தமிழ் சினிமா

பிரகாஷ் ராஜ் நடிக்கும் ‘ஃபாதர்’ டீஸர் வெளியீடு

ப்ரியா

சென்னை: ராஜ்மோகன் இயக்கத்தில் உருவாகியுள்ள 'ஃபாதர்' திரைப்படத்தின் டீஸர் வெளியாகி வரவேற்பைப் பெற்றுள்ளது.

தந்தை மற்றும் மகனுக்கு இடையேயான பாசப் பிணைப்பை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள இத்திரைப்படத்தில் டார்லிங் கிருஷ்ணா மற்றும் பிரகாஷ் ராஜ் ஆகியோர் முதன்மைப் பாத்திரங்களில் நடித்துள்ளனர். ‘குங்குமப்பூவும் கொஞ்சும் புறாவும்’, ‘வானவராயன் வல்லவராயன்’, ‘அட்ரஸ்’ உள்ளிட்ட படங்களை இயக்கிய ராஜ்மோகன் இப்படத்தை இயக்கியுள்ளார்.

இப்படம் குறித்து இயக்குநர் ராஜ்மோகன் கூறியுள்ளதாவது: ‘ஃபாதர்’ ஒரு உணர்வுபூர்வமான பயணம். தந்தை – மகன் உறவு என்பது நிஜ வாழ்க்கைக்கு மிகவும் நெருக்கமானது. பல குடும்பங்களில் தந்தைகள் தங்களது அன்பை வெளிப்படையாகக் காட்டுவதில்லை.

பொறுப்பு, அக்கறை, கண்டிப்பு அல்லது அவர்கள் செய்யும் தியாகங்கள் மூலமாகவே அந்த அன்பை வெளிப்படுத்துகிறார்கள். அந்த உணர்வுகளை ஒரு மகன் சரியான நேரத்தில் புரிந்துகொள்ளாமல் போகலாம். இந்த உணர்வுப்பூர்வமான இடத்தையே படம் ஆராய்கிறது.

அன்பால் இணைக்கப்பட்டிருந்தாலும், அந்த அன்பை ஒருவருக்கொருவர் வெளிப்படுத்தத் தெரியாத இரண்டு மனிதர்களின் பயணம்தான் இந்தப் படம். பார்வையாளர்கள் தங்களது வாழ்க்கையில் பார்த்த அல்லது அனுபவித்த ஏதோ ஒன்றை இந்தக் கதையில் உணர வேண்டும் என்பதே எனது நோக்கம். டார்லிங் கிருஷ்ணா தனது கதாபாத்திரத்தில் முழுத் திறமையை வெளிப்படுத்தியுள்ளார்.

பிரகாஷ் ராஜ் அசாத்தியமான ஆழத்தையும் உணர்வையும் கொண்டு வந்துள்ளார். இவர்களின் உறவுதான் படத்தின் மையம். டீசருக்கு கிடைத்துள்ள வரவேற்பு மிகவும் உற்சாகமளிக்கிறது. ஆனால் டீசர் என்பது ஒரு சிறிய பார்வை மட்டுமே. ‘ஃபாதர்’ படத்தின் முழுமையான பயணம் இன்னும் வலுவான உணர்வுப்பூர்வமான அனுபவத்தை ரசிகர்களுக்கு வழங்கும்” என்று தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT