‘நவீன சரஸ்வதி சபதம்’ படத்துக்குப் பிறகு இயக்குநர் சந்துரு இயக்கியுள்ள படம், ‘ரிவால்வர் ரீட்டா’. கீர்த்தி சுரேஷ் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
ராதிகா சரத்குமார், சூப்பர் சுப்பராயன், சுனில், அஜய் கோஷ், ரெடின் கிங்ஸ்லி, ஜான் விஜய், கல்யாண் மாஸ்டர், சுரேஷ் சக்ரவர்த்தி உள்பட பலர் இணைந்து நடித்துள்ளனர். தினேஷ் கிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்துள்ள இப்படம் இன்று (நவ.27) வெளியாகிறது. இதன் செய்தியாளர்கள் சந்திப்பு சென்னையில் நடந்தது.
நடிகை கீர்த்தி சுரேஷ் கூறும்போது, “இயக்குநர் சந்துரு முதல் நாள் கதை சொன்னபோதே பயங்கரமாகச் சிரித்து மகிழ்ந்தேன். படப்பிடிப்பின்போது அவர் கோபப்பட்டு நான் பார்த்ததே இல்ல. அவ்வளவு அன்பானவர். ரீட்டா கதாபாத்திரத்துக்கு என்னைத் தேர்ந்தெடுத்தற்கு நன்றி. ராதிகா மேடமுடன் முதல்முறையாக நடிக்கிறேன்.
அவர் தயாரித்த ‘இது என்ன மாயம்’ படம் மூலமாகத்தான் தமிழில் அறிமுகமானேன். இந்தப் படத்தில் அவருடன் நடித்த காட்சிகளை எல்லோரும் ரசிப்பீர்கள். எங்கள் கெமிஸ்ட்ரி மிகவும் நன்றாக இருக்கும். இது, ஒரு டார்க் காமெடி படம்” என்றார். படக்குழுவினர் கலந்துகொண்டனர்.