பழம்பெரும் நடிகை எம்.என்.ராஜம் மறறும் மூத்த திரைப்பட இய்க்குநர் எஸ்.பி.முத்துராமன் ஆகியோருக்கு கலைஞர் நினைவு கலைத்துறை வித்தகர் விருதுகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று வழங்கினார்.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு: செய்தி மக்கள் தொடர்புத் துறை சார்பில், தமிழ்த் திரையுலகில் சிறந்து விளங்கிடும் வாழ்நாள் சாதனையாளர்களைப் பாராட்டும் வகையில் ‘கலைஞர் நினைவு கலைத்துறை வித்தகர் விருது’ ஆண்டுதோறும் வழங்கப்படும் என்றும், விருதாளர்களுக்கு ரூ.10 லட்சம், நினைவுப் பரிசு வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.
அதன்படி, 2024-ம் ஆண்டுக்கான விருது பழம்பெரும் நடிககைகளில் ஒருவரான எம்.என்.ராஜத்துக்கு முதல்வர் ஸ்டாலின் நேற்று வழங்கினார். 2025-ம் ஆண்டுக்கான கலைத்துறை வித்தகர் விருதை திரைப்பட இயக்குநர் எஸ்.பி.முத்துராமனுக்கு முதல்வர் வழங்கினார். இருவருக்கும் விருதுடன் ரொக்கப் பரிசாக தலா ரூ.10 லட்சம் வழங்கப்பட்டது. இருவரும் முதல்வருக்கு நன்றி தெரிவித்துக் கொண்டனர்.
நிகழ்வில், அமைச்சர் மு.பெ.சாமிநாதன், தலைமைச்செயலர் நா.முருகானந்தம், செய்தித்துறை செயலர் வே.ராஜாராமன், தமிழ்வளர்ச்சித்துறை செயலர் இரா.வைத்திநாதன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.