‘பீட்சா’, ‘ஜிகர்தண்டா’, ‘இறைவி’ எனத் தமிழ் சினிமாவில் தொடர்ந்து தனது தனித்துவமான படைப்புகளின் மூலம் முத்திரை பதித்த இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் தற்போது மிக முக்கியமான, துணிச்சலான கதைக்களத்துடன் களமிறங்கியுள்ள படம் தான் ‘டோரதி’. இதன் வெளியீட்டுக்கும் முன்பும் பின்பும் சமூக வலைதளங்களில் அதீத வெறுப்பு, கேலியை ஒருபுறமும், உன்னத சினிமா அனுபவத்தால் பெறும் பாராட்டுகளை மறுபுறமும் சந்தித்துள்ள இப்படம் எப்படி இருக்கிறது என்று பார்க்கலாம்.
90-களின் மத்தியில் சாதி வெறி, வகுப்புவாதம், ஆணாதிக்க திமிர் மற்றும் வன்முறை என அனைத்தும் ஒருங்கே அமைந்த ஒரு கிராமத்தில் கதை நடக்கிறது. சிறுவயதில் புரூஸ் லீயின் தீவிர ரசிகனாக இருக்கும் சுப்பு (சனந்த்) தன் பள்ளிக்கூட நண்பனான கார்த்தியை (ரிஷிகாந்த்) உள்ளூர் ரவுடிகளிடம் இருந்து காப்பாற்றுகிறான். சுப்புவின் குடும்பம் முழுக்க முழுக்க ஆண்கள் மட்டுமே நிறைந்த, பெண்கள் இல்லாத ஒரு ’டாக்ஸிக்’ தன்மையால் சூழப்பட்டது. அவரது தந்தை (முத்துக்குமார்) மற்றும் மூத்த சகோதர்கள் அனைவரும் தாடியையும் மீசையையும் ஆண்மையின் உயரிய அடையாளமாகக் கருதுபவர்கள். அங்கு வன்முறையே கவுரவமாகவும், தங்களின் அதிகாரத்தை செலுத்தும் மொழியாகவும் இருக்கிறது.
மறுபுறம், தந்தையில்லாத சூழலில் தாயால் வளர்க்கப்படும் சாதுவான கார்த்தி, சுப்புவின் தைரியத்தையும் அவரது குடும்பத்தின் முரட்டுத்தனமான வழிகளையும் கண்டு வியக்கிறார். சாதியின் காரணமாக சுப்புவின் தந்தை, கார்த்தியை இழிவாக நடத்தினாலும், சுப்புவின் மீதான அவரது பிணைப்பு குறைவதில்லை. ஆனால், இவர்கள் வளர்ந்து பெரியவர்கள் ஆகும்போது இருவரின் குணநலன்களும் தலைகீழாக மாறுகின்றன. இவர்களின் முரண்பாடான நட்பிற்கு நடுவே, சுப்புவின் அண்ணனுக்குத் திருமணம் நடந்து கேரளாவில் இருந்து டோரதி (கீர்த்தி சுரேஷ்) என்ற பெண் மருமகளாக வீட்டுக்கு வருகிறார். தாயன்புக்காக ஏங்கும் சுப்புவுக்கு, டோரதியின் வரவு ஒரு மிகப்பெரிய வடிகாலாக அமைகிறது.
சுப்புவின் மென்மையான உணர்வுகளையும், சுயத்தையும் புரிந்து கொள்ளும் நபராக டோரதி இருக்கிறார். ஆனால், இது கார்த்திக்கும் சுப்புவின் தந்தைக்கும் பிடிக்கவில்லை. இதன் பிறகு நடக்கும் சம்பவங்கள் இருவரது நட்பையும் எங்கே கொண்டு செல்கிறது என்பதே ‘டோரதி’-யின் மீதிக் கதை.
தனது முதல் படத்திலிருந்தே தனக்கென ஒரு திரைமொழியை உரித்தாக்கி ரசிகர்களை வசப்படுத்தி வரும் கார்த்தி சுப்புராஜின் திரைப் பயணத்தில் இந்த படம் மேலும் ஒரு மணிமகுடம் என்று தாரளமாக சொல்லலாம்.
திரைக்கதையில் சிற்சில குறைகள் இருந்தாலும் தனது படங்களில் சுவாஸ்யமான கதை சொல்லலில் அவர் எப்போதும் குறை வைத்ததில்லை. அந்த வரிசையில் முதல் ஃப்ரேமிலிருந்தே ஆடியன்ஸை உள்ளே இழுத்துக் கொள்கிறது ‘டோரதி’.
கார்த்திக் சுப்புராஜ் தனது சமூக வலைதளப் பதிவில் குறிப்பிட்டது போல, இப்படத்தை உருவாக்கிய நாட்கள் மனிதனாகவும், கலைஞனாகவும் தன்னை மாற்றியதாகக் கூறியிருந்தார். கதையின் பிரதான கதாபாத்திரங்களுக்கு ‘கார்த்தி’ - ‘சுப்பு’ என்று பெயர் வைத்திருப்பது கூட தற்செயலானது அல்ல. இது அவருக்கு மிகவும் பர்சனலான படைப்பு என்பதையே இது உணர்த்துகிறது. சிறுவயதில் கார்த்திக்கு ‘ஆண்மை’ என்றால் என்னவென்று கற்றுக்கொடுத்த சுப்புவே, பின்னர் பெண்மையின் ஆழத்தையும் மகத்துவத்தையும் அவருக்குப் புரியவைக்கும் இடம் படத்தின் மிகச் சிறந்த தருணங்களில் ஒன்று. இதுபோல பல நல்ல தருணங்கள் படத்தில் உண்டு.
