தமிழ் சினிமா

‘டி56’ பட பூஜை நிகழ்வில் தனுஷ், வடிவேலு நெகிழ்ச்சிப் பேச்சு

ப்ரியா

தனுஷ் நடிப்பில் தமிழரசன் பச்சைமுத்து இயக்கத்தில் உருவாகும் ‘டி56’ படம் மானாமதுரையில் பூஜையுடன் இன்று தொடங்கியது.

தனுஷின் வொண்டர்பார் பிலிம்ஸ் அதன் சமூக வலைதள பக்கத்தில் இந்தத் தகவலைப் பகிர்ந்துள்ளது. அதில் ‘டி56’ இனிதே ஆரம்பம். படையல் விரைவில்’ என்று தெரிவித்து படக்குழுவினர் இருக்கும் புகைப்படத்தையும் பகிரந்துள்ளது.

அந்தப் புகைப்படத்தில் தனுஷ், இயக்குநர் தமிழரசன் பச்சைமுத்துவுடன் எஸ்.ஜே.சூர்யா, பிரித்தி முகுந்தன், வடிவேலு, சாய் அபயங்கர் உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர். இப்படத்தின் மூலம் நடிகர் வடிவேலு முதல் முறையாக தனுஷுடன் இணைந்து நடிக்கிறார். 

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை மாரநாடு கருப்பசாமி கோயிலில் வைத்து இப்பட பூஜைத் தொடங்கியது. அந்த நிகழ்வில் பேசிய தனுஷ், ‘இந்தப் பூஜை பின்னால இருக்கிற இந்த சாமியையும், முன்னால இருக்கிற ரசிகர்களாகிய உங்களையும் நம்பி இன்னைக்கு இங்க நடக்குது.

நான் அதிகம் பேச விரும்பவில்லை. சீக்கரமா ‘ஓம்’ படத்தோட ஆடியோ வெளியீட்டு விழாவுல சந்திப்போம். இங்கே திரண்டு வந்து உங்களோட அன்பையும் ஆதரவையும் ஆசீர்வாதத்தையும் கொடுத்ததுக்கு ரொம்ப நன்றி’ என்று தெரிவித்தார்.

நடிகர் வடிவேலு பேசும்போது, ‘எனக்கு நீண்ட நாளைக்கு பின்னால தனுஷுடன் இணைந்து நடிக்கிற வாய்ப்பு இந்தப் படத்துல கிடைச்சிருக்கு. ஏன் இடையில சரியா நடிக்கவில்லை. தனுஷ் கூட சேர்ந்து ஏன் நடிக்கவில்லை அப்படினு நீங்க கேட்கலாம்.

சிலர் சில விஷயங்களுக்காக தீக்கொழுத்தி போடுவாங்க. அதை பற்றவைக்கிறதுனு நம்ம ஊர்ல சொல்வாங்க. எங்க சினிமாவுல தீப்பந்தத்தையே போட்டு இரண்டு பேரை பிரிக்கும் வேலையைப் பார்ப்பாங்க. காலச்சூழல் எங்க இரண்டு பேரையும் மாற்றியது.

இன்னைக்கு நாங்க இங்க வந்து நிற்கக் கூடிய பாக்கியத்தை ‘லப்பர் பந்து’ இயக்குநர் தமிழரசன் மூலமா, உங்கள் சார்பாக இந்த மாரநாட்டு கருப்பன் கொடுத்துருக்கார். அவர் முன்னால இந்த பூஜை நடக்குது.’  என்று தெரிவித்தார்.

சிதாரா என்டர்டெயின்மென்ட்ஸ் மற்றும் பிரைமார்க் புரடொக்‌ஷன்ஸ் இணைந்து தயாரிக்கும் இந்தப் படத்துக்கு ‘டி56’ என தற்காலிகமாக தலைப்பிடப்பட்டுள்ளது.

தமிழரசன் பச்சைமுத்து இயக்கும் இந்தப் படத்தில் தனுஷுடன், பிரித்தி முகுந்தன், எஸ்.ஜே.சூர்யா, வடிவேலு உள்ளிட்டோர். நடிக்க இருக்கின்றனர். படத்துக்கு சாய் அபயங்கர் இசையமைக்க இருக்கிறார். படத்தின் மற்ற விஷங்கள் இன்னும் வெளியிடப்படவில்லை.

SCROLL FOR NEXT