‘சிக்மா’ படம் வெளியான பின்பு, அதன் மூலம் தனக்கான அடையாளத்தை உருவாக்கி, திரைத் துறையில் தன் பயணத்தை தொடர விரும்புவதாக தமிழக முதல்வர் விஜய்யின் மகனும், இயக்குநருமான ஜேசன் சஞ்சய் தெரிவித்துள்ளார்.
ஜேசன் சஞ்சய் இயக்குநராக அறிமுகமாகும் ‘சிக்மா’ படம் அக்டோபர் 2-ம் தேதி வெளியாக இருக்கிறது. இந்த நிலையில் சமீபத்தில் அளித்தப் பேட்டி ஒன்றில், தான் எப்படி அறியப்பட வேண்டும் என்று தனது விருப்பத்தை அவர் வெளிப்படுத்தி உள்ளார்.
‘உங்களை தமிழக முதல்வரின் மகனாக பார்க்க வேண்டுமா? அல்லது ஒரு சூப்பர் ஸ்டாரின் மகனாகவா? 25 வயதில் ஒரு படத்தை இயக்கி வெளியிடும் ஓர் இயக்குநராக பார்க்க வேண்டுமா? மக்கள் உங்களைப் இப்படிதான் பார்க்க வேண்டும் என நீங்கள் விருப்புகிறீர்கள்?’ என்று அவரிடம் கேட்கப்பட்டது.
அதற்கு பதில் அளித்த ஜேசன் சஞ்சய், ‘‘நான் இதைப் பற்றி அடிக்கடி யோசித்திருக்கிறேன். அதை மறுக்க முடியாது. எங்கள் குடும்பத்துக்கு என்று ஒரு பாரம்பரியம் இருக்கிறது. அது எப்போதும் தொடரும். இப்போது அதில் அரசியலும் சேர்ந்துள்ளது. இந்தச் சூழலும் பின்னர் மாறலாம்.
இன்னொரு பக்கம், என்னுடைய சிறிய வட்டத்துக்குள் நான் ஒரு படத்தை இயக்கி திரைத் துறையில் தடத்தை பதிக்க முயன்று இருக்கிறேன். அந்தப் படத்தின் மூலம் எனது பார்வையை பதிவு செய்துள்ளேன். இயல்பாகவே எனது எண்ணம் என்வென்றால், எனது படத்தைப் பார்க்கத் தொடங்கிய 5 நிமிடத்துக்குள், இது ஜேசன் சஞ்சய் இயக்கிய படம் என்ற எண்ணம் வந்துவிடும். படம் குறித்து சாதகமான, பாதகமான விமர்சனங்கள் வந்தாலும் படம் நான் யார் என்பதைச் சொல்லும்.
‘சிக்மா’ படம் வெளியான பிறகு எனக்கென ஒரு தனி அடையாளத்தை உருவாக்கவும், படத்தின் வெற்றி மூலம் எனது திரைத் துறைப் பாதையை உருவாக்குவதில் கவனம் செலுத்துவேன்’’ என்று தெரிவித்தார்.
தொடர்ந்து ஓர் இயக்குநராக தனது தந்தையின் நடிப்பில் எது மிகவும் பிடிக்கும் என்ற கேள்விக்கு பதில் அளித்த ஜேசன் சஞ்சய், ‘‘அப்பாவின் நகைச்சுவை உணர்வு எனக்கு பிடிக்கும். அவரை அப்படி இயல்பான மனநிலையுடன் பார்ப்பது மிகவும் பிடிக்கும். அவர் வீட்டில் அந்த மாதிரியாக இருந்ததை நான் பார்த்திருக்கிறேன்.
அவருக்குள் இயல்பாகவே ஒரு குழந்தைத்தனம் இருக்கும். ஒருகட்டத்தில் அவர் அப்படியான கதாபாத்திரங்களில் நடிப்பதை நிறுத்திவிட்டார். எனக்கு அவரை இயக்கும் வாய்ப்பு கிடைத்தால் அந்த குணத்தை வெளிக்கொண்டு வர விரும்புவேன்’’ என்று தெரிவித்தார்.
லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில், சுந்தீப் கிஷன் நடித்துள்ள 'சிக்மா' திரைப்படத்தில் முதல்வர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்குநராக அறிமுகமாகிறார்.
இந்தப் படத்துக்கு தமன் இசையமைத்துள்ளார். கிருஷ்ணன் வசந்த் ஒளிப்பதிவும் பிரவீன் கே.எல். படத்தொகுப்பும் செய்துள்ளனர். இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய 5 மொழிகளில் வரும் அக்டோபர் 2 அன்று திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.