இயக்குநர், பேட்டி ஜென்கின்ஸுடன் ஒளிப்பதிவாளர் ஸ்டீவன் பெர்ன்ஸ்டீன்
திரைப்படக் காட்சி திரையில் தோன்றுவதற்கு முன் இயக்குநரின் மனதில் ஓர் எண்ணமாக உருவாகிறது. அதற்குக் காட்சி வடிவம், ஒளி, நிறம் ஆகியவற்றை வழங்குபவர் ஒளிப்பதிவாளர். இயக்குநரும் ஒளிப்பதிவாளரும் தனித்த கலைஞர்கள் மட்டுமல்லர்; ஒரே கதையை வெவ்வேறு பார்வைகளில் அணுகி, காட்சிமொழியாக வடிவமைக்கும் படைப்பாளிகள்.
திரைக்கதை, கதையின் அடிப்படையை வழங்குகிறது. கதாபாத்திரத்தின் மவுனம், அவர்களுக்கிடையிலான தூரம், அறையின் ஒளி என ஒவ்வொரு காட்சிக் கூறும் உணர்வுகளை வெளிப்படுத்துகின்றன. இந்த உணர்வுகளைக் காட்சிமொழியாக மாற்றுவதில்தான் இயக்குநர்–ஒளிப்பதிவாளர் கூட்டணியின் சாரம் அடங்கியுள்ளது.
திரைக்கதையிலிருந்தே தொடங்கும் பயணம்: இயக்குநரும் ஒளிப்பதிவாளரும் திரைக்கதையை வாசித்து, காட்சியின் பின்னணி, கதாபாத்திரங்களின் மனநிலை, உறவுகள், நோக்கம் ஆகியவற்றை விவாதிக்கின்றனர். “இந்தக் காட்சி கதையை எங்கே கொண்டு செல்கிறது?” என்பதுடன், “இதைப் பார்க்கும் பார்வையாளர் என்ன உணர வேண்டும்?” என்பதும் முக்கியமாகிறது. இந்தப் புரிதலிலிருந்தே திரைப்படத்தின் காட்சித் தோற்றம் தொடக்கம் முதல் இறுதிவரை வடிவம் பெறுகிறது.
ஒரே பார்வை: திரைப்படங்கள், ஒளிப்படங்கள், ஓவியங்கள் ஆகியவற்றிலிருந்து குறிப்புகளைத் தேர்ந்தெடுத்து ‘லுக் புக்’ உருவாக்குகின்றனர். இதன் மூலம் நிறம், ஒளி, நிழல், சட்டக அமைப்பு, இடவெளி ஆகியவற்றில் இருவருக்கும் ஒரே புரிதல் உருவாகிறது.
பெரிய நிலப்பரப்புக்கு அகலமான சட்டகங்களும், கதாபாத்திரத்தின் உள்ளுணர்வுக்கு நெருக்கமான சட்டகங்களும் குறைந்த ஆழக் குவியலும் தேவைப்படலாம்.லென்ஸ், கேமரா தேர்வுகள் அனைத்தும் கதையின் தேவையைப் பொறுத்தே அமைகின்றன. தொழில்நுட்பம் கதையைப் பின்தொடர வேண்டும்; கதை தொழில்நுட்பத்தைப் பின்தொடரக் கூடாது.
ப்ளாக்கிங் மற்றும் ஸ்டேஜிங்: ஒரு காட்சியில் நடிகர்கள் எங்கிருந்து வருகிறார்கள், எங்கே நிற்கிறார்கள், யாரைப் பார்க்கிறார்கள், எப்போது நகர்கிறார்கள் என்பதைத் திட்டமிடுவது ப்ளாக்கிங். கதாபாத்திரங்கள் சட்டகத்துக்குள் எவ்வாறு அமைக்கப்படுகிறார்கள் என்பதே ஸ்டேஜிங்.
ஒருவர் முன்னணியிலும் மற்றவர் பின்னணியிலும் இருப்பதுகூட அவர்களுடைய உறவை வெளிப்படுத்தலாம். நடிகர்களின் இயக்கம், இடவமைப்பு, கேமராவின் நிலை ஆகியவற்றை ஒருங்கிணைப்பது அவசியம். கேமரா, நடிகருடன் நகர வேண்டுமா, அல்லது நிலையாக இருந்து அவரது இயக்கத்தைப் பதிவு செய்ய வேண்டுமா என்பது வெறும் தொழில்நுட்ப முடிவல்ல; கதைசொல்லல் முடிவு.
