அஸ்வின் கந்தசாமி இயக்கியுள்ள ‘டபுள் ஆக்குபன்சி’ படத்தில் சந்தோஷ், சம்யுக்தா விஸ்வநாத், ரேஷ்மா வெங்கடேஷ், வினோத் கிஷண் உள்பட பலர் நடித்துள்ளனர். அவ்னி மூவீஸ் மற்றும் பென்ஸ் மீடியா இணைந்து தயாரித்துள்ள இப்படம் கடந்த வாரம் வெளியானது.
இப்படம் வரவேற்பைப் பெற்றதை அடுத்து வெற்றி விழா சென்னையில் நடைபெற்றது. படக்குழுவினருடன் கிரியேட்டிவ் தயாரிப்பாளர் அனந்திதா சுந்தரும் கலந்துகொண்டார். இயக்குநர் அஸ்வின் கந்தசாமி கூறும்போது, “இதில் நடித்தவர்கள் அர்ப்பணிப்புடன் சிறந்த நடிப்பை வழங்கியுள்ளனர்.
ரொமான்ஸ் காட்சிகளில் சந்தோஷின் நடிப்பு பாராட்டப்பட்டது. சம்யுக்தா விஸ்வநாதனின் நடிப்பு, படத்தின் உணர்ச்சிப்பூர்வமான உச்சக்கட்டக் காட்சியை அடுத்த நிலைக்குக் கொண்டு சென்றது. படத்தில் நடித்த அனைவரையும் நான் அதிகம் சிரமப்படுத்தி இருக்கலாம். இருந்தாலும் முழு அர்ப்பணிப்புடன் பணியாற்றினர்.
இந்த வெற்றி அவர்களுக்கானது. ஒரு பார்வையாளரிடம் இருந்து எனக்கு அழைப்பு வந்தது. கடும் மன அழுத்தத்தில் இருந்த அவர், தற்செயலாக இப்படத்தைப் பார்த்ததாகவும், நீண்ட நாட்களுக்குப் பிறகு மனம்விட்டு சிரித்து மகிழ்ந்ததாகவும் கூறினார். ஒரு படைப்பாளியாக எனக்கு அதைவிடப் பெரிய வெற்றி எதுவும் இல்லை” என்றார்.