உறியடி விஜயகுமார் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘அறிவு’ படம் டிசம்பர் 11 அன்று வெளியாக இருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது.
இந்தத் தகவலை மூவிட்ரோன் நிறுவனம் அதன் சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளது. அதில், ‘கண்கள் பார்ப்பதைக் கடந்தும் எண்ணங்களின் உலகம் விரிகிறது. ‘அறிவு’ டிசம்பர் 11-ல் திரையரங்குகளில் வெளியாகிறது’ என்று தெரிவித்துள்ளது.
சத்யா சிவா இயக்கத்தில், உறியடி விஜய்குமார் நடித்திருக்கும் படம் ‘அறிவு’. மூவிட்ரோன் நிறுவனம் சார்பில் சாய்வினோத் ஜெயக்குமார் தயாரித்து இருக்கும் இந்தப் படத்தில் கயல் ஆனந்தி, ஐ.எம்.விஜயன், சிங்கம்புலி, தீபா சங்கர் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
டி.இமான் இசை அமைத்திருக்கும் படத்துக்கு, தில் ராஜு ஒளிப்பதிவு செய்துள்ளார். கடந்த மார்ச் மாதம் தொடங்கிய இப்படத்தின் படப்பிடிப்பு மே மாதம் நிறைவடைந்தது. தற்போது டிசம்பர் 11 அன்று படம் வெளியாக இருக்கிறது.