தமிழ் சினிமா

“இந்த வயசுல நடிகன் என்கிற வாய்ப்பு வரப்பிரசாதம் தான்!” - இயக்குநர் கஸ்தூரி ராஜா நேர்காணல்

செ. ஏக்நாத்ராஜ்

மீரா கதிர​வனின் ‘ஹபீபி’ மூலம் முழுநேர நடிக​ராகி இருக்கிறார் இயக்​குநர் கஸ்​தூரி ராஜா. வாழ்​வின் பல்​வேறு இக்​கட்​டு​களைச் சந்​தித்து நிற்​கிற யூசுப் என்​கிற தென்​மாவட்ட இஸ்​லாமிய குடும்பத் தலை​வ​ராக அந்​தப் படத்தில் வாழ்ந்​திருக்​கிறார் அவர். இயக்குந​ராக, பாடலாசிரிய​ராக, தயாரிப்​பாள​ராக அறியப்​பட்ட அவருக்கு நடிப்பு புதிது.

எப்​படி தோன்​றியது நடிப்பு ஆர்​வம்?

ஆரம்​பத்​துல எனக்கு நடிக்​கிறதுல அதிக ஆர்​வ​மில்​லை. நான் இயக்​குநரா இருந்​தப்ப, எல்​லோருக்​கும் நடிப்​புச் சொல்​லிக் கொடுக்​கும் போது, “இதுக்கு பேசாம நாமளே நடிச்​சிரலாம்​”னு தோணிருக்​கு. அது ஒரு கோபத்​துல நினைச்​சதா இருந்​திருக்கே தவிர, நடிக​னாகவே களமிறங்​கணும்னு நினைச்ச தில்ல. சண்​முக பாண்​டியனோட அப்பாவா ‘படைவீரன்’ல நடிச்​சேன்.

அப்​புறம் இயக்​குநர் மீரா கதிர​வன் ‘ஹபீபி’ ஸ்கிரிப்ட்டை கொடுத்து வாசிக்​கச் சொன்​னார். “உங்​களுக்கு பிடிச்சிருந்தா பண்​ணுங்க” ன்னார். அந்​தப் படத்​துல என்னோட கதாபாத்திரத்துல ஆழமான, மனசைத் தைக்கிற வாழ்க்கை இருந்ததை பார்த்​தேன். ஏற்ற இறக்கங்​கள் கொண்ட ஒரு மனுஷனோட முழு​மை​யான வாழ்க்கை பிடிச்​சிருந்​தது. சரி, பண்ணிப்​பார்த்தா என்னன்னு தோணுச்​சு. நடிக்​கிறேன்னு சொல்லிட்டேன்.

இயக்​குநரா படப்​பிடிப்​புல இருந்​ததற்​கும் நடிகரா ஸ்பாட்ல இருக்​கறதுக்​கும் என்ன வித்​தி​யாசம் தெரி​யுது?

இயக்​குநர் அப்​படிங்​கும்​போது ஆசிரியனா இருந்திருப்பேன். நடிக​னா, அப்​படி உணர முடி​யாது. ‘ஹபீபி’ படத்​துல என்​னோட நடிச்​சவங்க எல்​லாருமே புது​முகங்​கள் அப்​படிங்​கற​தால, நடிக்​கறதுக்​கும் பழகறதுக்கும் எனக்கு ரொம்ப எளிமையா இருந்​தது. மற்றபடி வித்​தி​யாசமா எது​வும் தெரியலை. இயக்​குநர் உள்பட எல்​லோருமே என்னை ஒரு தந்தை மாதிரியே படப்பிடிப்​புல நடத்​தி​ய​தால கடினமா இல்​லை. ஆனா, அந்த கேரக்​டர் கடின​மானதுன்னு இப்ப எல்​லோரும் சொல்றாங்க.

