திரைத்துறையில் 2-ம் அத்தியாயத்தை இப்போது தொடங்கியிருப்பதாக தனுஷ் தெரிவித்துள்ளார்.
வேல்ஸ் பல்கலைக்கழகத்தில் இரண்டு நாட்கள் கலாச்சார விழா நடைபெற்றது. இதன் 2-ம் நாள் நிகழ்வில் சிறப்பு விருந்தினராக தனுஷ் கலந்து கொண்டார். இந்த விழாவில் தனுஷ் பேசும்போது, “நமக்கு கிடைத்துள்ளதை பெரிய ஆசிர்வாதமாக நினைத்து அதை தக்கவைத்து கொள்ள இரவும் பகலும் பாடுபடவேண்டும். திரைத்துறையில் 25 ஆண்டுகள் என்பது மிகவும் குறைவு தற்போது என் திரைப்பயணத்தின் இரண்டாம் அத்தியாத்தை தொடங்கியுள்ளேன்.
எனக்கும் வேல்ஸ் பல்கலைக்கழக்த்துக்கும் தொடர்பு உண்டு. என் முதல் படம் ’துள்ளுவதோ இளமை’ இங்கே தான் எடுத்தோம். அதுமட்டுமல்ல அந்தத் திரைப்படத்தில் ஒரு காட்சியில் ஐசரி கணேஷ் சாரிடம் பூட்ஸ் காலால் அடிவாங்கி இருக்கிறேன். பள்ளி மற்றும் கல்லூரி நாட்கள் தான் நம் வாழ்நாளில் சிறந்த நாட்களாக அமையும். மெடிட்டேஷ்ன் மற்றும் மேனிஃபெஸ்டேஷன் இவை இரண்டும் நீங்கள் எட்டத் துடிக்கும் உயரங்களை அடைய உதவும் இதை பின்பற்றுங்கள்” என்று பேசினார் தனுஷ்.
அதனைத் தொடர்ந்து வேல்ஸ் நிறுவனர் ஐசரி கணேஷ் பேசும்போது, “எனது கனவு படம், தனுஷ் நடிக்க உருவாகவுள்ள ‘வட சென்னை 2’ என்று கூறலாம். விரைவில் அது தொடர்பான அறிவிப்புகள் வெளியாகும். ஆகையால், இனி ‘வட சென்னை 2’ அப்டேட் என்று கேட்காதீர்கள். அதே போல் தனுஷ் நடித்துள்ள ‘கர’ திரைப்படம் ஏப்ரல் 20-ம் தேதி வெளியாகும்” என்று தெரிவித்துள்ளார்.