“ஒரு திரைப்படத்துக்கான காட்சிகளை வெட்டிச் சேர்ப்பது மட்டும் படத்தொகுப்பு அல்ல. ஒரு கதையை அதன் சுவைக் குறையாமல் சொல்லும் முக்கிய கலைதான் அது” என்கிறார் படத்தொகுப்பாளர் விஜய் வேலுக்குட்டி. தமிழ் சினிமாவின் குறிப்பிடத்தக்க படத் தொகுப்பாளர்களில் ஒருவரான இவர், அஜித்தின் ‘துணிவு’, ‘வலிமை’, ‘குட் பேட் அக்லி’, விஷாலின் ‘மார்க் ஆண்டனி’, கார்த்தியின் ‘சர்தார் 2’ உள்பட பல ஆக் ஷன் திரைப்படங்களில் பணியாற்றியவர்.
“தொடர்ந்து ஆக் ஷன் படங்களாகத்தான் எனக்கு வந்துகிட்டிருக்கு. எனக்கு பிடிச்ச ஜானர் டிராமா, ரொமான்ஸ்தான். நான் விரும்பிப் பார்க்கிற படங்கள் கூட அந்த மாதிரி இருக்கும். ஆனா, ஆக் ஷன் படங்கள்தான் அதிகமா பண்றேன். சண்டை இயக்குநர்களோட தொடர்ந்து பழகி, காட்சிகளை எடிட் பண்றதும் பிடிச்சிருக்கு. எதிர்காலத்துல மற்ற கதைகள் கொண்ட படங்கள் அதிகமா வருமோ, என்னமோ?” என்கிறார் விஜய் வேலுக்குட்டி.
‘சர்தார் 2’-ல எது உங்களுக்கு சவாலான விஷயமா இருந்தது?
‘சர்தார்’ படத்துக்கு நான் எடிட்டிங் பண்ணலை. இந்தப் படத்துக்கு பண்ணியிருக்கேன். இதுல பார்ட் 1 கதைக்கு முன்னாடி என்ன நடந்ததுனு பீரியட்ல இருந்து கதை ஆரம்பிக்கும். கேரக்டரை பின்பற்றிய கதை சொல்லல் எனக்கு சுவாரஸ்யமாக இருந்தது. சவாலான விஷயம்னு சொன்னா, ஆக் ஷன் காட்சிகள்தான். ஏன்னா, இப்ப பொதுவா ஒரு சண்டைக் காட்சின்னா, ஏழு, எட்டு கேமரா வச்சு ஷூட் பண்ணிட்டு வர்றாங்க. அதுல நிறைய ஃபுட்டேஜ் இருக்கும். அதுல தேர்வு பண்ணி எடிட் பண்ணினதுதான் ‘சேலஞ்சிங்கா’ இருந்தது. இருந்தாலும் ஆக் ஷன் படங்கள் அதிகம் பண்ணிய அனுபவம் இருக்கறதால அதை எளிதா பண்ணிட்டேன்.
டிஜிட்டல் வந்த பிறகு எடிட்டிங் ஈஸி ஆயிடுச்சுன்னு சொல்றாங்களே, உண்மையா?
அப்படிச் சொல்ல முடியாது. சாதக, பாதகம்னு பார்த்தா எல்லாத்துலயுமே இருக்கு. ஃபிலிம்ல ஷூட் பண்ணும்போது, ‘இவ்வளவு ஃபுட்டேஜ்தான், இத்தனை கேன்’-தான் ஷூட் பண்ணணும்னு தயாரிப்பு தரப்புல சொல்லிடுவாங்க. டிஜிட்டல் வந்த பிறகு அது மாறியிருக்கு. நிறைய காட்சிகளை ஷூட் பண்ணிட்டு வர்றதால, எடிட்டிங்ல நிறைய காட்சிகளைப் பார்த்து சிறந்ததை தேர்வு பண்ண முடியும்.
அதுக்கு நிறைய நேரம் செலவு பண்ணணும். அதே நேரத்துல பல ‘வெர்ஷன்ஸ்’ பண்ணி பார்க்க முடியும்ங்கற சாதகமும் இதுல இருக்கு. ஹார்ட் டிஸ்க்குல இருக்கறதால, எத்தனை வெர்சன் வேணாலும் கட் பண்ணிக்கலாம். எந்த டேக் வேண்டுமானாலும் டக்குனு எடுத்து பயன்படுத்த முடியும்.
