இயக்குநர் சுதா கொங்குரா
சென்னை: ‘இதயம் முரளி’ படத்திற்கு தடை விதிக்க மறுத்த சென்னை உயர் நீதிமன்றம் பிரச்சினையை மத்தியஸ்தர் மூலம் தீர்த்துக் கொள்ள உத்தரவிட்டுள்ளது.
‘பராசக்தி’ படத்தை இயக்கிய வகையில் தனக்கு வழங்க வேண்டிய சம்பள பாக்கி 8.39 கோடி ரூபாயை செலுத்தக் கோரி இயக்குநர் சுதா கொங்குரா சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளார். நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் இயக்குநர் சுதா கொங்குரா இயக்கத்தில், ஆகாஷ் பாஸ்கரனின் டான் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்த பராசக்தி திரைப்படம் கடந்த ஜனவரி 9-ம் தேதி வெளியானது.
படத்தை இயக்க சுதா கொங்குராவிற்கு 15 கோடி ரூபாய் ஊதியம் ஒப்பந்தம் செய்த நிலையில் 8.39 கோடி ரூபாய் ஊதிய பாக்கி வைத்துள்ளதாகவும், அந்த தொகையை செலுத்தக் கோரியும் சுதா கொங்குரா சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளார்.
அந்த மனுவில், ”டான் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள ‘இதயம் முரளி’ படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும் என்றும், ‘பராசக்தி’ படத்தின் உரிமையை மூன்றாம் நபருக்கு வழங்க தடை விதிக்க வேண்டும் என்றும், ‘பராசக்தி’ படத்துக்கு ஓடிடி, தொலைக்காட்சி உரிமம் வழங்கியதன் மூலம் கிடைத்த வருமானத்தின் முழு விவரங்களையும் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க உத்தரவிட வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கில் இன்று இடைக்கால உத்தரவு பிறப்பித்த நீதிபதி குமரேஷ் பாபு, ‘இதயம் முரளி’ படத்தை வெளியிட இடைக்கால தடை விதிக்க மறுத்ததுடன், சம்பள விவகாரம் தொடர்பாக மத்தியஸ்தர் மூலம் தீர்த்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தி வழக்கினை முடித்துவைத்தார்.