இயக்குநர் விஜய் தான் எனது குரு என்று இயக்குநர் பாலா புகழாரம் சூட்டியிருக்கிறார்.
விஜய் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘காதல் ரீசெட் ரிப்பீட்’. ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ள இப்படத்தில் மதும்கேஷ், ஜியா சங்கர், அர்ஜுன் அசோகன், எம்.எஸ்.பாஸ்கர், ஜெயபிரகாஷ், விஜி சந்திரசேகர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இதன் ஓளிப்பதிவாளராக அரவிந்த் கிருஷ்ணா, எடிட்டராக ஆண்டனி ஆகியோர் பணிபுரிந்துள்ளனர்.
மார்ச் 6-ம் தேதி வெளியாகவுள்ள இப்படத்தின் அறிமுக விழா சென்னையில் நடைபெற்றது. இதில் படக்குழுவினருடன் சிறப்பு விருந்தினராக பாலாவும் கலந்து கொண்டார். இந்த விழாவில் பாலா பேசும் போது, “இயக்குநர் விஜய் தான் எனது குரு. ஜூனியராக இருக்கலாம். இருந்தாலும் எந்த டெக்னீஷனாக இருந்தாலும் எப்படி கடுமையாக உழைக்க வேண்டும் என்பதை எனக்கு கற்றுக் கொடுத்த குரு இயக்குநர் விஜய் தான்.
ஒரே வார்த்தையில் சொல்ல வேண்டும் என்றால் அவர் எனக்கு தாயுமானவன். என்னுடைய நல்லது கெட்டது என அனைத்திற்கும் முதல் ஆளாக நின்று பங்கெடுப்பது அவன் தான். தாயும் தகப்பனுமாக இருந்து என்னை பார்த்துக் கொண்டிருக்கிறான். ஹாரிஸ் ஜெயராஜ் தயாரிப்பாளர்கள் புதுமுக நடிகர்கள் என அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
'மதயானை கூட்டம்' படத்தில் நடித்த விஜி சந்திரசேகரின் மிகப்பெரிய ரசிகன் நான். அந்தப் படத்தில் ஒரு காட்சியில் மனதில் நினைத்ததை கண்களிலேயே காட்டி இருப்பார். அதுபோன்ற திறமை நூற்றில் ஒருவருக்கு தான் வரும். எனக்குப் பிடித்த நடிகை ராதிகா. அதற்கடுத்து நீங்கள் தான். உங்களை நான் இந்த விழாவில் நேரில் சந்தித்ததற்கு நன்றி.” என்று பேசினார் இயக்குநர் பாலா.