சிவாஜி கணேசனின் பேரன் தர்ஷன் கணேசன் நடிகராக அறிமுகமாகும் திரைப்படம், ‘லெனின் பாண்டியன்’. டி.டி.பாலச்சந்திரன் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தில், கங்கை அமரன், ரோஜா, ஸ்ரத்தா ராவ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். நாளை மறுநாள் (செப்.25) வெளியாகும் இப்படத்துக்கு இளையராஜா இசை அமைத்துள்ளார். சத்யஜோதி பிலிம்ஸ் சார்பில் செந்தில் தியாகராஜன், அர்ஜுன் தியாகராஜன் தயாரித்துள்ள இப்படத்தை டி.ஜி.தியாகராஜன் வழங்குகிறார்.
இதில் நடித்தது பற்றி தர்ஷன் கூறும்போது, “புனேவில் நடிப்புப் பயிற்சி பெற்றுவிட்டு சில விளம்பர படங்களில் நடித்தேன். நாடகங்களிலும் நடித்து வந்தேன். திரைப் படத்துக்காக சில ஆடிஷன்களில் நிராகரிக்கப்பட்டதால் என்னை இன்னும் தயார்படுத்த வேண்டிய நிலை இருந்தது. பிறகு மீண்டும் பயிற்சி பெற்றேன். சத்யஜோதி பிலிம்ஸ் என்னை சினிமாவில் அறிமுகப்படுத்த முடிவு செய்தது. அதன்படி இந்தப் படத்தின் கதையைக் கேட்கச் சொன்னார்கள்.
இதில் ஒரு நடிகனாக, என் திறமையை நிரூபிக்க போதுமான வாய்ப்பு இருந்தது. அதிகாரத்துக்கு எதிராக சாதாரண மனிதர்கள் 2 பேர் போராடுவதுதான் படத்தின் கதை. இதில் கங்கை அமரன், ரோஜா ஆகியோருடன் நடித்தது சிறந்த அனுபவத்தைத் தந்தது. போலீஸ் கதாபாத்திரத்தில் நடித்துள்ளேன். அதற்காக நிஜமான போலீஸார் எப்படி இருப்பார்கள் என்பதை மதுரையில் உள்ள போலீஸ் ஸ்டேஷன் ஒன்றுக்குசென்று நாள் முழுவதும் அமர்ந்து கவனித்தேன். அது கதாபாத்திரத்துக்கு வலு சேர்த்தது.
மதுரை அருகே நடக்கும் கதை என்பதால் உடல் இயல்பாக வேண்டும் என்பதற்காக நான்கு நாட்கள் வெயிலில் நின்றேன். மதுரை ஸ்லாங்கில் பேசப் பயிற்சி எடுத்தேன். இப்போது படத்தில் பார்க்கும் போது எனக்கு நானே வித்தியாசமானவனாகத் தெரிகிறேன். அடுத்து கதைகள் கேட்டுக் கொண்டிருக்கிறேன். விதவிதமான கதாபாத்திரங்களிலும் மல்டி ஸ்டார்ஸ் படங்களில் நடிக்கவும் ஆசை இருக்கிறது” என்றார்.