டிஜிட்டல் சினிமா யுகத்தில் திரைப்படத் தயாரிப்பின் மிக முக்கியமான தொழில்நுட்பக் கலைஞர்களில் ஒருவர் டிஜிட்டல் இமேஜிங் டெக்னீஷியன் (DIT) ஆவார்.
ஒரு காலத்தில் படப்பிடிப்பு முடிந்தவுடன் ஃபிலிம் ரோல்கள் லேப்களுக்கு அனுப்பப்பட்டு, அவை பாதுகாப்பாக டெவலப் செய்யப்பட்ட பிறகே ஒளிப்பதிவாளரும் இயக்குநரும் நிம்மதியடைந்தனர்.
இன்று ஃபிலிம் லேப்கள் இல்லையென்றாலும் அந்தப் பொறுப்பு மறைந்துவிடவில்லை. அது டிஐடி என்ற நவீன தொழில்நுட்பக் கலைஞரின் தோள்களுக்கு வந்து சேர்ந்துள்ளது.
பலருக்கு டிஐடி என்றால் மெமரி கார்டிலிருந்து ஹார்டு டிஸ்க்கிற்கு காட்சிகளை காப்பி செய்பவர் என்ற எண்ணம் உள்ளது. ஆனால் அது அவருடைய வேலையின் சிறு பகுதி மட்டுமே.
உண்மையில் டிஐடி என்பவர் படப்பிடிப்பு தளத்திலேயே செயல்படும் ஒரு நடமாடும் டிஜிட்டல் ஃபிலிம் லேப்புக்கு ஒப்பானவர். ஒளிப்பதிவாளரின் கலைநோக்கையும், கேமராவில் பதிவான டிஜிட்டல் தரவுகளையும் பாதுகாத்து, அவற்றை போஸ்ட் புரொடக் ஷன் வரை எந்த இழப்புமின்றி கொண்டு செல்லும் பெரிய பொறுப்பு அவருடையது.
கேமரா அறிவு மற்றும் ஒர்க்ஃப்ளோ
ஒரு சிறந்த டிஐடி-க்கு ஆரி, ரெட், சோனி வெனிஸ், பிளாக் மேஜிக், கேனான் சினிமா இஓஎஸ் போன்ற நவீன சினிமா கேமராக்களின் தொழில்நுட்ப அறிவு இருக்க வேண்டியது அவசியம்.
ஒவ்வொரு கேமராவும் வெவ்வேறு கலர் சயின்ஸ், RAW பதிவு முறை, Color Space மற்றும் Gamma அமைப்புகளைக் கொண்டிருப்பதால், அவற்றை எடிட்டிங் மற்றும் கலர் கிரேடிங் ஒர்க்ஃப்ளோவுக்குச் சரியாகத் தயார்படுத்துவது டிஐடி-ன் முக்கியப் பொறுப்பாகும்.
கேமராவைப் பற்றி அறிந்திருப்பதோடு மட்டுமல்லாமல், எடிட்டிங், கலர் கிரேடிங் மற்றும் விஎஃப்எக்ஸ் ஒர்க்ஃப்ளோ பற்றியும் தெளிவாக அறிந்திருக்க வேண்டும். ஏனெனில், படப்பிடிப்பில் தொடங்கும் டிஜிட்டல் பயணம் இறுதியில் திரையரங்கில் முடிகிறது.
படப்பிடிப்புத் தளத்தின் தொழில்நுட்பக் கண்கள்
படப்பிடிப்பு நடைபெறும் போது டிஐடி, கேமராவில் இருந்து வரும் லைவ் ஃபீடை (Live Feed) தொடர்ந்து கண்காணித்துக் கொண்டிருப்பார். Waveform Monitor, Vectorscope, Histogram மற்றும் False Color போன்ற கருவிகளின் மூலம் Exposure, Contrast, Skin Tone, Highlight Clipping மற்றும் Shadow Detail ஆகியவற்றைப் பரிசோதிப்பார்.
மேலும், சென்சாரில் தூசி உள்ளதா, டிஜிட்டல் நாய்ஸ் ஏற்பட்டுள்ளதா, போகஸ் அல்லது இமேஜ் குவாலிட்டியில் பிரச்சினைகள் உள்ளனவா என்பதையும் உடனுக்குடன் கண்டறிந்து ஒளிப்பதிவாளரிடம் தெரிவிப்பார். இதனால் விலைமதிப்பற்ற நேரமும் காட்சிகளை மீண்டும் படமாக்க வேண்டிய நிலையும் தவிர்க்கப்படுகிறது.
டிஜிட்டல் நெகட்டிவ் மற்றும் On-Set Grading இன்றைய திரைப்படங்களில் பெரும்பாலான காட்சிகள் RAW அல்லது Log வடிவத்தில் பதிவு செய்யப்படுகின்றன. இவை இறுதி நிறத்துடன் இருப்பதில்லை; மாறாக அவை டிஜிட்டல் நெகட்டிவ்களாகச் செயல்படுகின்றன.