உணர்வைத் தொழில்நுட்பமாக மொழிபெயர்த்தல்: இயக்குநர் வெளிப்படுத்த விரும்பும் உணர்வுகளை ஒளிப்பதிவாளர் காட்சிமொழியாக மாற்றுகிறார்.
தனிமை: அகலமான சட்டகம், அதிக வெற்றிடம், குளிர்ச்சியான நிறங்கள்.
நெருக்கம்: கதாபாத்திரத்துக்கு அருகிலான கேமரா மற்றும் மென்மையான ஒளி.
பதற்றம்: ஒளி–நிழல் வேறுபாடுகள், கேமரா இயக்கம், சட்டக அமைப்பு.
இவ்வாறு, இயக்குநரின் உணர்வு ஒளிப்பதிவாளரின் காட்சிமொழியாக மாறுகிறது.
Tech Scout – காட்சியை முன்கூட்டியே அறிதல்: படப்பிடிப்புக்கு முன் இயக்குநரும் ஒளிப்பதிவாளரும் இடத்தை ஆய்வு செய்து, சூரிய ஒளி, கேமரா அமைவிடம், நடிகர்களின் நகர்வு, ஒளி அமைப்பு ஆகியவற்றைத் திட்டமிடுகின்றனர். இந்த முன்திட்டமிடல் தளத்தில் குழப்பத்தையும் நேர விரயத்தையும் குறைக்கிறது. லென்ஸ், ஒளி மற்றும் தோல் நிறச் சோதனைகள் மூலம் படத்தின் காட்சித் தோற்றத்தையும் முன்கூட்டியே உறுதி செய்யலாம்.
மிஸ்டர். ஜெலஸி...
திட்டமிடலின் வலிமை – (Mr. Jealousy) தயாரிப்புக்கு முந்தைய திட்டமிடலின் முக்கியத்துவத்துக்கு, ஒளிப்பதிவாளர் ஸ்டீவன் பெர்ன்ஸ்டீன் மற்றும் இயக்குநர் நோவா பாம்பாக் கூட்டணி ஒரு சிறந்த உதாரணம். அறுபதுகளின் பிரெஞ்சு புதிய அலை திரைப்படங்களின் காட்சி மொழியை உருவாக்க விரும்பிய பாம்பாக், பெர்ன்ஸ்டீனுடன் இணைந்து கேமரா இயக்கம், சட்டக அமைப்பு, படத்தொகுப்பு ஆகியவற்றை ஆராய்ந்தார்.
மேக்ஸ்ஃபீல்ட் பாரிஷின் ஓவியங்களிலிருந்து வண்ணத் தட்டை உருவாக்கி, அதற்கேற்ற லைட்டிங் ஜெல்கள் மற்றும் ஒளி அமைப்புகளையும் திட்டமிட்டனர். பின்னர், ஒவ்வொரு காட்சியையும் எவ்வாறு ஒளிப்பதிவு செய்வது என்பதைத் தீர்மானித்தனர். இது வண்ணம் மற்றும் தயாரிப்பு வடிவமைப்பு வரை தொடர்ந்தது.
படப்பிடிப்புக்கு முன்பே காட்சி நோக்கத்தில் இருவருக்கும் தெளிவு இருந்ததால், தளத்தில் ஒவ்வொரு கோணத்துக்கும் தனித்தனி அறிவுறுத்தல்கள் தேவைப்படவில்லை. திட்டமிடல் தெளிவாக இருந்தபோது, ஒளிப்பதிவாளரின் படைப்புச் சுதந்திரமும் அதிகரித்தது.
சுதந்திரமான நடிப்பு, நெகிழ்வான ஒளிப்பதிவு- (Monster): ‘மான்ஸ்டர்’ திரைப்படத்தில் இயக்குநர் பேட்டி ஜென்கின்ஸ் மற்றும் ஒளிப்பதிவாளர் ஸ்டீவன் பெர்ன்ஸ்டீன், காட்சி வடிவமைப்பைவிட நடிகரின் சுதந்திரத்துக்கும் படப்பிடிப்பு வேகத்துக்கும் முன்னுரிமை அளித்தனர்.
சார்லைஸ் தெரோன் இயல்பாகவும் தன்னிச்சையாகவும் நடிக்க, பெர்ன்ஸ்டீன் தனது ஒளிப்பதிவு அணுகுமுறையை அதற்கேற்ப மாற்றினார். ஃபோகஸ் புல்லர் நடிகரின் இயக்கத்தைப் பின்தொடர்ந்தார்; ஒளி அமைப்புகள் தேவைக்கேற்ப மாற்றப்பட்டன. ஹேண்ட்ஹெல்ட் கேமராக்கள் நடிகர்களின் இயக்கத்துடன் இணைந்து பயணித்தன.
