அஜித்குமார் நடித்த ‘குட் பேட் அக்லி’ திரைப்படத் தில் தனது அனுமதியின்றி, இளமை இதோ இதோ, ஒத்த ரூபாயும் தாரேன், என் ஜோடி மஞ்சக் குருவி ஆகிய பாடல்களை பயன்படுத்தி உள்ளதாகக் கூறி இளையராஜா சார்பில் தொடரப்பட்ட வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், அப்படத்தில் அந்தப் பாடல்களை பயன்படுத்த இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டது.
இந்த தடையை நீக்கக்கோரி மைத்ரி மூவி மேக்கர்ஸ் சார்பில் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீதான விசாரணை நீதிபதி என்.செந்தில் குமார் முன்பாக நடந்தது. அப்போது இளையராஜா தரப்பில், பதிப்புரிமை சட்டப்படி இசையமைப்பாளர்களிடம் தான் பாடல்களின் உரிமை உள்ளது. ஒட்டுமொத்த படத்துக்கான உரிமை தயாரிப்பாளருக்கு உண்டு என்றாலும் பாடல்களை மட்டும் தனியாக எடுத்து மூன்றாம் நபர்களுக்கு விற்க தயாரிப்பாளருக்கு எந்த உரிமையும் இல்லை.
குட் பேட் அக்லி படத்தில் இளையராஜாவின் இசையமைப்பில் உருவான 3 பாடல்கள் உருமாற்றம் செய்து பயன்படுத்தப்பட்டுள்ளது என வாதிடப்பட்டது, படத்தயாரிப்பு நிறுவனம் தரப்பில், படத்தின் ஒட்டுமொத்த உரிமையும் தயாரிப்பாளர்களிடம் தான் உள்ளது. பணம் பெற்றுக்கொண்டு இசையமைத்து கொடுக்கும் இளையராஜாவிடம் பாடல்களுக்கான இசையுரிமை இருந்தால் அதை அவர்தான் நிரூபிக்க வேண்டும் என வாதிடப்பட்டது.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி என்.செந்தில்குமார் பிறப்பித்த உத்தரவில், திரைப்படப் பாடல்களை உருமாற்றம் செய்வதை தடுக்கவும், அனுமதியின்றி பயன்படுத்துவதை தடுக்கவும் இளையராஜாவுக்கு உரிமை உள்ளது. இந்த வழக்கில் ஏற்கெனவே பிறப்பித்த இடைக்கால உத்தரவில் தலையிட எந்த காரணமும் இல்லை எனக்கூறி மைத்ரி மூவி மேக்கர்ஸ் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை தள்ளுபடி செய்து, விசாரணையை ஜன.6-க்கு தள்ளி வைத்துள்ளார்.
‘டியூட்’ பட வழக்கில் சமரசம்: இதேபோல ‘டியூட்’ படத்தில் இளையராஜாவின் பாடல்களை பயன்படுத்தியது தொடர்பான வழக்கு நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது படத் தயாரிப்பு நிறுவனம் சார்பில் இளையராஜாவுக்கு உரியஇழப்பீடு வழங்கப்பட்டு விட்டது என்றும், படத்தின் தலைப்பில் இளையராஜாவுக்கு நன்றி தெரிவிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது. அதற்கு இளையராஜா தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ஏ.சரவணன் சம்மதம் தெரிவித்தார். அதையடுத்து வழக்கை முடித்து வைத்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.