எனக்கு நம்ப முடியல. இதுக்கு மேல​யும் என்​னால பண்ண முடி​யும் அப்​படிங்கற நம்​பிக்கை வந்​திருக்​கு. பட புரமோஷனுக்​காக நிறைய ஊர்​களுக்கு போயிட்டு வந்தோம். இஸ்​லாமிய மக்​கள் எல்​லோரும் கொண்டாடுறாங்க. கையை பிடிச்​சுக்​கிட்டு அழறாங்க. இந்த முகத்​துல அப்​படி என்ன கண்​டு​பிடிச்​சாங்​கன்னு எனக்​குத் தெரியல. சினிமா துறை​யில​யும் நிறைய பேர் படம் பார்த்​துட்​டுப் பாராட்​டி​னாங்க. அவங்க பாராட்​டும்​போது நமக்​குள்ள ஒரு போதை ஏறுது.

என்னை எழுத்​தாளனா மாத்​தி​யது இயக்​குநர் விசு சார். என்னை இயக்​குநரா அறி​முகப்​படுத்தி மறு​பிறப்​பைக் கொடுத்​தவர் ராஜ்கிரண். என்னை முழு​மை​யான நடிகனா மாற்றி இருக்​கிறவர் மீரா கதிர​வன். இந்த வயசுல எனக்கு இப்​படியொரு வாய்ப்பு வர்​றது வரப்​பிர​சாதம்​தான். அதைக் கொடுத்த மீரா கதிர​வனுக்கு நன்றி கடன் பட்டிருக்​கேன்.

இனி தொடர்ந்து நடிப்​பு​தா​னா?

வேற என்ன பண்​றது? இயக்​குந​ரா, சினி​மாவுல என்னை நம்பி பணம் போட்​ட​வங்க யாரும் நஷ்டமடைஞ்​ச​தில்​லை. இப்​ப​வும் அப்​படி படம் இயக்க ஆர்​வம் இருக்​கு. என்ன இருந்​தா​லும் இயக்​குநர்ங்​கறது கர்​ணனுக்கு கவசக் குண்டலம் மாதிரி என்​னோடவே பிறந்​தது. நடிப்பு இடையில வந்​ததுன்​னாலும் அது பெரிய ஈர்ப்பை கொடுத்திருக்​கு. நடிப்பை தொடர்​வேன். எந்த கதையா இருந்​தா​லும் அதுல ஒரு சவால் இருக்​கணும்னு நினைக்கிறேன்.

ஒரு நாள், இரண்டு நாள் வேலைன்​னாலும் அதுல என் கேரக்​டருக்கு முக்​கி​யத்​து​வம் இருக்​கணும். அப்​படி இருந்தா பண்​ணுவேன். அருண் மாதேஸ்​வரன் இயக்கி இருக்​கிற ‘டிசி’ படத்​துல லோகேஷ் கனக​ராஜுக்கு அப்​பாவா நடிச்​சிருக்​கேன். அதுல 4 நாள் வேலை தான். ஆனா, சேலஞ்​சிங்கா இருந்​தது. அடுத்து சசிகு​மாருக்கு அப்​பா​வா, ‘எவிடென்​ஸ்’ படத்​துல நடிச்​சிருக்​கேன். நல்ல வேடங்​களை எதிர்​பார்க்​கிறேன். நெகட்​டிவ் கதா​பாத்​திரத்தை விரும்பறேன்.

உங்க மகன்​கள் செல்​வ​ராகவன், தனுஷ் இரண்டு பேருமே நடிக​ரா, இயக்​குநரா நல்ல இடத்​துல இருக்​காங்க. நீங்களும் அவங்க இடத்​துக்கு வந்​திருக்​கீங்​க...

மகிழ்ச்​சி​தான். அவங்க ‘ஹபீபி’ பார்த்​துட்டு நல்லா பண்ணி​யிருக்​கீங்​கப்​பான்னு சொன்​னது பெரிய விஷ​யம். உலகம் பூரா படம் பார்த்​தாங்க, நான் பயப்​படலை. என் மகன்​கள் படம் பார்க்​கிறாங்க அப்​படின்​னதும் பயந்துட்டேன். ஆனா, அவங்க நல்லா பண்ணியிருக்கிறதா சொன்​னது மகிழ்ச்​சியா இருக்​கு. எங்கப்பா என்னை ஆசிர்​வாதம் பண்​ணின மாதிரி, என் பிள்​ளை​கள் எனக்கு ஆசிர்​வாதம் பண்​ணி​னாங்க.

