சிறந்த உலக இசை பிரிவில் 69-வது கிராமி விருதுக்குப் பாரதியாரின் பாடல் பரிந்துரை செய்யப்பட்டு சாதனை படைத்துள்ளது. பாடகரும் இசையமைப்பாளருமான, தேவன் ஏகாம்பரம் ‘காதலர் தினம்’ படத்தில் இடம்பெற்ற ‘ஓ மரியா’, ‘குஷி’ படத்தில் ‘மேக்கரினா..’ உள்பட ஏராளமான பாடல்களைப் பாடியுள்ளார். இவரும் பாடகி சுபிக் ஷா ரங்கராஜன் என்கிற சுஷாவும் இணைந்து பாரதியார், கிருஷ்ணரை பற்றி பாடிய ‘வருவாய் வருவாய் கண்ணா’ என்ற பாடலை கர்னாடக மற்றும் நவீன இசையுடன் இணைந்து புதிதாக உருவாக்கி வெளியிட்டிருந்தனர்.
இப்பாடல், 69-வது கிராமி விருதுக்கு, சிறந்த உலகளாவிய இசைப் படைப்புக்கான பிரிவில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. ஒரு தமிழ் பாடல் கிராமி விருதுக்குப் பரிந்துரைக்கப்படுவது இதுவே முதல்முறை. இதுபற்றி தேவன் ஏகாம்பரம் வெளியிட்டுள்ள பதிவில், “எங்களின் ‘வருவாய்’ பாடல் 69-வது கிராமிய விருதுகளில் சிறந்த உலக இசைப் பிரிவில் பரிந்துரைக்கப்பட்டிருப்பதால் மகிழ்ச்சியும் பெருமையும் பெருமிதமும் அடைகிறேன்.
கிராமிய விருதுக்குப் பரிந்துரைக்கப்படும் முதல் தமிழ்ப் பாடல் இது என்பதால் மிகவும் சிறப்பான தருணம். அதுவும் பாரதியாரின் பாடல் என்பதில் மிகுந்த மகிழ்ச்சி. இப்போது எனக்குள்ளிருக்கும் எல்லையற்ற மகிழ்ச்சியைக் கட்டுப்படுத்த முடியவில்லை! ஏஞ்சலிக் கிட்ஜோ, பாரெல் வில்லியம்ஸ், ஷகிரா மற்றும் பர்னா பாய் போன்ற உலகளாவிய ஜாம்பவான்களுடன் இணைந்து எனது முதல் கிராமிய விருது பரிந்துரையைப் பெறுவது நம்பமுடியாததாக இருக்கிறது” என்று தெரிவித்துள்ளார். இதையடுத்து அவர்களுக்கு சமூக வலைதளங்களில் வாழ்த்துகள் குவிந்து வருகின்றன.