ரிச்சர்ட் ரிஷி, ரக்சனா இந்துசூடன் நடித்துள்ள ‘திரவுபதி 2’ படம், வரலாற்று ஆக் ஷன் கதையாக உருவாகியுள்ளது. இதில், நட்டி நடராஜ், சிராக் ஜானி, தினேஷ் லம்பா முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். நேதாஜி புரொடக் ஷன்ஸ் சார்பில் சோலா சக்ரவர்த்தி, ஜி.எம்.ஃபிலிம் கார்ப்பரேஷனுடன் இணைந்து தயாரித்துள்ள இப்படத்தின் செய்தியாளர்கள் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது.
இயக்குநர் மோகன் ஜி கூறும்போது, “பீரியட் படம் என்பதால் முதல் படம் போலவே கடினமாக வேலை பார்த்தேன். ரிச்சர்ட் சார் இல்லாமல் ‘திரவுபதி 2’ இல்லை. இந்தப் படத்துக்காக, இன்னும் ஒரு ரூபாய் கூட அவர் சம்பளம் வாங்கவில்லை. குதிரை பயிற்சி, கத்திச்சண்டை என இந்தப் படத்துக்காக ஒரு நாளில் 16 மணி நேரம் உழைத்துள்ளார். 25 கதாநாயகிகளைப் பார்த்த பிறகு ரக்சனாவை தேர்ந்தெடுத்தேன். திறமையான நடிப்பைக் கொடுத்துள்ளார். நான் சிவபக்தன். காசி சென்றிருந்தபோது, அங்குள்ள ஒரு கோயிலில் இருந்த நந்தி, இஸ்லாமிய மக்கள் வழிபடும் ஞானவாபி மசூதியைப் பார்த்ததுபோல இருந்தது.
அதைப் பற்றி விசாரித்தபோது அவுரங்கசீப் அங்கிருந்த கோயிலை நோக்கி மசூதி உருவாக்கிய வரலாறு தெரிய வந்தது. அது தமிழ்நாட்டுடனும் ‘கனெக்ட்’ ஆகிறது. அதைப்பற்றி விரிவாகப் படித்ததும் இதுதான் நான் பண்ண வேண்டிய படம் என முடிவு செய்து உருவாக்கினேன். சகோதரர்களாக வாழ்ந்து வரும் இந்திய இஸ்லாமியர்களை இந்தப் படம் எந்தவகையிலும் காயப்படுத்தாது. அவர்களின் தொடக்கம் எது என்று இந்தப் படம் புரிய வைக்கும். வணிகரீதியான படம்தான்” என்றார்.
இந்நிலையில் பொங்கலுக்கு வெளியாவதாக அறிவிக்கப்பட்டிருந்த இப்படத்தின் ரிலீஸ் தேதி மாற்றி வைக்கப்பட்டுள்ளது. இதுபற்றி தயாரிப்பு தரப்பு வெளியிட்டுள்ள பதிவில், “திரையரங்க உரிமையாளர்களின் வேண்டுகோளை ஏற்று நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் பிறந்த நாளை முன்னிட்டு ஜன.23-ல் இப்படம் வெளியாகும்” என்று தெரிவித்துள்ளது.