காலங்கள் மாறலாம்; தொழில்நுட்பங்கள் மாறலாம்; ரசனைகள் புதிதாகலாம். ஆனால், உண்மையான இசை ஒருபோதும் முதுமையடைவதில்லை என்பதற்கு இளையராஜாவே வாழும் சாட்சி. ‘அன்னக்கிளி’யில் தொடங்கிய அந்த இசைப்பயணம், இன்று ‘டோரதி’ வரை நீள்கிறது. இது வெறுமனே திரைப்பட இசையின் வரலாறு அல்ல; பல தலைமுறைத் தமிழர்களின் வாழ்க்கை வரலாற்றில் பின்னப்பட்டிருக்கும் சப்தசுரச் சரித்திரம்.
1976-ம் ஆண்டு முதல் 2026-ம் ஆண்டு வரை - ஐம்பது ஆண்டுகள்! தமிழ் மக்களின் அன்றாட வாழ்க்கையில் மகிழ்ச்சியில் மெல்லிசையாகவும் காதலில் கவிதையாகவும் பிரிவில் கண்ணீராகவும், தனிமையில் துணையாகவும் ஒலித்துக்கொண்டிருக்கும் இசைப் பேரரசின் பெயர், இசைஞானி இளையராஜா!
16 வயதில் தொடங்கிய இசை மயக்கம்!
1976-ல் ‘அன்னக்கிளி’ வெளியானபோது எனக்கு வயது 16. புதிதாகக் கேட்பதையும் பார்ப்பதையும் ஆர்வத்துடன் உள்வாங்கிக்கொள்ளத் துடித்த இளமைப் பருவம் அது. எனது டியூஷன் ஆசிரியர் பழனியப்பன், ஓர் இசை ரசிகர். கிட்டார், புல்புல் தாரா போன்ற கருவிகளை வாசிக்கத் தெரிந்தவர். ஒவ்வொரு நாளும் டியூஷன் முடிந்ததும் ஏதாவது ஒரு திரைப்படப் பாடலை வாசித்து எங்களை மகிழ்விப்பார்.
ஆனால், ‘அன்னக்கிளி’ வெளியானதும் ஒரு வியப்பான மாற்றம். ஏறக்குறைய ஒரு மாத காலம் தினமும் அப்படத்தின் பாடல்களை வாசித்து மகிழ்வித்தார். இளையராஜாவின் இசையில் பயன்படுத்தப்பட்ட கிட்டார், தாளக் கருவிகள், நாட்டுப்புற இசையின் தனித்துவம் என ஒவ்வொரு நுட்பத்தையும் உணர்ச்சியுடன் விளக்குவார். அது டியூஷன் வகுப்பா, இசைக் கல்லூரியா என்று வியக்கும் அளவுக்கு அமைந்தது. அப்படித்தான், என் காதுகளின் வழியாக இளையராஜா என் மனதுக்குள் நுழைந்தார். அன்று ஆசிரியர் விதைத்த இசை விதை, 50 ஆண்டுகளுக்குப் பின்னரும் பசுமை குன்றாமல் வளர்கிறது.
1978 - ப்ரியா: மறக்க முடியாத இசை அனுபவம்!
படிப்பில் வகுப்புகள் உயர்ந்தபோது, இசையைக் கேட்கும் ரசனையும் வளர்ந்தது. ராகங்கள், இசைக்கோர்வைகள், குரல் வளம், வாத்தியங்கள் எனப் பல பரிமாணங்களை உணரத் தொடங்கினேன். 1978-ல் வெளியான ‘ப்ரியா’ திரைப்படம் என் இசை அனுபவத்தில் மறக்க முடியாத அத்தியாயம். ஸ்டீரியோஃபோனிக் ஒலிப்பதிவின் புதிய அனுபவமும் INRECO வெளியிட்ட இசைத்தட்டுகளும் என்னைப் பெரிதும் ஈர்த்தன.
வீட்டில் ரெக்கார்ட் பிளேயர் வாங்க வேண்டும் என்று என் தந்தையை வற்புறுத்தினேன். முதல் இசைத்தட்டாக ‘ப்ரியா’வையே வாங்கினேன். பள்ளித் தோழர்களை வீட்டுக்கு அழைத்து, அந்தப் பாடல்களைத் திரும்பத் திரும்பக் கேட்டு மகிழ்ந்தோம். இசைத்தட்டு தேயும்வரை கேட்ட அந்த நாட்கள் இன்றும் மனதில் இளமையாக இருக்கின்றன!
