இயக்குநர் மிஷ்கின்
சசி இயக்கத்தில் விஜய் ஆண்டனி, சுவாசிகா, அஜய் திஷான், லிஜோமோல் ஜோஸ், கருணாஸ் என பலர் நடித்துள்ள படம் ‘நூறுசாமி’.
உண்மைச் சம்பவத்தை தழுவி உருவாகியுள்ள இப்படம் ஜூன் 19-ல் வெளியாகிறது. இதன் புரமோஷன் நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது. படக்குழுவினருடன் இயக்குநர்கள் வெற்றி மாறன், பா.ரஞ்சித், ஏ.ஆர்.முருகதாஸ், சரண், லிங்குசாமி, கார்த்திக் சுப்புராஜ், மிஷ்கின் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இயக்குநர் மிஷ்கின் பேசும்போது, "நான் சசியிடம் உதவியாளராகச் சேர்வதற்காக அவரை சந்தித்தேன். அவர் பத்து நிமிடம் பேசிவிட்டு, தற்போது வாய்ப்பு இல்லை என்று சொல்லிவிட்டார்.
மனிதர்களை உற்றுப் பார்த்துக் கவனித்து அவர்களுக்கு ஏதாவது பிரச்சினையா? என்பதை தாயுள்ளத்துடன் பார்க்கக்கூடியவர் சசி. நான் ஆண்களிடம் அதிசயமாகப் பார்க்கும் விஷயம் என்னவென்றால், அந்த ஆண்களிடம் இருக்கும் பெண்மைத் தன்மை.
பெண்மைத் தன்மை யாரிடமெல்லாம் அதிகமாக இருக்கிறதோ, அவர்கள் எல்லாம் மிகச் சிறப்பானவர்கள். இளையராஜா - ஏ.ஆர்.ரஹ்மான் போன்றவர்களிடம் இதுபோன்ற பெண்மைத் தன்மை அதிகமாக இருக்கும். இதனால் தான் இவர்கள் சிறந்த படைப்பாளிகளாக இருக்கிறார்கள். அப்படியானதொரு மிகச் சிறந்த பெண்மை தன்மையுடன் மனித நேயம் கொண்டவர் தான் சசி.
நாங்கள் இந்தப் படத்தைப் பார்த்தோம். விவாதித்தோம். இந்தப் படத்தின் திரைக்கதை மீது எனக்கு மாறுபட்ட பார்வை இருக்கிறது. அதைப்பற்றி சசியிடம் தனியாக விவாதிப்பேன். இந்தப் படத்தில் ஒரு தர்மம் இருக்கிறது. இந்த சமுதாயத்தின் விதிகளை எழுதிய ஆண்கள், சட்ட திட்டங்களை எழுதிய ஆண்கள், நாம் வாழும் வீதிகளில் இறக்காமல் புதைக்கப்பட்ட பெண்களை எப்படிப் பார்த்துக் கொள்ள வேண்டும்? என்பதை இந்தப் படம் சொல்கிறது” என்றார்.