உங்க பேரன் பவீஷ் நாராயணனும் ஹீரோ​வாகி இருக்கிறார். உங்க குடும்​பத்​துல நிறைய பேர் சினிமாவுக்கு வந்துட்​டாங்​க...

இறைவனோட ஆசிர்​வாதம்​தான். அது இல்​லாம இங்க எதுவுமே நடக்​காது. ஊர்ல இருந்து வந்து சென்​னை​யில நான் கால் வைக்​கும் போது தனி​யாள். என் கையில காசே இல்​லாம வந்து இறங்​கினேன். சினி​மாவுக்கு முயற்​சியே பண்​ணல. ஆனா, சினிமா தனக்கு வேண்​டிய ஆட்​களை அதுவே தேர்ந்​தெடுத்​துக்​கும் போலிருக்​கு. அந்த மாதிரி என்னை விடாம துரத்தி துரத்தி இழுத்​துட்டு வந்​தது. ஒரு கட்​டத்​துல சினி​மாவோட தூண்​டில்ல அகப்​பட்​டுட்​டேன். சினிமா என்​னைப் பக்​கு​வப்​படுத்தி படங்​கள் இயக்க வச்சிருக்​கு. ஒரு 25 படங்​கள் பண்​ணி​யிருக்​கேன்.

தரமான படங்​கள்னு சொல்ற மாதிரி​தான் என் படங்​கள் இருக்​கும். அடுத்து என் மகன்​கள் சினி​மாவுக்கு வந்​தாங்க. இப்ப பேரப்​பிள்​ளை​கள் வந்​தாங்​கன்னா அது அதிர்ஷ்டம்தான். பார​தி​ராஜா சார் சொல்​வார், “நீ கடவுளால ரொம்​ப​வும் ஆசிர்​வ​திக்​கப் பட்​ட​வன்​யா”ன்​னு. இப்ப பவிஷ் வந்​திருக்​கார். அடுத்து யாத்ரா வரு​வார்... என் குடும்​பத்​துல இருந்து இன்​னும் அஞ்​சாறு பேர் வரு​வாங்க. சினி​மா​தான் நிரந்​தரம்னு ஆனப்​பிறகு என்ன பண்ண முடியும்? சினிமா மூலமா மக்​கள் மனசுல நிறைஞ்சிருக்கிறது பெரிய விஷ​யம்.

நீங்க சிறந்த பாடலாசிரியர் கூட. ‘தூது​வளை இலை அரைச்சி’, ‘கூவுற குயிலு சேவலை பார்த்​து’, ‘பஞ்​சுமிட்​டாய் சேலை கட்​டி’ன்னு உங்​களோட பல பாடல்கள் இப்​ப​வும் டிரெண்​டிங்ல இருக்கு...

ஆமா. அந்​தப் பாடல்​களை எழு​தி​யது நான்​தான்னு யாருக்கும் தெரியல. அந்த காலத்​துலயே என்னை நான் விளம்​பரப்​படுத்​திக்​கலை. கிராமத்​துல இருந்து வந்​த​தால என்னை மார்க்​கெட்​டிங் பண்​ண எனக்குத் தெரியல. இன்னைக்கு மீரா கதிர​வன் கூட ‘ஹபீபி’ புரமோஷனுக்கு போகும்​போது மார்க்​கெட்​டிங் விஷ​யங்​களை பார்த்து எனக்கு எது​வுமே புரியல. எங்க காலத்​துல அப்​படி இல்லையே. அன்​னைக்கு இருந்த மக்​களும் அவங்​களோட ரசனை​யுமே வேற. அவங்க ஒரு கட்​டுப்​பாட்​டுக்​குள்ள இருந்​தாங்க. அம்​மா, அப்​பா, அண்​ணன், தம்​பி, அக்​கான்னு பாசத்​துக்கு முக்​கி​யத்​து​வம் கொடுத்​தாங்க. அதனால அந்த மாதிரி​யான பாடல்​களை ரசிச்சாங்க. இன்​னைக்கு அது தேவைப்​படலை.

