தமிழ் சினிமா

‘குட் பேட் அக்லி’ பாடல்கள் - இளையராஜா தொடர்ந்த வழக்கு முடித்து வைப்பு

ஆர்.பாலசரவணக்குமார்

சென்னை: ‘குட் பேட் அக்லி’ படத்தில் இளையராஜாவின் பாடல்களை பயன்படுத்த மாட்டோம் என மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் உறுதி அளித்ததால் வழக்கை முடித்து வைத்துள்ளது சென்னை உயர் நீதிமன்றம்.

நடிகர் அஜித் குமார் நடிப்பில் வெளியான ‘குட் பேட் அக்லி’ திரைப்படத்தில், தன் அனுமதியில்லாமல், ‘இளமை இதோ இதோ’, ‘ஒத்த ரூபாயும் தாரேன்’, ‘என் ஜோடி மஞ்ச குருவி’ ஆகிய பாடல்களை பயன்படுத்தி உள்ளதாக கூறி, இசையமைப்பாளர் இளையராஜா சார்பில் தொடரப்பட்ட வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், ‘குட் பேட் அக்லி’ படத்தில் இளையராஜாவின் பாடல்களை பயன்படுத்த இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டது.

இந்தத் தடையை நீக்கக் கோரி மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் மனுத் தாக்கல் செய்திருந்தது. ‘குட் பேட் அக்லி’ திரைப்படத்தில் இடம்பெற்ற பாடல்களின் உரிமையை, சோனி நிறுவனத்திடம் இருந்து பெற்று பயன்படுத்தியதாகவும், தற்போது இளையராஜா பாடல்களை ‘குட் பேட் அக்லி’ திரைப்படத்தில் இருந்து நீக்கி இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.

இந்த மனு நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி முன்பு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தரப்பில், இளையராஜாவின் பாடல்களை நாங்கள் பயன்படுத்த மாட்டோம் என உறுதி அளித்தனர். இதைப் பதிவு செய்து கொண்ட நீதிபதி வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டுள்ளார்.

SCROLL FOR NEXT