நடிகர் விஷால்
விஷால் கதாநாயகனாக நடித்து இயக்கியுள்ள திரைப்படம் ‘மகுடம்’. இதில் துஷாரா விஜயன், அஞ்சலி, யோகி பாபு உள்பட பலர் நடித்துள்ளனர்.
ஜி.வி.பிரகாஷ் இசை அமைத்துள்ள இப்படத்தை சூப்பர் குட் பிலிம்ஸ் தயாரித்துள்ளது. இதன் செய்தியாளர்கள் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. படக்குழுவினர் கலந்துகொண்டனர். நடிகர் விஷால் பேசியதாவது: இது எனக்கு சவாலான படம். கேமராவுக்கு முன்பும் பின்பும் வேலை அதிக இருந்தது. ஆக் ஷன் சொல்லி விட்டு சில நொடிகள் கழித்தே அனைவரையும் நடிக்கச் சொன்னேன்.
எடிட்டிங் பாயின்டில் எனக்கு அது உதவியாக இருக்கும் என்பதால் அப்படிச் செய்தேன். இந்த படத்தின் கலைஞர்கள் “இவன் ஏன் நடிக்கச் சொல்லித் தர்றான், இவன் ஏன் இசையில் தலையிடுறான், இவன் ஏன் ஸ்டண்ட்டுக்கு வந்து ஐடியா சொல்றான்’ என்று யாரும் சொல்லவில்லை. இந்த ஈகோ இல்லாத கூட்டத்தால் தான் மகுடம் படம் இவ்வளவு சிறப்பாக வந்திருக்கிறது.
நடிகர்களிடம் எப்படி வேலை வாங்கவேண்டும் என்று கத்துக்கொண்டது இயக்குநர் பாலா அண்ணனிடம். துஷாரா, அஞ்சலி, ஜான் விஜய், மாயா, அஸ்வின் உள்பட எல்லா நடிகர்களும் நான் சொல்வதை ஏற்று நடித்தார்கள். இயக்குநராக வேண்டும் என்பது என் 35 வருட கனவு. ஆர்.பி சவுத்ரி சார் அறிமுகப்படுத்திய 45-வது புதுமுக இயக்குநர் நான். சூப்பர் குட் பிலிம்ஸின் 99-வது படம் இது. இந்த இடத்தில் என் குருநாதர் ஆக்ஷன் கிங் அர்ஜுன் சாருக்கு நன்றி சொல்லிக் கொள்கிறேன்.
அவர்தான் என்னை நடிக்க வச்சார். அவரிடம் இயக்குநராக நிறைய கற்றுக் கொண்டேன். ராம்கோபால் வர்மாவின் ‘உதயம்’ படம் பார்த்து நான் இயக்குநராக வேண்டும் என்று நினைச்சேன். இன்று அது நனவாகியிருக்கிறது. இந்தப் படத்திலுள்ள கிளைமாக்ஸ் காட்சி மேஜிக் செய்யும். படத்துக்கு இன்னும் சில சிக்கல்கள் இருக்கின்றன. அதைத்தாண்டி படம் வெளிவரும். இவ்வாறு விஷால் பேசினார்.