இந்தியாவில் இருந்து ஃபார்முலா கார் பந்தயங்களின் முகமாக அறியப்பட்டவர் கோயமுத்தூரில் பிறந்து வளர்ந்த நரேன் கார்த்திகேயன். இன்று அவரே வியக்கும் அளவுக்கு ஃபார்முலா கார் பந்தயங்களில் ஆர்வம் காட்டும் ஒருவர் உண்டென்றால் அவர்தான், தன்னுடைய ரசிகர்களால் ‘தல’ என்று அன்பாகவும் பல நேரங்களில் வெறித்தனமாகவும் அழைக்கப்படும் அஜித்.
இன்று விஜய் தமிழக சட்டமன்றத் தேர்தலில் மக்களின் ஆதரவைப் பெற்று முதல்வராகிவிட்டார். அதனால் அவர் இனி நடிக்கப் போவதில்லை என்று முன்னதாகவே அறிவித்துவிட்டார். ஆனால், மறைந்த முன்னாள் முதல்வர் மு.கருணாநிதி ஆட்சியில் திரையுலகம் அவருக்கு நடத்திய பாராட்டு விழாவில், அவரது முன்னிலையிலேயே ‘அதிகார வர்க்கத்தின் அரசியலை’ விமர்சித்துப் பேசிய துணிச்சல்காரர். அதனால், கருணாநிதி வாயினாலேயே ‘அஜித் என்கிற தும்பைப் பூ’ என்று பாராட்டப்பட்டார்.
அப்படிப்பட்டவர், நேரடிக் கள அரசியலுக்கும் தனக்கு எந்த வகையிலும் ஒத்துவராது என்பதை உணர்ந்துகொண்டு, தன்னுடைய ரசிகர் மன்றங்களைக் கூட கலைத்துவிட்டார். விஜய் அரசியலுக்கு வந்ததால் நடிக்கவில்லை என்று கூறுகிறார். அதாவது ஒரு லாஜிக் இருக்கிறது. ஆனால், அஜித் நடிப்பில் கடந்த ஆண்டு ‘குட் பேட் அக்லி’ வெளிவந்தது. அந்தப் படம் பெரிய ஹிட் அடித்தது. ஹிட் கொடுத்துவிட்ட அடுத்த படத்தில் நடிக்காமல், தனக்குப் பிடித்த ஃபார்முலா கார் பந்தயங்களுக்குப் போவதைத் தன்னுடைய பெருங்கனவாகவே வரித்துக்கொண்டு உலகம் சுற்றிக்கொண்டிருக்கிறார்.
அவரை எப்படியாவது நடிக்க வைத்தால், தமிழ் சினிமா ஃபாக்ஸ் ஆபிஸில் பல கோடிகளைச் சம்பாதிக்கலாம் என்று திரைப்பட விநியோகஸ்தர்களும் திரையரங்க உரிமையாளர்களும் ஆவலுடன் காத்துக் கிடக்கிறார்கள். அவரை அடுத்த படத்தை விரைந்து ஒப்புக்கொள்ளும்படி வேண்டுகோள் வைத்து வருகிறார்கள்.
அஜித்தோ தனது பந்தயக் காரின் ஸ்டியரிங்கிலிருந்து கையை எடுப்பதாக இல்லை. அவர் கார் பந்தயத்தில் குறைந்தது முதல் 5 இடத்தில் வந்தாலே இந்தியாவுக்குப் பெருமைதான். அதற்காக அவரை வாழ்த்திவிட்டு, நாம் இப்போது ‘சிட்டிசன்’ காலத்தின் தல அஜித்தின் அந்த வெற்றிலைக் கறை படிந்த பற்களைக் கொண்ட தோற்றத்தை நினைத்துப் பார்க்கலாமா?
