அறிமுக இயக்குநர் மணிகண்டன் இயக்கும் படம், ‘மொய் விருந்து’. இதை எஸ்கே பிலிம்ஸ் இன்டர்நேஷனல் சார்பில் எஸ்.கமலக்கண்ணன் தயாரிக்கிறார். இதில், அர்ச்சனா முதன்மை பாத்திரத்தில் நடித்திருக்கிறார்.
ரக்ஷன், ஆயிஷா - நாயகன், நாயகியாக நடித்துள்ளனர். அபர்ணதி, தீபா சங்கர், சுஜாதா, மானஸ்வி கொட்டாச்சி, அருள்தாஸ், நாமோ நாராயணன் உள்பட பலர் இணைந்து நடித்துள்ளனர். சுகுமார் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்துக்கு டி.இமான் இசை அமைக்கிறார்.
படம்பற்றி இயக்குநர் மணிகண்டன் கூறியதாவது: "நான் பட்டுக்கோட்டை, பேராவூரணி பகுதிகளுக்கு சென்றபோது, `மொய் விருந்து' நடப்பதை பார்த்தேன். கோடிக் கணக்கில் மொய் வரும் என்பதை நம்ப முடியவில்லை.
ஒரு குடும்பம் 3 வருடத்துக்கு ஒரு முறை தான் மொய் விருந்து நடத்த முடியும். அந்த 3 வருடத்தில் அவர்கள் வாங்கிய மொய்ப் பணத்தை திருப்பி செய்ய வேண்டும். அப்படி சரியாக செய்பவர்களுக்கே அதிக மொய் வரும். இந்த பழக்கம் மூலம் ஊரே ஒழுக்கமாக இருக்கும்.
ஊதாரியாகவோ, குடிகாரராகவோ இருந்தால் திருப்பிச் செய்ய மாட்டான் என்று மொய் வைக்க மாட்டார்கள். இதனால் ஊரே ஒழுக்கமாக இருக்கும். இது எனக்கு பெரிய ஆச்சரியம் தந்தது. இப்போது, அதை கமர்ஷியலாக்கி விட்டார்கள்.
இதன் பின்னணியில் எமோஷனலான ஒரு கதையை வைத்து உருவாக்கப்பட்டப்படம் இது. ‘மொய்க்காரன்பட்டி’ என்ற கற்பனை கிராமத்தில் கதை நடப்பதுபோல அமைக்கப்பட்டுள்ளது.
மொத்தப் படப்பிடிப்பையும் கொடைக்கானல் அருகேயுள்ள பண்ணைக்காடு என்ற கிராமத்தில் எடுத்துள்ளோம். போஸ்ட் புரொடக் ஷன் பணிகள் நடந்து வருகின்றன. பிப்ரவரியில் வெளியிட திட்டமிட்டுள்ளோம். இவ்வாறு மணிகண்டன் கூறினார்.