ரோட் டு பெர்டிஷன்...
ஐரோப்பிய மறுமலர்ச்சி கால ஓவியர்கள், ஒளியைக் கையாண்ட விதத்தின் நவீன நீட்சியே, ஓவியங்கள் திரைச் சட்டகங்களாக உருமாறும் ரசவாதம். ஓவியத்தின் சட்டக அமைப்பை (ஸ்டேடிக் ஃபிரேம்), சினிமா தனது நகரும் சட்டகத்துக்குள் (டைனமிக் ஃபிரேம்) கொண்டு வரும்போது கட்டமைப்பு, ஒளி, நிறம், இடவமைப்பு, மற்றும் கேமரா கோணம் ஆகியவற்றை எடுத்துக் கொண்டு, அதில் காலமும் இயக்கமும் சேர்க்கும்போது, ஒரு புதிய காட்சி மொழி உருவாகிறது.
ஒளி-நிழல் விளையாட்டு (கியாரஸ்க்யூரோ, டெனிப்ரிஸம்) - ஓவியர்கள் லியனார்டோ டாவின்சி முதல் கராவாஜியோ வரை ஒளியை ஒரு கூர்மையான ஆயுதமாகப் பயன்படுத்தினர். இருளுக்கும் ஒளிக்கும் இடையிலான அதீத முரண் இருண்ட பின்னணியில் ஒரு குறிப்பிட்ட திசையிலிருந்து வரும் ஒளி, ஒரு பொருளின் வடிவத்தை அழுத்தமாக வெளிப்படுத்தும். தி காட்ஃபாதர், சின் சிட்டி படங்களில், ஒளியை விட நிழலுக்கு அதிக முக்கியத்துவம் தரப்படும்.
கியாரஸ்க்யூரோ (Chiaroscuro) என்ற நுட்பம் (Chiar - ஒளி, Oscuro – இருள்), தட்டையான ஓவியத்துக்கு முப்பரிமாணத் தன்மையைக் கொடுத்தது. இதுவே சினிமாவில் லோ கீ லைட்டிங்காக மாறியது. நிழல்கள் எதை மறைக்கின்றன, ஒளி எதை வெளிப்படுத்துகிறது என்பது அந்த கதாபாத்திரத்தின் ரகசியத்தையும், மன அழுத்தத்தையும் குறிக்கப் பயன்படுத்தப்படுகிறது.
ரெம்ப்ராண்ட் லைட்டிங்: முகத்தின் மவுனம்: 17-ம் நூற்றாண்டின் டச்சு ஓவியர் ரெம்ப்ராண்ட், மனித முகங்களை வரைவதில் தனித்துவமான முறையைக் கையாண்டார்.முகத்தின் ஒரு பகுதி ஒளியிலும், மறுபகுதி நிழலிலும் இருக்கும். நிழல் கவியும் கன்னப்பகுதியில், கண்ணுக்குக் கீழே சிறிய ‘தலைகீழ் முக்கோண’ ஒளி படியும்.
ஒளிப்பதிவாளர் ரோஜர் டீக்கின்ஸ் இன்றும் இந்த நுட்பத்தைப் பயன்படுத்துகிறார். முகத்தின் ஒரு பாதி ஒளியிலும் மறுபாதி இருளிலும் இருப்பது, கதாபாத்திரத்துக்கு ஆழத்தையும், மர்மத்தையும் சேர்க்கிறது.
ஓவியங்கள்: இயக்குநர்களின் விஷுவல் ரெஃபரன்ஸ் - காட்சியின் ஆன்மாவை விவரிக்க இயக்குநர்கள் ஓவியங்களையே முதன்மை ஆதாரமாகத் தேடுகிறார்கள். எட்வர்ட் ஹாப்பரின் நைட்ஹாக்ஸ் ஓவியம், நவீன சினிமாவில் ‘நகரத்துத் தனிமை’ எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு மிகச்சிறந்த பாடம். ரோட் டு பெர்டிஷன், ப்ளேட் ரன்னர் படங்களில் வரும் இரவு நேரக் காட்சிகள் ஹாப்பரின் சட்டகங்களையே பிரதிபலிக்கின்றன.