ஒரு தனி நபர் ஒரு நாட்டுக்கு புதிய சட்டம் ஒன்றைக் கொண்டு வரமுடியுமா? இந்தக் கேள்விக்குச் சரியான எடுத்துக் காட்டு 2001-இல் வெளியான ‘சிட்டிசன்’ திரைப்படம். 2026-இல் 25 ஆண்டுகளை நிறைவு செய்து வெள்ளி விழா ஆண்டில் அடிவைத்துள்ள அந்தப் படத்தை இப்போதும் யூடியூபில் தமிழ் உள்படப் பல மொழிகளில் 1 கோடிக்கும் அதிகமான ரசிகர்கள் பார்த்துக் களித்திருக்கிறார்கள். அஜித் இப்படியும் கூட நடித்திருக்கிறார் என்று 2கே, ஜென்ஸீ கிட்கள் ஆச்சரியமாகக் கேட்டுக்கொண்டே, மீனவர் அஜித் வரும் காட்சிகளிலும் அவர் மாறு வேடங்களில் வரும் காட்சிகளிலும் ‘தல... தல...’ என்று உணர்ச்சி பொங்கக் கூவுகிறார்கள்.
‘சிட்டிசன்’ அஜித் குமாரின் திரைப்பயணத்தில் 29-வது திரைப்படமாகும். அப்போது அவருக்கு 30 வயது. சரவண சுப்பையா எழுதி, இயக்கினார். இன்று அந்த இயக்குநர் படங்களை இயக்காவிட்டாலும் இன்றைய தலைமுறைக்குத் தெரிந்த ஒரு குணச்சித்திர நடிகராக வலம் வருகிறார். ‘சிட்டிசன்’ படத்தில் அவர் உருவாக்கிய ‘அத்திப்பட்டி’ என்கிற காணாமல் அடிக்கப்பட்ட கிராமம் போல் இந்தியாவில் பல கிராமங்கள் இருந்து பெருவெள்ளத்தாலும் கடல் நீர் ஊடுருவலாலும் காணாமல் போன உண்மைக் கதைகளும் உண்டு.
ஓர் அறிமுக இயக்குநராக, சரவண சுப்பையா, இப்படியொரு சர்ச்சைக்குரிய கதையுடன் வந்தபோது, அவரை நம்பிக்கை இழக்க வைக்காமல், அந்தக் கதையில் இருக்கும் எளிய மீனவ மக்களின் வலியை ஒரு சிறந்த, ரசனையான தயாரிப்பாளராக உணர்ந்து அவருக்குக் கொடுத்தார் எஸ்.எஸ். சக்கரவர்த்தி.
இப்படத்தின் படப்பிடிப்பு சென்னைக்கு அருகில் உள்ள பழவேற்காடு பகுதியில் நடைபெற்றது. பழவேற்காடு மிகவும் புகழ்பெற்ற ஒரு சுற்றுலாத் தலம். இங்குள்ள கழிமுகத்துடன் கூடிய ‘காயல்’ பகுதியான இங்கே, ‘அத்திப்பட்டி’யை அப்படியே உயிருடன் உருவாக்கி திரையில் ரசிகர்களைப் பதை பதைக்க வைத்தார் இயக்குநர் சரவண சுப்பையா.
இந்தப் படத்தின் ஒளிப்பதிவை இந்தியாவின் புகழ்பெற்ற ஒளிப்பதிவாளர் ரவி கே.சந்திரன் கதையின் மையக் கதைக்கு ஏற்ப பதிவு செய்து இருந்தார். தேவா இசையமைத்த இப்படத்தில் அனைத்துப் பாடல்களையும் வைரமுத்து எழுதியிருந்தார். மீனா, நக்மா, மற்றும் வசுந்தரா தாஸ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.
அரசியலில் ஊழல், அதிகார வர்க்கத்தின் அத்துமீறல் ஆகியவற்றுடன் அநீதிக்கு எதிரான ஒரு சாமானிய மனிதனின் போராட்டம் ஆகியவற்றைக் கதையின் மையமாகக் கொண்டிருந்தது படம். மாவட்ட ஆட்சியர், நீதிபதி, காவல் அதிகாரி ஆகிய மூவரும் கடத்தப்படுவதுடன் கதை தொடங்குகிறது. இதைக் கண்டுபிடிக்கும் சி.பி.ஐ அதிகாரியாக நக்மா முக்கிய கதாபாத்திரத்தில் வருவார்.
