சமீபத்தில் வெளியான ‘பிளாக் கோல்டு’ படத்தில் வில்லனாக நடித்தவர் அஜித் விக்னேஷ். இவர் ஏற்கெனவே, விஜய்யின் ‘பிகில்’, இணைய தொடரான ‘தமிழ் ராக்கர்ஸ்’ உள்பட சில படங்களில் நடித்துள்ளார்.
அவர் கூறும்போது, “கல்லூரிப் பருவத்தில் இருந்தே சினிமா ஆர்வம் இருந்தது. அதற்காக மதுரையில் இருந்து சென்னைக்கு வந்தேன். ஆரம்பத்தில் சிறிய வாய்ப்புகள் கிடைத்தாலும் மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொண்டு, ஒவ்வொரு வாய்ப்பிலும் சிறப்பாகச் செயல்பட வேண்டும் என்று நினைத்தேன். குறும்படங்களில் நடிக்கத் தொடங்கினேன். பிறகு மறைந்த நடிகர் விவேக் மூலமாக ‘பிகில்’ படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.
எனது நடிப்பைப் பார்த்துப் பாராட்டி அந்த வாய்ப்பைப் பெற்றுக் கொடுத்தார். அந்தப் படத்தில் எனது நடிப்பை வெற்றிமாறன் சார் பாராட்டியதும் மிகப்பெரிய ஊக்கத்தைக் கொடுத்தது. தற்போது கதாநாயகனாக 2 திரைப்படங்களில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளேன். அந்தப் படங்கள் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் விரைவில் வெளியாகும்” என்றார்.