கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில், இளையராஜா இசையில் உருவாகியுள்ள 'டோரதி' படத்தின் ட்ரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது. கீர்த்தி சுரேஷ், சனந்த், ரிஷிகாந்த் ஆகியோர் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ள இப்படத்துக்கு எஸ். திருநாவுக்கரசு ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்படம், டொராண்டோ சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்டு அங்கு பெரும் வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது
ட்ரெய்லர் எப்படி? - சிறுவயது முதலே பிரிக்க முடியாத நண்பர்களாக வளரும் இரு இளைஞர்களின் கதையை மையமாகக் கொண்டு ட்ரெய்லர் தொடங்குகிறது. கிராமத்துச் சூழலில் சேவல் சண்டை, திருவிழா கொண்டாட்டங்கள் மற்றும் நண்பர்கள் சூழ வளரும் இருவருக்குமிடையே, பழிவாங்கும் உணர்வுகள் குறுக்கிடும்போது அவர்களின் பந்தம் எவ்வாறு சிதறுகிறது என்பதை ட்ரெய்லரின் காட்சிகள் விறுவிறுப்பாக விவரிக்கின்றன.
ஆண்களின் வீரம், அழுகை பற்றிய அழுத்தமான உரையாடல்களுடன், கிராமத்து வன்முறையின் கொடூர பக்கத்தையும் ட்ரெய்லர் காட்டுகிறது. இளையராஜாவின் இசை ட்ரெய்லரின் காட்சிகளுக்கு வலு சேர்க்கிறது. கீர்த்தி சுரேஷ் கதாபாத்திரம் பற்றிய விவரிப்புகள் எதுவும் ட்ரெய்லரில் இடம்பெறவில்லை எனினும் படத்தில் அவருடைய கதாபாத்திரம் ஆழமானதாக இருக்கும் என்பது தெரிகிறது.
ஜியோ ஸ்டுடியோஸ், சிக்யா என்டர்டெயின்மென்ட் மற்றும் தம்மம் ஃபிலிம்ஸ் இணைந்து தயாரித்துள்ள இப்படம் வரும் செப்டம்பர் 25 அன்று திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.