இன்​றைக்கு வரு​கிற பாடல்​கள் பற்றி என்ன நினைக்கிறீங்க? உங்க வீட்​டுலயே ஒரு ‘பொயட்​டு’ (தனுஷ்) இருக்​காரே?

காலத்​துக்கு தகுந்த மாதிரி இன்​றைய பாடலாசிரியர்​கள் எழுதறாங்க. பழைய மாதிரி கதைக்​குத் தேவை​யானது, ரசிகர்​களுக்​குத் தேவை​யான மாதிரி எழுதறத விட்​டுட்​டு, இசைக்​கான சந்​தத்​துக்​காகத்​தான் எழுதறாங்க. அதுக்குள்ள ஏதாவது விஷ​யம் இருக்​கணும்னு நினைக்கறதில்ல. நான் என்​னோட ‘வீரத்​தாலாட்​டு’ படத்துல, “வாடிப்​பட்டி மாப்​பிள்ளை எனக்கு வாக்​கப்​பட்டு வார​முண்டு வாக்​குச் சொல்​லிப் போனவளே நாகரத்தினமே”ங்கற பாடலை எழு​தினேன்.

இந்​தப் பாடலை இளை​ய​ராஜாகிட்ட பாடியே கொண்டு போய் கொடுத்​ததும் அதை அப்​படியே வச்​சார். இன்னைக்கு அப்​படி ரைமிங்​கோட எழுதற​தில்​லை. தனுஷ் பாடல்​கள் எழு​திட்டு எனக்​குப் போட்​டுக் காண்​பிப்​பார். நல்​லா​யிருக்​கும். அவர் என் மகன் அப்​படிங்​கறதுக்​காகச் சொல்​லல. அவர்​கிட்ட பாட்டு எழுதும் திறமை இயல்பாகவே இருக்​கு. செல்​வ​ராகவனும் அரு​மையா பாடல்​கள் எழுது​வார்.

அன்​னைக்கு இருந்த சினி​மா​வில​யும் இன்​றைக்கு இருக்கிற சினி​மா​வில​யும் என்ன மாற்​றத்​தைப் பார்க்கிறீங்க?

அன்​னைக்கு எல்​லாமே ஒரு கட்​டுப்​பாட்​டுக்​குள்ள இருந்தது. ஒரு கதைன்னா அதை எழுதி முடிச்​சுட்​டு, ஷூட்டிங் போறதுங்கற ஒழுங்கு இருந்​தது. இன்​னைக்கு வேக​மான தொழிலா சினிமா மாறி​யிருக்​கு. அது எங்க போயி இடிக்​கும்னு தெரி​யாது. அந்த காலத்​துல, தட்டி கீழே விழுந்தா கூட மறு​படி​யும் எழுந்​திரிச்​சிரு​வாங்க. அந்த கால இயக்​குநர்​களை எடுத்​துகிட்​டா, கே.​பாலசந்​தர் சார்லாம் 130 படங்​கள் இயக்கி இருக்​கார். ராமநாராயணன் 120 படம் எடுத்​திருக்​கார். இன்​னைக்​கு எடுக்​க முடி​யு​தா? 5, 6 படங்​களுக்​கு மேல தாண்​டறதே கஷ்ட​மா இருக்​கு. 25 படத்​துக்​கு மேல என்​னாலயே தாண்​ட முடியலையே! இது​தான்​ ​மாற்​றம்​. ​மாற்​றங்​கள்​ தவிர்​க்​க முடி​யாதது​தானே!

- செ.ஏக்நாத்ராஜ் | தொடர்புக்கு egnathraj.c@hindutamil.co.in

SCROLL FOR NEXT