்' படத்துக்குப் பிறகு, தியாகராஜன் குமாரராஜா - விஜய் சேதுபதி மீண்டும் இணைந்து பணியாற்றும் படம் ‘பாக்கெட் நாவல்’.

இந்தப் படத்தில், விஜய் சேதுபதியுடன் கன்னட நடிகர் ராஜ் பி ஷெட்டி, மாளவிகா மோகனன் மற்றும் கிஷோர் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இப்படத்தின் மூலம் கன்னடத் திரையுலகின் முன்னணி நடிகரான ராஜ் பி ஷெட்டி தமிழில் அறிமுகமாக இருக்கிறார்.

முதலில் ‘பாக்கெட் நாவல்’ படத்துக்கு இளையராஜா இசையமைக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டது. சமீபத்தில் படத்தின் இயக்குநர் தியாகராஜான் குமாரராஜாவுக்கும், இளையராஜாவுக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் படத்துக்கு இசையமைக்கும் பணியில் இருந்து இளையராஜா விலகி இருப்பதாக கூறப்பட்டது.

அவருக்கு பதிலாக ஜி.வி.பிரகாஷ் குமார் படத்துக்கு இசையமைக்க இருப்பதாக தகவல் வெளியானது. அப்போது, இயக்குநரோ, படக்குழுவோ அதனை உறுதிப்படுத்தி இருக்கவில்லை.

‘மாடர்ன் லவ் சென்னை’ வெப் தொடரில் தியாகராஜன் குமாரராஜாவும் இளையராஜாவும் இணைந்து பணியாற்றி இருந்தனர். தியாகராஜன் குமாரராஜா இயக்கிய 'நினைவோ ஒரு பறவை' என்ற எபிசோடுக்கு இளையராஜா இசையமைத்திருந்தார். டைலர் டர்டன் அண்ட் கினோ ஃபிஸ்ட் நிறுவனத்தின் கீழ் தியாகராஜன் குமாரராஜாவே இந்தப் படத்தைத் தயாரிக்கிறார்.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT