தமிழ் சினிமா

“அடுத்த படம் தமிழில்தான்” - துல்கர் சல்மான் உறுதி

ப்ரியா

நடிகர் துல்கர் சல்மான் அடுத்து தமிழ்ப் படம் ஒன்றில் நடிக்க இருப்பதாக தெரிவித்துள்ளார்.

துல்கர் சல்மான் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘ஆகாசம்லோ ஒக தாரா’ என்ற தெலுங்கு படம் நவம்பர் 20 அன்று வெளியாக இருக்கிறது. இந்தப் படத்தின் முன்வெளியீட்டு விழா சென்னையில் செவ்வாய்க்கிழமை நடந்தது. அதில் கலந்து கொண்டு பேசிய துல்கர் சல்மான் தனது அடுத்தப் படம் குறித்த தகவலைப் பகிர்ந்து கொண்டார்.

அவர் கூறுகையில், “அடுத்ததாக தமிழ்ப் படத்தில்தான் நடிக்க இருக்கிறேன். படத்தின் பெயர் ‘கோலி’. இயக்குநர் அட்லீயிடம் உதவி இயக்குநராக இருந்த கார்த்திகேயன் வேலப்பன் இந்தப் படத்தை இயக்குகிறார்’ என்று தெரிவித்தார்.

இந்தப் படம் குறித்து 2023-ம் ஆண்டிலேயே தகவல்கள் வெளியான நிலையில், துல்கர் சல்மான் தெலுங்கு படங்களில் கவனம் செலுத்தி வந்தார். தற்போது இப்படத்தின் பணிகள் மீண்டும் தொடங்க இருக்கின்றன.

பவன் சதினேனி இயக்கத்தில் உருவாகி இருக்கும் தெலுங்கு படம் ‘ஆகாசம்லோ ஒக தாரா’. இந்தப் படத்தில் துல்கர் சல்மான், சாத்விகா, ஸ்ருதி ஹாசன், ருஹானி சர்மா, ஸ்வாசிகா, கவுதம் வாசுதேவ் மேனன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

விண்​வெளி வீராங்​கனையாக வேண்டும் என்கிற குக்கிராமத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணின் ஆசையை  நிறைவேற்றுவதற்கு துல்கர் சல்மான் உதவி செய்கிறார். இந்தப் படம் நவம்பர் 20 அன்று வெளியாகிறது.

துல்கர் சல்மான் அடுத்ததாக ‘ஸ்ரீ ஸ்ரீ’ என்கிற தெலுங்கு படத்தில் நடித்து வருகிறார். இவர் கடைசியாக ‘காந்தா’ என்ற தமிழ்ப் படத்தில் நடித்திருந்தார்.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT