மார்ச் மாதத்தில் ‘அரசன்’ படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு தொடங்கும் என்று தயாரிப்பாளர் தாணு தெரிவித்துள்ளார்.
சிம்பு நடித்து வரும் ‘அரசன்’ படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு எப்போது தொடங்கும் என்பது தெரியாமல் இருந்தது. மேலும், அப்படம் தொடர்பான வதந்திகளும் இணையத்தில் உலவி வருகின்றன. இதனை பொய்யாக்கும் விதத்தில் ‘அரசன்’ தயாரிப்பாளர் தாணு பேட்டியொன்று அளித்துள்ளார்.
அப்பேட்டியில் தாணு, “3 நாட்களுக்கு முன்பு சிம்பு – வெற்றிமாறன் இருவரும் சந்தித்து பேசினார்கள். அடுத்தகட்ட படப்பிடிப்பு மார்ச் மாதத்தில் தொடங்கும். சிம்பு மற்றும் விஜய் சேதுபதி இணைந்து வரும் காட்சிகள் பிரம்மாண்டமாக இருக்கும். இப்படத்தின் வசூல் ஒரு மைல்கல்லாக இருக்கும்.
‘அரசன்’ எப்போது வெளியீடு என்பதை இயக்குநர் வெற்றிமாறன் முடிவு செய்வார். இப்படத்தில் விஜய் சேதுபதி நடிக்கவுள்ளார். அவர் நடிக்கவில்லை என்பது வதந்தியே. இப்படம் தொடர்பான அதிகாரபூர்வமான செய்திகள் எனது தரப்பில் வருபவை மட்டுமே உண்மை” என்று தெரிவித்துள்ளார் தாணு.
வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு, விஜய் சேதுபதி, சமுத்திரக்கனி, கிஷோர், ஆண்ட்ரியா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘அரசன்’. தாணு தயாரித்து வரும் இப்படத்துக்கு அனிருத் இசையமைத்து வருகிறார்.