இயக்குநர் செல்வராகவன் இப்போது நடிப்பிலும் கவனம் செலுத்தி வருகிறார். அவர் கதாநாயகனாக நடித்துள்ள ‘மனிதன் தெய்வமாகலாம்’ வெள்ளிக்கிழமை வெளியாகி இருக்கிறது. அடுத்து அவர் நடித்துள்ள சில திரைப்படங்கள் வெளியாக இருக்கின்றன. இந்நிலையில் அவரிடம் உரையாடியதில் இருந்து ஒரு பகுதி...
உங்கள் தந்தை கஸ்தூரி ராஜா ‘ஹபீபி’ படத்துல முக்கிய வேடத்துல நடிச்சிருக்கார். தனுஷ் தொடர்ந்து நடிச்சிட்டிருக்கார். மருமகன் பவிஷும் நடிக்க வந்துட்டார்... நீங்களும் இப்ப நடிப்புல இறங்கீட்டீங்க..?
நான் ‘ஆக்ஸிடென்டா’ நடிக்க வந்தவன். ‘சாணிக்காயிதம்’ படத்துல நடிக்கணும்னு இயக்குநர் அருண் மாதேஷ்வரன் தொடர்ந்து கேட்டுக்கொண்டதால அதுல நடிச்சேன். அது தொடர்ந்துட்டு இருக்கு. இப்போ ‘மனிதன் தெய்வமாகலாம்’ படத்துல கதையின் நாயகனா நடிச்சிருக்கேன். அது எளிமையான மக்களின் கதைங்கறதால, அது எனக்கு பொருந்தும்னு இயக்குநர் டென்னிஸ் மஞ்சுநாத் நம்பினார். அதனால நடிச்சேன். எங்க குடும்பத்துல நடிக்கணும்னு யாருமே திட்டமிட்டு வரலை. அதுவா அமைஞ்சதுதான். தனுஷே பெரிய செஃப் ஆகணும்னு தான் நினைச்சார். நான் ரொம்ப கட்டாயப்படுத்தித்தான் ‘துள்ளுவதோ இளமை’ படத்துல நடிக்க வச்சேன். என்னைப் பொறுத்தவரை நான் அமெரிக்கா போய், அதிகம் படிக்கணும்னு நினைச்சேன். ஆனா, குடும்ப சூழ்நிலை காரணமாக நடிக்க வந்துட்டோம்.
நீங்க அறிமுகமான ‘துள்ளுவதோ இளமை’ 2002-ல் ரிலீஸ் ஆச்சு. இந்த மே மாதத்தோட 25 வருஷம் கடந்துடுச்சு... எப்படி இருக்கு இந்த பயணம்?
நல்லாருக்கு. அதோட, ‘என்னடா இது, காலம் இவ்வளவு வேகமா ஓடுதே’ங்கிற பயமும் இருக்கு. இந்தப் பயணத்துல நிறைய அனுபவம் கிடைச்சிருக்கு.
ஆரம்பத்துல டைரக்ஷன்ல மட்டும்தான் கவனம் இருந்தது. இப்ப நடிப்பு, இயக்கம்னு ரெண்டு பக்கமும் போயிட்டிருக்கீங்க, எப்படியிருக்கு?
தனுஷ்கிட்டதான் கேட்டேன், ‘எப்படி ஒரே நேரத்துல பல வேலைகள் பண்றது?’ன்னு. அவர் ‘நமக்கு வேற என்ன தெரியும்?’ அப்படிங்கற ஒரே வார்த்தையில முடிச்சுட்டார். நியாயமான பதிலா இருந்தது. அதனால அப்படியே என்னையும் மாத்திக்கிட்டேன். அது இயல்பாகவே நடந்தது. நடிக்கப் போனா நடிப்பு. டைரக்ஷன் பக்கம் வந்தா, அதை பார்க்கறதுன்னு மாறிக் கிட்டேன். டைரக்ஷன் ஈசி இல்லை. அது சின்ன வயசுல இருந்தே கனவோட வந்த விஷயம். அதை விட்டுர முடியாது. நடிப்பைப் பொறுத்தவரை நிறைய பண்ணிட்டே இருக்கலாம். ஒரு சின்ன எக்ஸ்பிரஷன் கூட அர்த்தத்தை மாத்தும். ஒரு கேரக்டர்ல நடிக்கிறீங்கன்னா, அந்த கேரக்டரை விட்டு வெளிய போகாம பண்ணணும். அந்த அளவை தாண்டாம இருக்கணும். அதுல நிறைய விஷயங்கள் இருக்கு. அதுவும் ஒரு சவால்தான்.
தமிழ் சினிமாவுல ‘ரைட்டர்ஸ்’ அதிகமா இல்லைன்னு சொல்லிட்டே இருக்காங்க...நீங்க என்ன நினைக்கிறீங்க?
ரைட்டர்ஸ் இல்லாம எப்படி இவ்வளவு வருஷமா சினிமா பண்ணியிருக்க முடியும்? எனக்கு தெரிஞ்ச அளவுல ஏகப்பட்ட ரைட்டர்ஸ் இருக்காங்க. புதுசாகவும் நிறைய பேர் வந்துட்டு இருக்காங்க. ‘சொர்க்கவாசல்’ படம் பார்த்துட்டு அந்த ரைட்டிங்கை ரொம்ப ஆச்சரியமா பார்த்தேன். ‘இப்படியொரு கதை எனக்கு கிடைக்கலையே, நான் டைரக் ஷன் பண்ணிருப்பேனே’ன்னு நினைச் சேன். அதனால ரைட்டர்ஸ் நமக்கு இல்லைன்னு சொல்றது புரளிதான்.
உங்களோட ‘காதல் கொண்டேன்’, ‘7ஜி ரெயின்போ காலனி’ மாதிரியான காதல் படங்கள் ‘டிரெண்ட் செட்டரா’ இருந்துச்சு. இப்ப வர்ற காதல் படங்கள் பற்றி என்ன நினைக்கிறீங்க?
லவ் டிரெண்ட் எப்பவுமே மாறாது. ஆணோ, பெண்ணோ பார்த்த தும் வர்றதுதானே காதல். ஒரு பெண்ணை பார்க்கறதுக்காக, சும்மா அந்த இடத்தைக் கடக்கறதைப் பார்க்கறதுக்காக, ஒரே ஒரு லுக்-குக்காக, தெருமுனையில சைக்கிளை வச்சுக்கிட்டு காத்துக் கிடக்கிறதுதான் எனக்கு தெரிஞ்ச, என் காலத்து காதல். அதை அவங்க அப்பாவோ, எங்க அப்பாவோ பார்த்தா கண்டிப்பா அடி விழும். அந்தக் காதல் இன்னைக்கு மாறி இருக்கு. அப்படியிருந்தாலும் காதல்ல பெரிய மாற்றம் ஏதும் இல்லை. ஆனா, காலங் காலமா ‘மாறிடுச்சு, மாறிடுச்சு’ன்னு சினிமாவுல சொல்லிட்டே இருப்பாங்க. என்னைப் பொறுத்தவரை எந்த மாற்றமும் இல்லை.
ஆயிரத்தில் ஒருவன் 2, புதுப்பேட்டை 2... இதெல்லாம் வருதுன்னு அப்பப்ப நியூஸ் வருதே...
கண்டிப்பா உருவாக்குவேன். எப்ப அப்படிங்கறதை இப்ப சொல்ல முடியாது. ஆனா, வரும்.