ஜன்னல் வழி வரும் மென்மையான, ஒருபக்க ஒளியை ஜோஹன்னஸ் வெர்மீர் கையாண்ட விதம், பீரியட் படங்களுக்கு அடிப்படை. குறிப்பிட்ட காலக்கட்டத்தை பார்வையாளர் நம்புவதற்கு, அந்த காலத்து ஓவியங்களின் வண்ணங்களே சான்றாகின்றன.
சட்டகமும் உளவியலும்: கதாபாத்திரத்தை எங்கு நிறுத்த வேண்டும் என்பதை ஓவியங்களின் ரூல் ஆஃப் தேர்ட்ஸ் மற்றும் கோல்டன் ரேஷியோ போன்ற விதிகள் தீர்மானிக்கின்றன. இயக்குநர் வெஸ் ஆண்டர்சன் ஓவியத்தின் ‘சமச்சீர் நிலையை’ அப்படியே திரைக்குக் கொண்டு வருகிறார். மற்றவர்கள், ஓவியங்களில் உள்ள ‘கவன ஈர்ப்புப் புள்ளிகளை’ கேமரா லென்ஸ் மூலம் உருவாக்குகிறார்கள்.
ஓவியங்களின் நிற மொழியில் சிவப்பு அதிகாரம் அல்லது வன்முறையையும், நீலம் அமைதி மற்றும் தெய்வீகத்தையும் குறித்தது. இதையே தி லாஸ்ட் எம்பரர் திரைப்படத்தில் ஒளிப்பதிவாளர் வித்தோரியோ ஸ்டோரோரோ கதையின் காலமாற்றத்தைக் காட்டப் பயன்படுத்தினார்.
காட்சி அடுக்குமுறை (லேயரிங் அண்ட் டெப்த்) - ஓவியங்களில் ஆழத்தைக் காட்ட அட்மாஸ்ஃபரிக் பெர்ஸ்பெக்டிவ் பயன்படுத்தப்படும். தி ரெவனன்ட்,பேரி லிண்டன் படங்களில், ஓவியங்களில் இருப்பதைப் போன்றே ‘முன்னணி’, ‘நடுப்பகுதி’, ’பின்னணி’ என மூன்று அடுக்குகளை ஒளிப்பதிவாளர்கள் உருவாக்குகிறார்கள். இது தட்டையான திரையில் ஒரு முப்பரிமாண (3டி) ஓவியத்தைப் பார்க்கும் உணர்வைத் தருகிறது.
அமைப்பு மற்றும் தொடுஉணர்வு: எண்ணெய் ஓவியங்களில் தூரிகையின் தடங்கள் ஒருவிதமான தடிமனான அமைப்பைத் தரும். ஃபிலிம் கிரெய்ன் மற்றும் ஆடை வடிவமைப்பு மூலம் இந்தத் தழுவல்
சாத்தியமாகிறது. தி ஹேட்ஃபுல் எய்ட் திரைப்படத்தில், உடைகளின் நயமும், பனித் துளிகளின் அடர்த்தியும் ஒரு ஓவியத்தின் கேன்வாஸைப் போன்ற உணர்வைத் தரும்.
ஓவியக் கூறுகளின் திரைத் தழுவல்: திரையில், ஓவியத்தை ‘காட்சி நகலாக’ அல்லாமல், அதன் நுணுக்கமான கூறுகளைத் தழுவுகிறார்கள்.
ட்ரீம்ஸ்...
மேரி அண்டொனெட் - நெப்போலியன் க்ராஸிங் தி ஆல்ப்ஸ்: ஜாக் லூயி டேவிட் வரைந்த இந்த ஓவியத்தில் காணப்படும் வீரத் தோற்ற அமைப்பும், சிலையைப் போன்ற உறைந்த உடல் நிலையும்தான் மேரி அண்டொனெட் திரைப்படத்தின் பல காட்சிகளில் கதாபாத்திரங்கள், அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்ட உருவங்கள் போலவே சட்டகத்துக்குள் வைக்கப்படுகிறார்கள். கேமரா, கீழ்க்கோணத்திலிருந்து அவர்களைக் காட்டுகிறது. இவ்வாறு ஓவியத்தின் போர்ட்ரெய்ட் மொழி திரை மொழியாக மாறுகிறது.