இதன் மூலம், நடிப்பை மையப்படுத்திய இயல்பான காட்சி மொழியும், ஒரே நாளில் ஐந்து இடங்களில் 40 ஷாட்களைப் படமாக்கும் வேகமும் சாத்தியமானது.
இயக்குநரின் பார்வையைத் தனது தொழில்நுட்பத்துக்குள் அடக்குவதல்ல ஒளிப்பதிவாளரின் பணி; அந்தப் பார்வைக்கு ஏற்ற தொழில்நுட்பத்தைத் தேர்ந்தெடுப்பதே அவரது கலை.
ஒரு நினைவு, ஒரு காட்சிமொழி – (தில் சே): பாடல் காட்சிகள் இயக்குநரும் ஒளிப்பதிவாளரும் இணைந்து கற்பனை செய்ய வேண்டிய முக்கியமான பகுதிகள். இதற்கு ‘தில் சே’ திரைப்படத்தின் “சையா சையா” பாடல் ஒரு சிறந்த உதாரணம்.
ரயிலில் பாடலைப் படமாக்குவதற்கான இடங்களை ஆய்வு செய்தபோது, இயக்குநர் மணிரத்னமும் ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவனும் தங்களின் சிறுவயது ரயில் பயண அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டனர்.
இருண்ட சுரங்கத்துக்குள் நுழைந்து, சில நொடிகளில் மீண்டும் வெளிச்சத்துக்கு வரும் ரயில் பயணத்தின் அனுபவம், காட்சிக்கான புதிய சிந்தனையைத் தூண்டியது. ஒரு தனிப்பட்ட நினைவு, இரு கலைஞர்களின் உரையாடலில் திரைப்படக் காட்சிமொழியாக மாறியது.
படப்பிடிப்பில் ஒரே தாளம்: படப்பிடிப்புத் தளத்தில் இயக்குநரின் கவனம் - நடிகர்களின் நடிப்பு மற்றும் காட்சியின் உணர்வில் இருக்கும். ஒளிப்பதிவாளர் சட்டகம், கேமரா, ஒளி, வெளிப்பாடு மற்றும் காட்சித் தொடர்ச்சியை கவனிக்கிறார். சில நேரங்களில் திட்டமிட்டபடி எதுவும் நடைபெறாது. வானிலை மாறலாம், நேரம் குறையலாம். தொழில்நுட்ப மாற்றங்கள் செய்யப்படலாம். எத்தகைய சூழலிலும் காட்சியின் உணர்வு மாறாமல் பாதுகாக்கப்படுவதே இருவரின் கூட்டுப் பணியின் வெற்றி.
டிஐ வரை தொடரும் பயணம்: படப்பிடிப்பு முடிந்தாலும் இயக்குநர்–ஒளிப்பதிவாளர் கூட்டணி தொடர்கிறது. டிஐ அறையில் இருவரும் கலரிஸ்டுடன் இணைந்து நிறம், நிழல், வெளிச்சம், கான்ட்ராஸ்ட், ஸ்கின் டோன் மற்றும் காட்சித் தொடர்ச்சியைச் செம்மைப்படுத்துகின்றனர். திரைக்கதையில் தொடங்கிய காட்சிச் சிந்தனை, ப்ளாக்கிங், ஸ்டேஜிங், கேமரா, ஒளி என வளர்ந்து, டிஐ-யில் இறுதி வடிவம் பெறுகிறது.
ஒரே கனவைக் காணும் இரு ஜோடிக் கண்கள்: இயக்குநர் கேட்கிறார்: “இந்தக் காட்சி என்ன சொல்ல வேண்டும்?”
ஒளிப்பதிவாளர் கேட்கிறார்: “அதைப் பார்வையாளருக்கு எவ்வாறு உணர்த்த வேண்டும்?”
இந்த இரு கேள்விகளும் இணையும் இடத்தில்தான் காட்சிமொழி பிறக்கிறது. சிறந்த இயக்குநர்–ஒளிப்பதிவாளர் கூட்டணி என்பது உரையாடல், கருத்துப் பரிமாற்றம், ஒருவரின் கற்பனையை மற்றொருவர் புரிந்துகொண்டு, அதை ஒரே காட்சியாக உருவாக்கும் கலை.
(புதன்தோறும் ஒளிகாட்டுவோம்)