கெளதம் ராம் கார்த்திக் நடித்துள்ள படத்துக்கு ‘ப்ளடி பாலிடிக்ஸ்’ எனப் பெயரிடப்பட்டு ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டீஸர் வெளியிடப்பட்டுள்ளது.
’டாடா’ இயக்குநர் கணேஷ் கே.பாபு தயாரிப்பில் கெளதம் ராம் கார்த்திக் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு தொடங்கி நடைபெற்று வருகிறது. இதற்கு பெயரிடப்படாமல் இருந்தது. தற்போது இப்படத்துக்கு ‘ப்ளடி பாலிடிக்ஸ்’ என்று பெயரிடப்பட்டு ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் டீஸரை வெளியிட்டுள்ளது படக்குழு.
இப்படத்தினை ராஜுமுருகனிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்த தீனா ராகவன் இயக்கியுள்ளார். இதற்கு ஒளிப்பதிவாளராக பிரதீப் காளிராஜா, இசையமைப்பாளராக சாம் சி.எஸ் ஆகியோர் பணிபுரிந்துள்ளனர். இதில் அஞ்சனா நேத்ருன், செல்வராகவன், ரோபி, பி.வாசு, வெங்கடேஷ், மாறன், இந்துமதி, ஆதித்யா கதிர், பாக்கியம் சங்கர் உள்ளிட்ட பலர் கெளதம் ராம் கார்த்திக் உடன் நடித்துள்ளனர்.
வலுவான அரசியல் பின்னணி கொண்ட படமாக இருக்கும் என்பது ‘ப்ளடி பாலிடிக்ஸ்’ டீஸர் மூலம் உறுதியாகிறது. ஒரு கொடிக்கம்பத்தின் அர்த்தமும் அதன் அரசியல் அடையாளமும் குறித்து அவர்கள் பேசும் இந்த உரையாடல், சி.என்.அண்ணாதுரை முதல் நடிகர் விஜய் வரை உள்ள அரசியல் குறிப்புகளை கொண்டுள்ளதாக இருக்கிறது. இப்படத்தின் வசனங்களை இயக்குநர் ராஜுமுருகன் எழுதியிருக்கிறார்.