அத்திப்பட்டி எனும் மீனவக் கிராமம் ஒன்று முழுவதுமாக அழிக்கப்பட்ட சோகக் கதை ‘சிட்டிசன்’ மூலம் வெளிச்சத்துக்கு வருவதும் அதை, நாயகன் பல வழிகளில் வெளிக்கொண்டிவருதும் மாஸ் எண்டர்டெயினர் திரைக்கதை வழியாகச் சித்தரிக்கப்பட்டிருந்தது. குறிப்பாக அஜித் ஏற்ற ஒன்பது வித்தியாசமான தோற்றங்கள் மிகவும் பேசப்பட்டன.
1. அப்துல்லா - பழவேற்காடு பகுதியில் மோட்டார் மெக்கானிக்காக வரும் அமைதியான இளைஞன்.
2. அந்தோணி - அரசு அதிகாரிகளைக் கடத்துவதற்காக ஒரு கிறித்துவ இளைஞன் தோற்றம்.
3. அறிவாநந்தம் - அத்திப்பட்டி கிராமத்தின் அழிவுக்குப் பழிவாங்கத் துடிக்கும் ஓர் எளிய குடிமகனாக அஜித் தோன்றிய கதையின் முதன்மை தோற்றம் (சிட்டிசன்).
4. சுப்பிரமணி - பிளாஷ் பேக் காட்சிகளில் வரும் அறிவாநந்தத்தின் தந்தை மற்றும் அத்திப்பட்டி கிராமத்தின் மீனவர் தோற்றம்.
5. சுதந்திரப் போராட்ட வீரர் - வெள்ளை முடி மற்றும் தாடியுடன் வரும் முதியவர் தோற்றம்.
6. அரசியல்வாதி - மிகவும் உடல் பருமன் கொண்ட உள்ள ஓர் அரசியல்வாதி தோற்றம்.
7. மாவட்ட ஆட்சியர் - அதிகாரிகளைக் குழப்புவதற்காக அரசு அதிகாரி உடையில் வரும் தோற்றம்.
8. போக்குவரத்து காவலர் - வித்தியாசமான மீசையுடன் வரும் ஒரு போக்குவரத்து காவல்துறை அதிகாரி தோற்றம்.
9. வழக்கறிஞர் - நீதிமன்றக் காட்சிகளின் வரும் வித்தியாசமான தோற்றம்.
அத்திப்பட்டி மீனவர் கிராமத்தில் சுமார் 690 பேர் அரசு அதிகாரிகளால் படுகொலை செய்யப்பட்டனர். அவர்களின் உடல்களைக் கடற்கரையில் குழிதோண்டு ‘மாஸ் பரியல்’ செய்துவிடுகின்றனர். கிராமத்துக்குத் தூண்டில் வளைவு கட்ட அரசால் ஒதுக்கப்பட்ட 15 கோடி பணத்தைக் காவல் ஆய்வாளர் வழக்கறிஞர், மாவட்ட ஆட்சியர் ஆகியோர், தூண்டில் வளைவு கட்டிவிட்டதாக அபகரித்துக் கொண்டனர். அப்படிப்பட்ட ஊழல்வாதிகளான அவர்கள் 20 ஆண்டுகள் பிறகு பணி உயர்வு அடைந்தார்கள். டி ஜி பி, நீதிபதி, ஆட்சியர் ஆகியோரை சிட்டிசன் பழிவாங்குகிறார்.
இப்படத்துக்காக அஜித் குமார் தனது உடல் எடையைக் கூட்டியும் குறைத்தும் நடித்திருந்தார். இந்த நடிப்புக்காக அஜித்துக்கு சினிமா எக்ஸ்பிரஸ் விருது (சிறந்த நடிகர் - தமிழ்) கிடைத்தது. படத்தின் முடிவில் 20 வருடங்களுக்கு முன்பு அழிக்கப்பட்ட அத்திப்பட்டி கிராமத்துக்கு சிட்டிசன் மூலமாக நீதி கிடைக்கிறது. சிட்டிசன் கூறிய தண்டனைகளை நீதிமன்றம் தீர்ப்பாக வழங்குவதுடன் படம் முடியும்.
