தமிழில், ‘வல்லமை தாராயோ’, ‘கே.டி.என்கிற கருப்புதுரை’, இந்தியில் ‘காளிதர் லாபதா’ உள்பட சில படங்களை இயக்கி யிருக்கும் மதுமிதா, இரட்டை மகிழ்ச்சியில் இருக்கிறார் இப்போது. அவர் இயக்கி இருக்கும் ‘லவ் ஆல்வேஸ்’ என்ற வெப் தொடர், ஜியோ ஹாட்ஸ்டாரில் வெளியாகி இருக்கிறது. அடுத்து அவர் இயக்கி இருக்கும் ‘ஜான் டோ’ திரைப்படம் நவ.13-ல் வெளியாக இருக்கிறது. புரமோஷனில் பிசியாக இருந்த மதுமிதாவிடம் பேசினோம்.
ஒரே நேரத்துல வெப் சீரிஸ், திரைப்படம் என்று ரெண்டு ரிலீஸ்... எப்படியிருக்கு?
ரெண்டுமே ஒரே நேரத்துல வெளியாகறது மகிழ்ச்சியா இருக்கு. இது எதேச்சையா அமைஞ்சதுதான். பொதுவா 20, 25 வயசு இளம் வயசுக்காரங் களுக்கான ரொமான்ஸ்தான் பேசப்படுது. ஆனா, 60 வயசு ஜோடிக்கும் ரொமான்ஸ் இருக்குமில்ல; அதாவது அதோட பார்வை, வெளிப்பாடு வேற வகையா இருக்கும். எடுத்துக்காட்டா, கணவன் - மனைவி தீவிரமா சண்டைப் போட்டுட்டு இருக்கும் போது, கணவனுக்கு இருமல் வருது, அப்ப மனைவி தண்ணீர் பாட்டிலை எடுத்துக் கொடுத்தா, அதுவும் ஒரு வகையான ரொமான்ஸ்தானே.
அந்த மாதிரி ஒரு 60 வயது ஜோடி, 20 வயசானவங்களா மாறிடறாங்க, அப்ப என்ன மாதிரியான மேஜிக் நடக்குதுங்கறதுதான் ‘லவ் ஆல்வேஸ்’ வெப் தொடரோட கான்செப்ட். அதனாலதான் இதை மேஜிக்கல் ரொமான்டிக் காமெடின்னு சொல்லியிருக்கோம். கொஞ்சம் புதுசா இருக்கும். இந்த தொடருக்கு வர்ற விமர்சனங்கள் பாசிட்டிவா இருக்கு. இது கொரியால ஹிட்டான ‘ஹியர் வி கோ அகைன்’ அப்படிங்கற வெப் டூன் பாதிப்புல உருவாக்குன கதை இது. மொத்தம் 8 எபிசோட். தமிழ், தெலுங்கு, இந்தி உள்பட இந்திய மொழிகள்ல வெளியாகி இருக்கு.
கொஞ்சம் இடைவெளிக்குப் பிறகு தமிழுக்கு வந்திருக்கீங்க...
இடைவெளின்னு சொல்ல முடியாது. நான் இயக்கிய ‘கே.டி’ படத்தோட ரீமேக்-கை இந்தியில பண்ணினேன். அபிஷேக் பச்சன் முதன்மை வேடத்துல நடிச்சார். அதுல பிசியா இருந்ததால உடனடியா தமிழ்ல படங்கள் பண்ணல. இப்ப இந்த வெப் தொடரையும் ‘ஜான் டோ’ படத்தையும் தமிழ்லதான் பண்ணியிருக்கேன்.
‘ஜான் டோ’ சைக்காலஜிக்கல் த்ரில்லர்னு சொன்னாங்களே?
ஆமா. இது கேரளா - தமிழ்நாடு பார்டர்ல நடக்கிற கதை. ஒரு உடல் கேரளா பார்டர்ல கண்டுபிடிக்கப் படுது. அதன் பின்னணியில நடக்கிற கதைதான் படம். ‘மகாராஜா’ மாதிரி ரெண்டு கதை மாறி மாறி நடக்கும். எந்த இடத்துல ரெண்டும் இணையுதுங்கறதுதான் படம். அர்ஜுன் தாஸ் முதன்முறையாக போலீஸ் கேரக்டர்ல நடிச்சிருக்கார்.
போலீஸ்னா, வழக்கமான போலீஸ் கேரக்டரா இருக்காது. ஹீரோயிசம் இல்லாத போலீஸ் அதிகாரி. சஞ்சனா நடராஜனும் போலீஸ் அதிகாரியா வர்றாங்க. அவங்களும் வழக்கமான போலீஸா இருக்கமாட்டாங்க. அப்புறம் சிருஷ்டி, ஜாரா... இன்னும் நிறைய பேர் நடிச்சிருக்காங்க. இது சைக்காலஜிக்கல் த்ரில்லர் படம்தான். ஜாரா ஒரு 17 வயது டீன்- ஏஜ் பெண்ணா வர்றாங்க. எல்லாருமே அவங்கவங்க கேரக்டருக்கு ரொம்ப பொருத்தமா இருப்பாங்க.
நிறைய த்ரில்லர் படங்கள் வருது... அதுல இருந்து இது எப்படி வித்தியாசப்படுது?
அதை இப்பவே சொல்ல முடியாது. சொன்னா, சஸ்பென்ஸ் போயிடுமே! ஆனா, கண்டிப்பா வித்தியாசமான ட்ரீட்மென்டா இருக்கும். நானும் ஸ்கிரிப்ட் ரைட்டர் நிக்கோலஸ் செவாலியரும் சேர்ந்து கதை, திரைக்கதை எழுதி இருக்கோம். ‘நான் இதுக்குலாம் தகுதியானவனா?
நான் சரியான மகனா, மகளா? சரியான மனைவியா?’ன்னு பொதுவா எல்லாருக்குள்ளயும் ஒரு கேள்வி இருக்கும்ல. அந்த கேள்விதான் இந்தப் படம். ‘பாகுபலி’யை தயாரிச்ச அர்கா மீடியா ஒர்க்ஸ் தயாரிச்சிருக்காங்க. கண்டிப்பா இந்தப் படம் புது அனுபவத்தை தருங்கறது என் நம்பிக்கை.
‘ஜான் டோ’ -ன்னா என்ன?
‘ஜான் டோ’ - ங்கறது கேரக்டரோட பெயரில்லை. அது அடையாளம் தெரியாத அல்லது உறுதிப்படுத்த முடியாத ஒருவரைக் குறிக்கிற சொல். அதனாலதான் ‘அவன் யார்?’ அப்படிங்கற டேக் லைன் வச்சிருக்கோம். அது பாதிக்கப்பட்டவரா இருக்கலாம், போலீஸா இருக்கலாம், அல்லது யாராகவும் இருக்கலாம். ‘அவன் யார்?’ ங்கற ஆர்வம் தான் ஜான் டோ.
மலையாள ‘அங்கமாலி டைரீஸ்’ படத்தை இந்தியில ரீமேக் பண்றதா சொல்லி இருந்தீங்களே?
அது ரீமேக் இல்லை. அந்தப் படத்தோட தழுவல்னு சொல்லலாம். அர்ஜுன் தாஸ் ஹீரோவா பண்ணியிருக்கார். படப்பிடிப்பு ஏற்கெனவே முழுமையா முடிஞ்சிடுச்சு. இப்ப போஸ்ட் புரொடக் ஷன் வேலைகள் போயிட்டு இருக்கு. அடுத்த ஆண்டு தொடக்கத்துல படம் வெளியாகும்.