இயக்குநரும் தயாரிப்பாளரும் காட்சியின் உண்மையான தோற்றத்தைப் பார்க்கும்படி டிஐடி, எல்யுடி(Look Up Table) மற்றும் சிடிஎல் (Color Decision List) ஆகியவற்றைப் பயன்படுத்தி தற்காலிக வண்ண அமைப்பை உருவாக்குகிறார். இதனால் ஒளிப்பதிவாளர் நினைத்த காட்சித் தோற்றம் படப்பிடிப்பு தளத்திலேயே அனைவருக்கும் தெளிவாகத் தெரிகிறது.
தரவு பாதுகாப்பு
ஒரு மெமரி கார்டு என்பது வெறும் சேமிப்பகம் மட்டுமல்ல; நடிகர்களின் நடிப்பு, நூற்றுக்கணக்கான தொழில்நுட்பக் கலைஞர்களின் உழைப்பு, இயக்குநரின் கனவு மற்றும் தயாரிப்பாளரின் முதலீட்டை தன்னுள் பாதுகாத்து வைத்திருக்கும் டிஜிட்டல் நெகட்டிவ்.
அதனால் டிஐடி, சாதாரண காப்பி பேஸ்ட் முறையைப் பயன்படுத்து வதில்லை. Checksum Verification (MD5, SHA) போன்ற பாதுகாப்பு முறைகளின் மூலம், தரவுகளை இரண்டு அல்லது மூன்று தனித்தனி ஹார்டு டிஸ்க்குகளில் பாதுகாப்பாக நகலெடுக்கிறார். இதுவே டிஜிட்டல் சினிமாவின் மிக முக்கியமான பாதுகாப்பு செயல்முறையாகும்.
போஸ்ட் புரொடக் ஷனுக்கான பாலம்
படப்பிடிப்பு முடிந்தவுடன் டிஐடி-ன் வேலை முடிவடைவதில்லை. அவர் எடிட்டர்களுக்கான புராக்ஸி ஃபைல்ஸை உருவாக்குகிறார். தனியாகப் பதிவு செய்யப்பட்ட ஒலியைக் காட்சிகளுடன் ஒத்திசைக்கிறார். காட்சி ஃபிரேம் ரேட் போன்ற மேடா டேட்டாக்களையும் ஒழுங்குபடுத்துகிறார்.
பின்னர் எடிட்டிங், விஷுவல் எபெக்ட்ஸ் மற்றும் கலர் கிரேடிங் என அனைத்துக்கும் இந்தத் தகவல்கள் அடிப்படையாக அமைகின்றன. அதனால் டிஐடி என்பவர் கேமராவுக்கும் போஸ்ட் புரொடக் ஷனுக்கும் இடையிலான முக்கியமான பாலமாகக் கருதப்படுகிறார்.
ஒளிப்பதிவாளரின் டிஜிட்டல் துணை
ஒரு டிஐடி தினமும் ஒளிப்பதிவாளர், கேமரா உதவியாளர்கள், சவுண்ட் துறை, எடிட்டர், விஎஃப்எக்ஸ் குழு மற்றும் கலரிஸ்ட் ஆகியோருடன் இணைந்து பணியாற்றுகிறார். படப்பிடிப்புத் தளத்தில் உருவாக்கப்பட்ட LUT, Metadata மற்றும் கேமரா ரிப்போர்ட்ஸ் அனைத்தும் இறுதி கலர் கிரேடிங் வரை சரியாகச் சென்றடைவதை அவர் உறுதி செய்கிறார்.
இதன் மூலம் ஒளிப்பதிவாளர் கற்பனை செய்த நிறங்களும் ஒளியும் எந்த மாற்றமுமின்றி பார்வையாளர்களைச் சென்றடைகின்றன. ஒரு காலத்தில் திரைப்படம் ஃபிலிம் கேன்களுக்குள் பாதுகாக்கப்பட்டது.
இன்று அது மிகச்சிறிய மெமரி கார்டுகளுக்குள் வாழ்கிறது. அந்த டிஜிட்டல் நெகட்டிவ்களைப் பாதுகாத்து, ஒளிப்பதிவாளரின் பார்வையை எந்த இழப்புமின்றி எடிட்டிங் அறைக்கும், கலர் கிரேடிங் ஸ்டூடியோவுக்கும், இறுதியில் திரையரங்குக்கும் கொண்டு சேர்க்கும் அமைதியான தொழில்நுட்பக் கலைஞர்தான் டிஐடி.
அவர் டேட்டாவை மட்டும் நகலெடுப்பதில்லை. ஒவ்வொரு ஃபிரேமையும், ஒவ்வொரு நிறத்தையும், பலரது கனவுகளையும் பாதுகாக்கிறார். பழைய ஃபிலிம் லேப்களின் பொறுப்பை இன்று ஒரே மனிதர் தனது கணினி, மானிட்டர்கள் மற்றும் தொழில்நுட்ப அறிவின் மூலம் சுமந்து செல்கிறார்.
அதனால்தான் நவீன திரைப்படத் தயாரிப்பில் டிஐடி என்பவர் ஒரு தொழில்நுட்ப நிபுணர் மட்டுமல்ல; ஒரு திரைப்படத்தின் டிஜிட்டல் பாதுகாவலரும், ஒளிப்பதிவாளரின் நம்பிக்கைக்குரிய நண்பரும் ஆவார்.
(புதன்தோறும் ஒளிகாட்டுவோம்)
- cjrdop@gmail.com