என்னைவிட கென்னை தனுஷ் அதிகம் நம்பினார், செதுக்கியிருக்கிறார் என்று இயக்குநர் வெற்றிமாறன் பேசினார்.
கென் கருணாஸ் இயக்கி, நாயகனாக நடித்துள்ள படம் ‘யூத்’. இதில் சுராஜ் வெஞ்சுரமுடு, தேவதர்ஷினி, அனிஷ்மா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். பள்ளி பருவ வாழ்க்கையை மையமாக கொண்டு உருவாகியுள்ள இப்படம் மார்ச் 19-ம் தேதி வெளியாகவுள்ளது. இப்படத்தின் அறிமுக விழாசென்னையில் நடைபெற்றது.
இதில் படக்குழுவினருடன் சிறப்பு விருந்தினராக நடிகர் தனுஷ் மற்றும் இயக்குநர் வெற்றிமாறன் ஆகியோர் கலந்து கொண்டார்கள். இந்த விழாவில் இயக்குநர் வெற்றிமாறன் பேசும் போது, “இவ்வளவு பாசிட்டிவாக ஒரு முழு யூனிட்டாக வேலை செய்வது எல்லா படங்களிலும் நடக்காது. சில படங்களுக்கே அது அமையும்.
ஒரு டீம் இப்படியாக ஒன்றுபடுவதற்கு முக்கிய காரணம் அந்த படத்தை வழிநடத்தும் இயக்குநரின் நம்பிக்கையும் மனநிலையும் தான். கென்னுக்கு என் வாழ்த்துக்கள். கென் கதை சொல்லிய விதம் மிகவும் சிறப்பாக இருந்தது, ஒவ்வொரு காட்சிக்கும் இசை மற்றும் உணர்வுகளை இணைத்து மிகுந்த சிரத்தையோடு கதையை விளக்கினார்.
கென் ஒரு நடிகராகவும், இயக்குநராகவும் தானாக உருவான ஒருவராக இருக்கிறார். அவருக்கு தனுஷ் அளித்த நம்பிக்கையும் ஆதரவும் அவருக்கு பெரிய தைரியம் கொடுத்துள்ளது. என்னைவிட தனுஷ் அவரை அதிகம் நம்பினார், செதுக்கியிருக்கிறார். கருணாஸ் மற்றும் கிரேஸுக்கு இது மிகவும் பெருமையான தருணம்” என்று இயக்குநர் வெற்றிமாறன் பேசினார்.