ஒரு படத்துக்கு பல ‘வெர்ஷன்’ எடிட் பண்றது அவசியம்தானா?
கண்டிப்பா. எல்லா படத்துக்குமே எடிட்டிங்ல பல வெர்ஷன் பண்ண வேண்டியிருக்கும். ஏன்னா, சினிமாங்கறது ஒருத்தரோட முடிவு மட்டுமல்ல. அது கூட்டு முயற்சிதான். தயாரிப்பு தரப்புல பார்த்துட்டு ஒரு முடிவெடுத்து சொல்லுவாங்க. மற்ற டீம் பார்த்துட்டு ஒரு கருத்து சொல் வாங்க. டெக்னீஷியன்ஸ் ஒரு விஷயம் சொல்வாங்க. கடைசியா இயக்குநர் மற்றும் தயாரிப்பாளரோட முடிவு என்னவோ அப்படித்தான் படம் வெளியில வரும்.
இரண்டரை மணி நேர படத்துக்கு 4 மணி நேர காட்சிகளை ஷூட் பண்ணிட்டு வந்து சில இயக்குநர்கள், எடிட்டர்ட்ட கொடுக்கறாங்கன்னு சொல்றாங்களே...
இதை இரண்டு விதமா பார்க்கலாம். கதை இதுதான்னு முடிவு பண்ணிதான் படத்தோட ஷூட்டிங்கை ஆரம்பிக்கிறாங்க. சில நேரம் அதிகமா ஷூட் பண்ணி, அதுல இருந்து சிறந்ததை வச்சுக்கலாம்னு நினைக்கிறாங்க. இது ஒரு விதத்துல நல்லது. நிறைய ‘மெட்டீரியல்’ இருந்தா அதுல இருந்து நல்லதை கொண்டு வர முடியும் அப்படிங்கற விஷயமும் இருக்கு.
அனுபவமுள்ள இயக்குநர்கள் மட்டும்தான் கரெக்டா எடுக்க முடியும். இன்னொரு பக்கம் அதிகமா ஷூட் பண்ணி, அதை எடிட் பண்றதுக்கு அதிக நேரம் ஆகும்ங்கறதால குறிப்பிட்ட காலத்துல படத்தொகுப்பை முடிக்க முடியாத பாதகமும் இருக்கு. அடுத்த மாசம் ரிலீஸ்னு சொல்லும்போது, அதை அவ்வளவு விரைவா கொடுக்க முடியாது.
மற்ற மொழிகள்லயும் எடிட்டர்கள் வேலை பார்க்கிறாங்க. மொழி பிரச்சினை இருக்காதா?
எடிட்டிங்கறதே கதை சொல்லல்தான். கலையில, கதை சொல்றதுக்கு பல்வேறு வழிமுறைகள் இருக்கு. அதுல ஒண்ணு படத்தொகுப்பு. அதனால ஒரு எடிட்டர் மற்ற மொழியை தெரிஞ்சுக் கறது நல்லது. இல்லைனா கூட அது பெரிய பாதகம் இல்லை. ஏன்னா, கதையும் உணர்ச்சிகளும் மொழிக்கு அப்பாற்பட்டவை. மொழி, தெரியலைன்னாலும் கதைகள் புரியும் இல்லையா? அப்படியே இல்லைனாலும் ஸ்கிரிப்ட் டைரட்டரை பக்கத்துல வச்சுக்கிட்டு பண்ணிடலாம். நான் இப்ப தெலுங்கு படம் பண்ணப் போறேன். எனக்கு அந்த மொழி தெரியாது. இப்ப கத்துக்கிட்டு இருக்கேன்.
அடுத்து என்னென்ன படங்கள் பண்றீங்க?
எஸ்.ஜே.சூர்யா இயக்கி நடிக்கும் ‘கில்லர்’, அஜித்தோட ‘டேர்டெவில்’, தெலுங்குல தேஜா சஜ்ஜா நடிப்பில் ‘ஜோம்பி ரெட்டி- பார்ட் 2’ படங்கள் பண்ணிட்டு இருக்கேன். இந்தியில பண்ணவும் பேச்சுவார்த்தை போயிட்டிருக்கு.