படத்தின் முதல் பாதி கார்த்திக் சுப்பராஜின் சுவாரஸ்யமான திரைக்கதையாலும், வன்முறை நிறைந்த டார்க் காமெடியாலும் நகர்கிறது. சுப்புவும் கார்த்தியும் சேர்ந்து முதன்முறையாக ஆளைக் கொல்ல முயலும் காட்சி, கல்யாண பேண்ட் வாத்தியக்காரர்கள் 'ஸ்டார் வார்ஸ்' தீம் இசையை வாசிப்பது என கலகலப்பான காட்சிகளுடன் ஈர்க்கிறது.
கார்த்திக் சுப்புராஜ் இதுவரை உருவாக்கிய படங்களிலேயே மிக ‘ரா’வான, துணிச்சலான திரைப்படம் என்றால் இதுதான். சமீபகாலத்தில் வெளிவந்த அசல் கிராமத்துப் பின்னணி கொண்ட படங்களில் ஒன்று என்றும் இதைக் குறிப்பிடலாம்.
தொழில்நுட்ப ரீதியாக மிகவும் வலுவான படம் இது. ஒளிப்பதிவாளர் திருவின் கேமரா மாயாஜாலம் செய்திருக்கிறது. குறிப்பாக, சுப்புவின் வீட்டில் ஒரு மரணம் நிகழும் காட்சியில், அதைப் பார்த்து ஒவ்வொரு கதாபாத்திரமும் ரியாக்ஷன் கொடுக்கும்போது் கேமரா வீட்டைச் சுற்றி நகரும் விதம் அட்டகாசமான காட்சிப்படுத்தல். கடந்த கால நிகழ்வுகள் வண்ணமயமாகவும், தற்போதைய நிகழ்வுகள் கருப்பு - வெள்ளையாகவும் பிரிக்கப்பட்டுள்ளதும் நல்ல ஐடியா.
இவை அனைத்துக்கும் மேலாக, இளையராஜாவின் பின்னணி இசை படத்துக்கு மிகப் பெரிய தூணாக அமைந்துள்ளது. முதல் பாதியை உக்கிரமான இசையாலும், இரண்டாம் பாதியின் அமைதியான தருணங்களை மென்மையான இசையாலும் நிரப்பி, பார்வையாளர்களுக்கு சிலிர்ப்பூட்டுகிறார். ‘கல்யாண விருந்து’ பாடலின் மூலம் 80-களுக்கே டைம் டிராவல் செய்து அழைத்துச் சென்று விடுகிறார் 83 வயது ராஜா.
சனந்த், ரிஷிகாந்த் இருவருமே சிறப்பான உழைப்பைக் கொடுத்துள்ளனர். சனந்த், இப்படித்தான் எதிர்வினைகள் வரும் என்று தெரிந்தும் இப்படி ஒரு கதாபாத்திரத்தை தேர்வு செய்ததற்கு ஸ்பெஷலாக பாராட்டலாம் . கடந்த மாதம் ‘மொத ராத்திரி’ மூலம் ஈர்த்த ரிஷிகாந்த், இந்த படத்திலும் ஒரு அடி முன்னே சென்றிருக்கிறார். முன்பே குறிப்பிட்டதைப் போல நல்ல கதைகள் அமைந்தால் நல்ல உயரங்களை எட்டும் வாய்ப்பு பிரகாசமான உள்ளது.
டோரதியாக வரும் கீர்த்தி சுரேஷுக்கு சிறிய கதாபாத்திரம் தான் என்றாலும் படம் முழுக்க வியாபிக்கிறார். மேலும், திருநங்கையாக நடித்த ஜீவா சுப்பிரமணியன் மற்றும் ‘சார்பட்டா’, ‘தாய்க்கிழவி’ படங்களில் தன் நடிப்பால் வசீகரித்த முத்துக்குமார் இதிலும் ஈர்க்கிறார்.
படம் பேசும் முக்கிய கருத்து மிகவும் துணிச்சலானதுதான் என்றாலும், அதை இறுதியில் வெறுமனே அதிர்ச்சி திருப்பத்துக்கான விஷயமாக மேம்போக்காக மட்டுமே படம் பேசியிருக்கிறதோ என்ற உணர்வும் எழாமல் இல்லை. திருநங்கைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான வன்முறைகளைக் கண்டிக்கும் படம், அதே வன்முறையைத் திரையில் கொடூரமாக காட்சிப்படுத்தி இயல்பாக்கிவிட்டு, பிறகு அதற்கு எதிராகப் பேசுவது ஏற்றுக்கொள்ளத்தக்கதாக இல்லை. பல இடங்களில் காட்சி ரீதியாக சொல்ல வேண்டிய விஷயங்கள் வலுக்கட்டாயமாக திணிக்கப்பட்ட உணர்வையே தருகின்றன.
இந்த சிற்சில குறைகள் இருந்தாலும், ஒட்டுமொத்தமாக பார்க்கும்போது வணிக அழுத்தங்கள் ஏதுமின்றி, கார்த்திக் சுப்புராஜ் தான் நினைத்த அரசியல் மற்றும் சமூகக் கருத்துகளைத் துணிச்சலாகவும், ஆகச் சிறந்த திரைமொழியிலும் பேசியதற்கே அவரை மனதார பாராட்டலாம்.
பா.ரஞ்சித்தின் ‘நட்சத்திரம் நகர்கிறது’ ஏற்கெனவே இதற்கான உரையாடல் வெளியை திறந்துவிட்டாலும், ‘டோரதி’ இதனை அடுத்தகட்டத்துக்கு எடுத்துச் சென்று இதுபோல துணிச்சலான படைப்புகள் அதிகம் வருவதற்கான பாதையை உருவாக்கியுள்ளது என்பது மறுக்க முடியாத உண்மை.