தாமதமாக நீதி கிடைத்தாலும் உண்மை ஒரு நாள் வெளியே வந்தே தீரும் என்பதை ‘சிட்டிசன்’ எடுத்துக்காட்டியது. இன்று ஈழத்தில் நிறைய இடங்களில் தோண்டப்படும் புதைகளில் கொல்லப்பட்ட ஏராளமான தமிழ் மக்களின் எலும்புக்கூடுகள் இருப்பதை ஊடகங்களில் காணும்போது ‘சிட்டிசன்’ படம்தான் நினைவுக்கு வருகிறது.
‘சிட்டிசன்’ ஒரு முழுநீளப் பொழுதுபோக்கு சமூகத் திரைப்படமாக இருந்தாலும் அதன்மூலம் நடந்த ஓர் உண்மைச் சம்பத்தையும் இந்தச் சமயத்தில் நாம் ஒப்பிட்டுப் பார்க்கலாம். அதுபற்றி ‘சிட்டிசன்’ வெளியான அடுத்த ஆண்டு ஓர் உண்மைச் சம்பவம் நடந்தது என்று செய்தித்தாளில் தான் படித்து அறிந்து வைத்திருந்ததை இப்போது நான் ‘சிட்டிசன்’ படம் பார்த்துவிட்டுப் பேசியபோது, அதை நினைவுகூர்ந்து என்னுடைய அப்பா (க.நெடுமாறன் விவசாயி - மேலநத்தம்) எனக்கு அதைச் சொன்னார்.
கீழத் தஞ்சையில் ஒரு கிராமத்தில் ஏழைத் தாத்தா ஒருவர் வாழ்ந்து வந்தார். அவர் தனது பேரனுக்குத் திருமணம் செய்து வைக்க ஆசைப்பட்டிருக்கிறார். ஆனால், அவரிடம் பணம் இல்லை. அவர் அரசாங்கத்திடம் 20 ஆண்டுகளாக நிலுவையில் கிடக்கும் தன்னுடைய முதியோர் ஓய்வூதிய உதவித்தொகையைக் கேட்டு கடிதம் அனுப்பினார். ஆனால், கடிதம் எழுதியும் வரவில்லை. இந்தச் சமயத்தில்தான் ‘சிட்டிசன்’ படம் வெளியாகி 50 நாள்களைக் கடந்து ஓடிக்கொண்டிருந்திருக்கிறது.
இப்போது அந்த ஏழை விவசாயி தாத்தாவும் 20 வருடங்கள் கழித்து, அந்தத் தாத்தாவுக்கு அரசாங்கத்திடமிருந்து ஒரு கடிதமும், அதனுடன் சேர்த்து மொத்தமாக 20 வருட பென்ஷன் பணமும் கைக்கு வருகிறது. அந்தப் பணத்தை வைத்து அவர் தனது பேரனுக்கு மிகச் சிறப்பாகத் திருமணம் செய்து வைக்கிறார். அந்தத் தாத்தா இவர்தான் என்று எனக்கு அப்பா அவரைக் காட்டினார். இது ‘சிட்டிசன்’ படம் செய்த மாயம் என்றும் சொன்னார்.
வெகுஜனத் திரைப்படங்கள் பல வேளைகளில் மக்களிடமும் அரச அதிகாரத்தில் இருப்பவர்களிடம் நிச்சயம் தாக்கத்தை உருவாக்கும் என்று நினைத்துக்கொண்டேன். இப்போது சற்று பெருமிதத்துடன் ‘சிட்டிசன்’ படத்தை மீண்டும் ஒருமுறை பார்த்து முடித்தேன். அஜித் மீண்டும் நல்ல கருத்துள்ள, மக்களின் வாழ்க்கைக்குப் பயன்படும் படங்களிலும் நடிக்க வேண்டும். அது என்னைப் போன்ற 2கே தலைமுறையின் விருப்பமும்.