செல்வராகவனுடன் லவ் ஓ லவ் பட இயக்குநார் மகேஷ் ராஜேந்திரன்
இயக்குநர் லக்ஷ்மண், சந்தோஷ் பி ஜெயக்குமார் ஆகியோரிடம் பணியாற்றிய மகேஷ் ராஜேந்திரன் எழுதி இயக்கியுள்ள ரொமான்டிக் காமெடி திரைப்படம் ‘லவ் ஓ லவ்’. ஸினிமா மீடியா சார்பில் தினேஷ் ராஜ், கிரியேட்டிவ் என்டர்டெயினர்ஸ் சார்பில் ஜி.தனஞ்ஜெயன் இணைந்து தயாரித்துள்ள இப்படத்தின் டீஸர் வரவேற்பைப் பெற்றுள்ள நிலையில் இயக்குநரிடம் பேசினோம்.
ரொமான்டிக் காமெடி படங்கள் நிறைய வந்திருக்கே?
ஆமா. அது மாதிரி எத்தனை படங்கள் வந்தாலும் கண்டிப்பா அதுக்கு வரவேற்பு உண்டு. ரொமான்டிக் காமெடி படங்கள்ல பொதுவா, காதலோட எமோஷனை தான் சொல்லியிருப்பாங்க. இல்லைனா, பெற்றோர்கள், சாதி பிரச்சினைகள்னு இருக்கும். ஆனா நான் இதுல பொருளாதார பிரச்சினையை சொல்றேன்.
உறவுகள் மீது அதிக ஈடுபாடு கொண்ட இளைஞனோட வாழ்க்கைல நிகழும் எதிர்பாராத திருப்பங்களையும், அதனால உருவாகும் நகைச்சுவை மற்றும் உணர்ச்சிகரமான தருணங்களையும் இப்படம் பேசும். ஒரு நடுத்தர வர்க்கப் பையனுக்கும் கொஞ்சம் வசதியான பொண்ணுக்கும் காதல். அவங்க ரெண்டு பேருக்குமான உலகம் வேற வேறயா இருக்கு. அவங்க பயணம் என்னவாகுது, எங்க போயி முடியுதுன்னு கதை போகும்.
ரொமான்டிக் கதையில பொருளாதார விஷயமா?
இன்னைக்கு நாம் பார்க்கிற இந்த பொருளாதார உலகத்துல நாம என்னாவாகிட்டிருக்கோம் அப்படிங்கறதை சொல்லியிருக்கேன். பெற்றோர்கள் மகனை கஷ்டப்பட்டு இன்ஜினீயரிங் படிக்க வைக்கிறாங்க. அவன் படிப்புக்காக வீட்டை விற்கிறாங்க; இல்லைனா சேர்த்து வச்ச பணத்தை மொத்தமா செலவழிக்கிறாங்க.
படிச்சு முடிச்சதும், ஒரு தொழில் தொடங்கலாம்னு வங்கிகள்ல லோன் கேட்டா தர மாட்டாங்க. அதனால அவன் ஏதோ ஒரு கம்பெனிக்கு வேலைக்குப் போயி மாசம் ரூ.40 ஆயிரம் சம்பளம் வாங்கியாச் சுன்னா, எல்லா வங்கியும் லோன் கொடுக்க ஓடி வரும். அவன் கேட்ட லோன் கிடைக்காது, ஆனா, செலவு பண்றதுக்கும் காஸ்ட்லியா வாழறதுக்கும் வங்கிகள் லோன் கொடுக்கும். இப்படியான உலகத்துக்குள்ளதான் நாம வாழ வேண்டியிருக்கு. அதையும் இந்தப் படம் பேசும்.
ஹீரோ பவிஷ் நாராயண் என்ன பண்றார்?
ஹீரோ இன்ஜினீயரிங் முடிச்சவர். இங்க இன்ஜினீயரிங் முடிச்சவங்க இரண்டு செக்டார் இருக்காங்க. ஒரு தரப்பு, ஓஎம்ஆர், சோழிங்கநல்லூர்னு பளபளன்னு இருக்கிற வாழ்க்கையை வாழறாங்க.
இன்னொரு தரப்பு, மெக்கானிக் இன்ஜினீயரிங் மாதிரி படிச்சுட்டு அம்பத்தூர் எஸ்டேட் பகுதியில வேலை பார்ப்பாங்க. இவங்க ரெண்டு பேருக்கும் ஒரே சம்பளம்தான். ஆனா, லைஃப் ஸ்டைல்வேற. ஹீரோயின் அந்த சம்பளத்தை வச்சு பறக்க நினைக்கிறாங்க. ஹீரோ அதை வச்சு அப்பா, அம்மா, தங்கச்சியை காப்பாத்தணும்னு நினைக்கிறார் இந்த முரண்பாடு அவங்களை என்ன முடிவெடுக்க வைக்குதுன்னு படம் போகும்.
ஹீரோயின் நாக துர்கா யூடியூப் பிரபலமாமே?
தெலுங்குல நாட்டுப்புறப் பாடல்களுக்கு நடனமாடும் பிரபலமான யூடியூபர் அவங்க. ஏராளமான பாடல்களுக்கு நடனமாடி இருக்காங்க. அவங்களை தமிழ்ல அறிமுகப்படுத்தி இருக்கோம். இந்த கேரக்டருக்கு ரொம்ப பொருத்தமா இருந்தாங்க. செல்வராகவன், கே.எஸ்.ரவிகுமார், வனிதா விஜயகுமார், ரம்யா, ஆதித்யா கதிர்னு நிறைய பேர் நடிச்சிருக்காங்க.
செல்வராகவன் போலீஸ் அதிகாரியா?
வழக்கமா இதுவரை பார்த்த செல்வராகவனா இதுல அவர் இருக்கமாட்டார். அவர் தோற்றத்தை மாத்தியிருக்கோம். காதல் பிரச்சினையை கேட்டுட்டு அவர் தீர்வு சொல்ற கேரக்டர். கே.எஸ்.ரவிகுமார் அப்பா கேரக்டர் பண்ணியிருக்கார்.
அனு ஸ்ரீ வேலன் என்கிற திருநங்கை முக்கியமான ரோல் பண்றாங்க. ஆணும் பெண்ணும் என்னவாக இருக்கணும்னு அவங்க பேசற விஷயம் ரொம்ப நல்லா இருக்கும். படம் முடிஞ்சிருச்சி. பிரதீப் பி.ஜே. வேய்ன் பேவி இசை அமைச்சிருக்காங்க. பி.ஜி.முத்தையா ஒளிப்பதிவு பண்ணியிருக் கார். ஜூலையில வெளியிட திட்டமிட்டிருக்கோம்.