“டோன்ட் ட்ரபிள் தி ட்ரபிள் படத்தோட கதையை கேட்டதும் எனக்கு புதுசா இருந்தது. இப்படி ஒரு கதையை, முதல் முறையா கேட்கிற மாதிரி உணர்ந்தேன். இதுக்கு முன்னால இந்த மாதிரி ஒரு கதையைக் கேட்டதோ அதுல நான் நடிச்சதோ இல்லை. நாம சின்ன வயசுல பார்த்த ‘அஞ்சலி’, ‘மை டியர் குட்டிச்சாத்தான்’ போன்ற படங்களை இது ஞாபகப்படுத்தும்.
கதை கேட்டப்போ என்னோட சிறுவயது ஞாபகம்தான் வந்துச்சு. அதுல அழகும் உண்மையும் இருந்தது. குழந்தைகளுக்கு ஏற்ற முழுநீள படத்துல நான் நடிச்சதில்லை. இது குழந்தைகளுக்கான படமாகவும் இருக்கும், பெரியவங்களுக்குள்ள இருக்குற குழந்தைகளுக்கும் பிடிக்கும். இந்தப்படத்துல பெண் குழந்தைதான் மெயின் டிரபுள். அவளை தொந்தரவு செஞ்சா என்ன ஆகும்னு கதை போகும். அந்த குழந்தையா சாரா அற்புதமா நடிச்சிருக் காங்க” என்கிறார் ஃபஹத் பாசில்.
ஷஷாங்க் யெலெட்டி தெலுங்கில் இயக்கியுள்ள இந்த ஃபேன்டஸி படம் தமிழ், மலையாள மொழிகளிலும் நாளை (அக்.2) வெளியாகிறது. இதன் புரமோஷனுக்காக சென்னை வந்திருந்த ஃபஹத் பாசிலிடம் பேசினோம்.
நீங்க அழுத்தமான, சீரியஸான கதாபாத்திரங்கள்லதானே நடிப்பீங்க?
அப்படின்னு இல்லை. எல்லா வகை படத்துலயும் நடிப்பேன். இந்த படத்துலயும் சீரியஸான அம்சங்களும் இருக்கு, கதையோட நகர்வுல அது வரும். கதையில நான் மேஜிசியனாகவும் வருவேன். ஏமாற்றுக்காரனாகவும் இருப்பேன். ரசிக்கறதுக்கு நிறைய விஷயங்கள் இருக்கு. கேரளாவுல நாங்க மலையாளப் படங்களை செட் போட்டு எடுக்கிற பழக்கமில்லை, நிஜ இடங்கள்லதான் எடுப்போம்.
இந்தப் படத்துக்கு அது கொஞ்சம் சிரமமா இருந்தது. ஹைதராபாத் சாலைகள்ல, சார்மினார் மாதிரி கூட்டம் அதிகம் உள்ள பகுதிகள்ல பகல், இரவுன்னு பல நேரங்கள்ல, ஷூட் பண்ணினது புது அனுபவமா இருந்தது. முதல்ல கூட்டத்தை கட்டுப்படுத்தறது நாங்க நினைச்ச மாதிரி எளிதா இல்லை. அப்புறம் கூட்டம் குறைவான இடங்கள்ல படப்பிடிப்பை நடத்தினோம்.
‘ஆவேஷம்’ மாதிரி படங்கள்ல நடிச்சிட்டு மற்ற மொழிகள்ல சாதாரண கேரக்டர் பண்ணும்போது உங்களுக்கு தீனி இல்லாத மாதிரி நினைக்கிறீங்களா?
இல்லை. என்னைப் பொறுத்தவரை எதுவுமே இல்லாத சாதாரண கேரக்டர்ல நடிக்கிறதுதான் கஷ்டம். ‘ஆவேஷம்’ மாதிரியான ஒரு கேரக்டர் பண்றது எனக்கு ரொம்ப ஈஸி. ஆனா, இந்த மாதிரி கதாபாத்திரத்துல ரொம்ப இயல்பா என்னைக் காட்டணும். அதே நேரத்துல மக்களை என்னை விரும்ப வைக்கணும். அதுதான் சவால்.
மொழி தெரியாம நடிக்கிறது கஷ்டமா இருந்ததா?
கஷ்டம்தான். ஏன்னா, என் சிந்தனை மலையாளத்துலதான் இருக்கும். ஒரு டயலாக் சொன்னா அதை மலையாளத்துலதான் நான் யோசிப்பேன். பிறகு அதை தெலுங்குல பேசுவேன். முதல்ல எனக்கு கஷ்டமா இருந்தது. இயக்குநர் ஷஷாங்க் என் கூட ஒரு மாசம் இருந்து உதவி பண்ணினார். நானே தெலுங்கு, தமிழ்ல டப்பிங் பேசியிருக்கேன். நல்லா பேசியிருக்கேன்னு நினைக்கிறேன்.
இந்தப் படத்துக்கு ஆஸ்திரேலிய ஒளிப்பதிவாளர் பிராட் பிரான்சிஸ் ஏன்?
இந்தக் கதைக்கு ஒரு குறிப்பிட்ட மூட் உருவாக்கணும்னு இயக்குநர் விரும்பினார். அதுக்காக ஒளிப்பதிவாளர் பிராட்-டை தேர்வு பண்ணினார். அவர் ஏற்கெனவே பண்ணிய படங்களைப் பார்த்து அவரை இந்தப் படத்துல பயன்படுத்த நினைச்சார். அவர் ரொம்ப பிசியான ஒளிப்பதிவாளர். இந்தப் படம் பண்ணும்போது ஃபிரியா இருந்ததால சம்மதிச்சார். இந்தப் படத்துக்காக 120 நாட்கள் ஷூட் பண்ணினோம்.
உங்க அப்பா பாசில், தமிழ்ல நல்ல படங்கள் இயக்கி இருக்கார்... நீங்க ஏன் டைரக் ஷன் பக்கம் வரலை?
அதுக்கு திறமை வேணும். எனக்கு அது இல்லை. அதனால நடிப்போட, படங்கள் தயாரிச்சுட்டு இருக்கேன். இப்போ அவர் நிறைய படங்கள் பார்த்துட்டு இருக்கார். நான் தயாரிச்ச ‘பெத்லகேம் குடும்ப யூனிட்’ படத்தைப் பார்த்து, இது கண்டிப்பா பிளாக் பஸ்டர்னு முதல்ல சொன்னவர் அவர்தான். அவரும் நல்ல கதைகள் வச்சிருக்கார். நான் கேட்டா தரமாட்டேங்கிறார்.
ஹீரோ, வில்லன்னு நடிச்சுட்டு வர்றீங்களே... உங்களுக்கு எது பிடிச்சிருக்கு?
ஹீரோ, வில்லனைத் தாண்டி நான் ஒரு கலைஞன். எனக்கு அதுதான் பிடிச்சிருக்கு. என்னை அப்படிப் பார்த்தா போதும். இரண்டு கதாபாத்திரங்கள்லயும் நடிக்கிறது கஷ்டம்தான். ஒரு கதையில அது எப்படி வருதுங்கறது முக்கியம். ‘கும்பளங்கி நைட்ஸ்’ படத்துல நடிச்சிருந்தேன். அதுல நடிச்சது எனக்கு ரொம்ப கஷ்டம். சில ரோல்களுக்கு நிறைய மெனக்கெட வேண்டியிருக்கும்.
அடுத்து என்ன படங்கள்?
மலையாளத்துல ‘கராத்தே சந்திரன்’ பண்றேன். தமிழ்ல பிரேம் இயக்குற படத்துல நடிக்கப் போறேன்.