அலாட்ரிஸ்ட் - லா ரென் டி ஸ்யோன் டெ ப்ராடா: வெலாஸ்குவெஸின் புகழ்பெற்ற இந்த ஓவியத்தில், மனிதர்கள் இரு குழுக்களாகப் பிரிந்து, ஒரு சாவியைப் பரிமாறிக்கொள்ளும் அமைப்பு, அலாட்ரிஸ்ட் திரைப்படத்தில் மனிதர்களின் இடவமைப்பும், பார்வைக் கோணமும் அப்படியே காட்சியாக மாற்றப்படுகிறது. கேமரா நாடகத்தனமான எந்த அசைவுகளையும் செய்யாமல், ஒரு சாட்சியைப் போல நின்று அந்த ஓவியத்தின் அமைப்பையே நகரும் காட்சியாக மாற்றுகிறது.
ஷட்டர் ஐலேண்ட் - தி கிஸ்: ஓவியத்தில் 2 உடல்கள் அலங்காரமான ஒரு மூடிய உலகுக்குள் சிக்கிக் கொண்டிருப்பது போலத் தோன்றும். திரைப்படத்தில், மார்ட்டின் ஸ்கார்சிஸி இதையே மிகவும் நெருக்கமான சட்டகங்களின் மூலம் உருவாக்குகிறார்.
பின்னணி சுருக்கப்பட்டு, மனித உடல்களே முழு சட்டகத்தையும் நிரப்பும் விதத்தில் காட்சிகள் அமைக்கப்படுகின்றன. ஓவியத்தில் உள்ள அந்த மூடப்பட்ட அமைப்பு, இங்கே கேமரா சட்டகமாக மாறுகிறது.
தி லாஸ்ட் எம்பரர்...
ஜோக்கர் - எகான் ஷீலே: இவரது சுய உருவ ஓவியங்களில், உடல் கோணலாகவும் சமநிலை இழந்ததாகவும் தோன்றும். ஜோக்கர் திரைப்படத்தில், ஹோகின் ஃபீனிக்ஸின் உடல் மொழியும் அதே கோணலான வடிவமைப்பில் காட்சியளிக்கிறது. கேமரா அவரை சில நேரங்களில் நெருக்கமாகவும், வித்தியாசமான கோணங்களிலும் காட்சிப்படுத்துவதன் மூலம், ஓவியத்தின் அந்த சிதைந்த உடலமைப்பு சினிமா காட்சியாக மாற்றப்படுகிறது.
தி ட்யூவெலிஸ்ட்ஸ் - 19-ம் நூற்றாண்டு ஓவியங்கள்: இந்த ஓவியங்களில் காணப்படும் இயற்கை ஒளி, மென்மையான நிழல்கள் மற்றும் மண்ணிற வண்ணங்களின் தோற்றத்தை, தி ட்யூவெலிஸ்ட்ஸ் திரைப்படம் தன் காட்சிகளில் கொண்டு வருகிறது. இந்தப் படம் ஒரு நகரும் ஓவியத் தொகுப்பைப் போலவே தோன்றும் வகையில் ஒளி மற்றும் நிற அமைப்புகள் வடிவமைக்கப்பட்டுள்ளன.
ட்ரீம்ஸ் - வான்கா: அகிரா குரசோவா தனது ட்ரீம்ஸ் திரைப்படத்தில், வான்காவின் ஓவிய உலகத்துக்குள்ளேயே செல்கிறார். ஓவியங்களின் வண்ணங்களும், சிதைந்த பார்வைக் கோணங்களும், தூரிகைத் தடங்களை நினைவுபடுத்தும் இயக்கங்களும் காட்சி உலகமாக மாறுகின்றன.
சிறந்த இயக்குநர் ஓவியத்திலிருந்து அந்த ஓவியன் உலகைப் பார்த்த ‘தொழில்நுட்பக் கோணத்தை’ (டெக்னிக்கல் ப்ராஸ்பெக்ட்) எடுக்கிறார். ஓவியம் காலத்தின் ஒரு கணத்தை உறைய வைப்பது. சினிமா உறைய வைத்த கணங்களுக்கு உயிர் கொடுத்து ஓட விடுவது!.
(புதன்தோறும் ஒளிகாட்டுவோம்)