சென்னை: நற்பணி இயக்கத்தின் மகளிர் அணி நிர்வாகிகளை நடிகர் தனுஷ் சந்தித்து கலந்துரையாடினார். நிகழ்ச்சியில் பங்கேற்ற பெண்களுக்கு வெள்ளி காமாட்சி விளக்கு பரிசாக வழங்கப்பட்டது.
விஜய் முதல்வரானதை தொடர்ந்து, நடிகர் தனுஷும் அரசியல் களத்தில் ஆர்வம் காட்டி வருகிறார். சமீபத்தில் கோவையில் நடைபெற்ற கூட்டத்தில் அகில இந்திய தனுஷ் ரசிகர் மன்றம் என்ற அமைப்பின் பெயர் ‘தனுஷ் நற்பணி இயக்கம்’ என மாற்றப்பட்டது. புதிய லோகோ, கொடியும் அறிமுகம் செய்யப்பட்டன. இதற்கிடையே, டெல்லிக்கு சென்ற தனுஷ், அங்கு பாஜக தலைவர்கள் சிலரை சந்தித்துப் பேசியதாகவும், ‘தமிழக எழுச்சிக் கழகம்’ என்ற பெயரில் புதிய கட்சி தொடங்கத் திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின.
இந்நிலையில், சென்னை ஓஎம்ஆர் சாலையில் உள்ள செம்மஞ்சேரி தனியார் கல்லூரியில் தனுஷ் நற்பணி இயக்கத்தின் மகளிர் அணி நிர்வாகிகள் சந்திப்பு நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. தனுஷை வரவேற்று கல்லூரி வளாகம் முழுவதும் வண்ணமயமான வரவேற்பு பதாகைகள், கட்-அவுட்கள் வைக்கப்பட்டிருந்தன. ‘பெண்களின் குரல் உயர்ந்தால்தான் சமூகத்தின் எதிர்காலமும் உயரும்’, ‘எங்கள் அன்பின் அண்ணன் தனுஷ், எங்கள் தலைவரே’ என்பது போன்ற வாசகங்கள் அவற்றில் இடம்பெற்றிருந்தன.
தமிழகம் முழுவதும் இருந்து 5,000-க்கும் மேற்பட்ட பெண்கள் இதில் பங்கேற்றதாக கூறப்படுகிறது. சிக்கன் பிரியாணி மதிய விருந்தாக அளிக்கப்பட்டது. அனைவருக்கும் ஒரு வெள்ளி காமாட்சி விளக்கும் பரிசாக வழங்கப்பட்டது.
வேட்டி, சட்டை அணிந்து நிகழ்ச்சியில் பங்கேற்ற தனுஷ், பெண்களை சந்தித்து கலந்துரையாடினார். “அனைவரையும் சந்தித்ததில் மகிழ்ச்சி. அனைவரும் நன்கு படித்து வாழ்க்கையில் வெற்றி பெற வேண்டும்” என்று மாணவர்களுக்கும் அறிவுறுத்தினார். நிகழ்ச்சியின்போது ஒரு பாடலும் பாடியுள்ளார். நிறைவாக, மகளிர் அணி நிர்வாகிகளுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டார்.