எனது திரைக்கதையை நானே இயக்குவேன் என்று ஒருபோதும் நினைக்கவில்லை என ‘96’ படத்தின் இயக்குநர் சி.பிரேம்குமார் அப்படம் குறித்து நினைவுகூர்ந்துள்ளார்.
மீண்டும் மீண்டும் மறுபதிப்புகளை சந்திக்கும் மக்கள் மனம் கவர்ந்த நாவல்களைப் போல, வெளியான நான்கு ஆண்டுகளுக்குள் மூன்றாவது முறை மறுவெளியீட்டை சந்தித்திருக்கிறது சி.பிரேம்குமார் இயக்கத்தில் வெளியான ‘96’ படம்.
பார்க்கும் எல்லோரையும் ஏதோ ஒரு காட்சியில், சட்டகத்தில் அவர்களின் பள்ளி, கல்லூரி காலத்தை பொருத்திப் பார்த்துக் கொள்ளச் செய்யும் ராம்-ஜானுவின் ரசவாத வித்தை இந்த மாயத்துக்கு காரணமாக இருக்கலாம். விஜய் சேதுபதி - த்ரிஷா கூட்டணியில் கடந்த 2018-ம் ஆண்டு வெளியான ‘96’ படம். இந்த அக்டோபர் 4-ம் தேதியுடன் அதன் எட்டாவது ஆண்டை நிறைவு செய்திருக்கிறது. இந்த நிலையில் இன்று (அக்.9) மீண்டும் மறுவெளியீடு கண்டிருக்கிறது.
கடந்த நூற்றாண்டின் செழுமைகளையும், புதிய நூற்றாண்டின் புதுமைகளையும் ஒருசேர அனுபவிக்கும் வாய்ப்பு பெற்றவர்கள் நாங்களே என பெருமைப்பட்டுக் கொள்ளும் 90-ஸ் கிட்ஸ்களின் எழுதப்படாத காதல் திரை காவியமாக பார்க்கப்படும் இந்தப் படத்தின் நினைவுகளை அதன் இயக்குநர் சி.பிரேம்குமார் பகிர்ந்துள்ளார். அவரின் நினைவு பரணிலிருந்து ராம் - ஜானுவின் இந்த நியாபகங்கள்...
“இது ஒரு நெகிழ்ச்சியூட்டும் விஷயம் தான். இந்தப் படத்தின் ஒவ்வொரு ஆண்டு கொண்டாட்டத்தின் போதும் நான் ஒரு போஸ்டரை வெளியிடுவேன். அது... ஒன்று, இரண்டு... எட்டாவது ஆண்டாக இருந்தாலும் சரி! இன்று வரை இந்தப் படம் குறித்து நான் கேட்கும் எதிர்வினைகள் ஆச்சரியமூட்டுவதாக இருக்கிறது. எப்படி ஒரு படத்தின் மீது இந்த அளவுக்கு அன்பு செலுத்த முடிகிறது என்பதை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை.
கதைகளை நான் தேர்வு செய்வது இல்லை, கதைதான் என்னைத் தேர்ந்தெடுக்கிறன. இதை நான் தீவிரமாக நம்புகிறேன். இது தன்னடக்கம் இல்லை. ஒரு விஷயத்தை எழுதுவதற்கு அந்த அனுபவம் இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. அந்த உணர்வுடன் உங்களை பொருத்திக் கொள்ளவோ, அதை புரிந்து கொள்ளவோ, அதை உணரவோ முடிந்தால் போதும் உங்களால் அதை எழுத முடியும்.
‘96’ படத்தின் கதை அனுபவம் என்னுடையது இல்லை. என் நண்பர்கள் சிலருக்கு அந்த அனுபவம் இருக்கிறது. நண்பர் ஒருவருக்கு இது நடந்த போது, அதை என்னால் புரிந்து கொள்ள முடிந்ததால் எனக்குள் உற்சாகம் ஏற்பட்டது.
தன் சிறுவயது காதலி மீது அவர் வைத்திருந்த அன்பை அந்த உணர்வின் தீவிரத்தை என்னால் உணர முடிந்ததால் அதை கதையாக எழுதினேன்.
என்னுடைய திரைக்கதையை நானே இயக்குவேன் என நினைத்துப்பார்த்தே இல்லை. ஆனால், அதுவும் நடந்தது. திரைக்கதையை எழுதி, வேறு ஒரு இயக்குநரிடம் கொடுக்கவே நினைத்திருந்தேன்.
‘96’ படத்தின் மீது எனக்கு எந்த எதிர்பார்ப்பும் இல்லை. அதைத் திரைக்கதையாக எழுதி முடித்ததும் எனது பாதி எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகி விட்டது. திரைக்கதையை எழுதி நடிகர்கள், தயாரிப்பாளர், இசையமைப்பாளர், பாடலாசிரியர்களிடம் அதைச் சொல்லி சம்மதிக்க வைத்து குழுவாக இயங்க முடிந்ததே எனக்கு சந்தோஷமாக இருந்தது.
ராம் – ஜானு பற்றி எழுதும் போதே என் மனதில் விஜய் சேதுபதியும், த்ரிஷாவும் தான் இருந்தனர். விஜய் சேதுபதியின் தேதி கிடைத்து, த்ரிஷாவின் தேதி கிடைக்காததால் பலர் நாயகியை மாற்றும்படி அழுத்தம் கொடுத்தனர். ஒருவழியாக அவரின் தேதி கிடைத்து எல்லாம் நல்லபடியாக முடிந்தது.
எனக்கு அதிர்ஷ்டத்தின் மீது நம்பிக்கை இல்லை. சரியான நேரத்தில் சரியான இடத்தில் இருப்பது என்பது அதற்காக நாம் மேற்கொள்ளும் முயற்சியைப் பொறுத்து அமைகிறது. இந்தத் திரைக்கதையுடன் விஜய் சேதுபதி, த்ரிஷாவை நான் அணுகி இருக்காவிட்டால் ‘96’ படமே உருவாகி இருக்காது.
ஒரு படைப்பை உருவாக்கி பார்வையாளர்களிடம் கொடுத்ததும் கலைஞனாக எனது பணி முடிந்து விடுகிறது. ஏமாற்றங்களை தவிர்த்துக்கொள்ள எதிர்பார்ப்புகள் இல்லாதவனாகவே இருக்க முயற்சிக்கிறேன்” என்றார்.
தன்னுடைய படங்களைப் போலவே அது குறித்த நினைவுகளையும் ஆர்ப்பரிப்பில்லாமல் அழகாக, சலனமில்லாமல் ஓடும் சிற்றோடையைப் போல பகிர்ந்து கொண்டார் சி.பிரேம்குமார்.