80-கள் இசை ராஜாவின் பொற்காலம்
80-களில் நேஷனல், பானாசோனிக் டேப் ரெக்கார்டர்களின் வருகையுடன் இசைத்தட்டுகளிலிருந்து கேசட்டுகளுக்கு மாறிய காலம். சிங்கப்பூரிலிருந்து நண்பர்கள் மூலம் டேப் ரெக்கார்டர் வாங்கிய நினைவும் இன்றும் பசுமையாக உள்ளது. தொழில்நுட்பம் வளர்ந்தது; ஒலிப்பதிவின் தரம் உயர்ந்தது. மேற்கத்திய இசைக்கோர்வைகளையும் கிராமிய மண்வாசனையையும் இணைத்து, வயலின்களின் சங்கமத்திலும் கிட்டாரின் துள்ளலிலும் புதிய இசை உலகத்தை உருவாக்கினார் இளையராஜா.
வீடுகள், பேருந்துகள், தேநீர்க்கடைகள், திருமண விழாக்கள் எனத் தமிழகத்தின் அன்றாட வாழ்வில் அவரது இசை கோலோச்சியது. காதல், நட்பு, கனவுகள், ஏக்கங்கள் என எங்கள் இளமை உணர்வுகளுக்கு அவரது பாடல்கள் வடிகாலாக அமைந்தன. 80-கள் என்பது ஒரு தசாப்தம் மட்டுமல்ல; இளையராஜா என்ற இசைச் சக்கரவர்த்தியின் பொற்காலம்.
1992 - புதிய இசை அலை; தொடர்ந்த ராஜாவின் தனித்துவம்!
ஏ.ஆர்.ரஹ்மானின் வருகை தமிழ்த் திரைப்பட இசையில் புதிய அத்தியாயத்தைத் திறந்தது. நவீன ஒலியமைப்புகளும் புதிய தொழில்நுட்பங்களும் இசை உலகை மாற்றின. ஆனாலும், இளையராஜாவின் இடம் குறையவில்லை. தேவர் மகன், ஹே ராம், விருமாண்டி, பிதாமகன், நான் கடவுள் போன்ற திரைப்படங்கள், காலத்திற்கேற்ப வெவ்வேறு பரிமாணங்களில் அவரது இசைத் திறன் தொடர்ந்ததற்குச் சான்றுகள்.
புதிய இசையமைப்பாளர்கள் வந்தார்கள்; ரசனைகள் மாறின. ஆனால், இளையராஜாவின் இசையோடு வளர்ந்த தலைமுறையின் பிணைப்பு மட்டும் தொடர்ந்தது. அவர் காலத்துடன் போட்டியிட்டவர் அல்ல; காலத்தைக் கடந்து நிற்கும் இசையை உருவாக்கியவர்! ‘டோரதி’ - மீண்டும் அந்த 80-களின் மாயம்! 2026-ல், ‘அன்னக்கிளி’ அறிமுகமாகி 50 ஆண்டுகள் நிறைவடையும் வேளையில், ‘டோரதி’யின் இசை மீண்டும் என்னை 80-களுக்கு அழைத்துச் சென்றது. இளமைக்காலத்தில் ஏற்பட்ட அதே பரவசத்தை இன்றும் உணர முடிவது இசையின் அதிசயமல்லவா? ஒரு பாடல் மறந்துபோன முகங்களை நினைவுபடுத்துகிறது; தொலைந்துபோன காலங்களை மீட்டெடுக்கிறது.
நம்மோடு இல்லாதவர்களைக்கூட இசையின் வழியாக மீண்டும் அருகில் கொண்டுவந்து நிறுத்துகிறது. 50 ஆண்டுகள் இசையமைப்பது சாதனை; 50 ஆண்டுகளாக ஒரு சமூகத்தின் உணர்வுகளில் வாழ்வது அதைவிடப் பெரிய சாதனை!
எனது 16 வயதில் பழனியப்பன் ஆசிரியரின் இசையின் வழியாக மனதில் பதிந்த இளையராஜா, இன்று என் வாழ்க்கையின் 50 ஆண்டுகால நினைவுகளோடு இணைந்திருக்கிறார். ஒரு தமிழனாக அவரது இசைப் பயணத்தை நினைத்து பெருமிதம் கொள்கிறேன். இசைஞானியே, அன்னக்கிளியில் தொடங்கிய உங்கள் இசைப் பயணம் நூறு ஆண்டுகளையும் தாண்டி வெற்றிநடை போடட்டும்!