இந்தியத் திரையுலகிற்கு ஆர்.பி.சவுத்ரி ஆற்றிய பங்களிப்பைச் சொற்களால் விவரிக்க இயலாது என்று சிரஞ்சீவி தெரிவித்துள்ளார்.
ராஜஸ்தான் மாநிலத்தில் நிகழ்ந்த சாலை விபத்தில் பிரபல திரைப்பட தயாரிப்பாளர் ஆர்.பி.சவுத்ரி மரணமடைந்தார். அவருடைய மறைவு திரையுலகினரை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது. தமிழ் திரையுலகம் மட்டுமன்றி பல்வேறு மொழி படங்களையும் தயாரித்து வெற்றி கண்டவர் சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனரான ஆர்.பி.சவுத்ரி என்பது குறிப்பிடத்தக்கது.
ஆர்.பி.சவுத்ரி மறைவு குறித்து தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகரான சிரஞ்சீவி தனது எக்ஸ் தளத்தில், “புகழ்பெற்ற தயாரிப்பாளர் ஆர்.பி.சவுத்ரி அவர்களின் திடீர் மறைவு செய்தி கேள்விப்பட்டு, மிகுந்த மனவேதனை அடைந்தேன். பல ஆண்டுகளாக அவரைத் தெரியும். அண்மையில் சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனம் மூலமாக ‘காட்ஃபாதர்’ படத்தில் அவருடன் இணைந்து பணிபுரியும் வாய்ப்பு கிடைத்தது.
எண்ணற்ற திறமையான இயக்குநர்கள் மற்றும் நடிகர்களின் திரைப்பயணத்தை வடிவமைத்து கணக்கிலடங்கா கதைகளுக்கு அவர் உயிரூட்டியுள்ளார். இந்தியத் திரையுலகுக்கு அவர் ஆற்றிய பங்களிப்பைச் சொற்களால் விவரிக்க இயலாது. அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார் சிரஞ்சீவி.